Monday 16 March 2009

ராஜீவ் - ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்தை முறியடிப்போம்!

ராஜீவ் - ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்தை முறியடிப்போம்!

(1)

ஈழத் தமிழரின் தேசிய இனச் சிக்கல், இலங்கை அரசுக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான பிரச்சனை, ஒரு உள்நாட்டு பிரச்சனை; இப்பிரச்சனையில் இந்திய அரசு ஒரு மத்தியஸ்தர் நிலையையே வகிக்கும் என்று இந்திய அரசு கூறி வந்தது. இப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வுதான் உகந்தது என்றும் கூறி வந்தது. ஈழத் தமிழினத்தவர்க்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையையோ அல்லது அவர்கள் தனிநாடு அமைத்துக் கொள்வதையோ தான் ஏற்கவில்லை என்று கூறிக்கொண்டே அவர்களின் நண்பனாக நடித்து வந்தது. இலங்கை அரசுக்கும் ஈழத்தமிழ் போராளிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை நாடகத்தை திம்புவில் நடத்தவும் ஏற்பாடு செய்தது. அப்பேச்சுவார்த்தையின் போது ஜெயவர்த்தனே அரசு முன் வைத்த மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற ஒரு மோசடித்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி ஈழத்தமிழ் போராளிகளை நிர்ப்பந்தித்தது. தனது நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் பணியாமல் போகவே, தனது உளவு ஸ்தாபனமான 'ரா' (raw) வின் மூலம் ஈழத் தமிழ் போராளிகளின் அமைப்புகளுக்கிடையே பகைமையையும் பூசல்களையும் ஏற்படுத்தியது. அவற்றில் சில அமைப்புகளைத் தன் பிடிக்குள் கொண்டுவந்தது. இவை அனைத்தையும் ஆயுத உதவி, ஆயுதப்பயிற்சி அளிப்பதன் மூலம் சாதித்துக் கொண்டது.

எம்.ஜி.ஆரின் தமிழக அரசாங்கமோ ஈழத்தமிழ் போராளிகளை கைது செய்தும் அவர்களிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றியும் தொடர்புக் கருவிகளைக்கூட கைப்பற்றியும் கிரிமினல் கைதிகளைப் போல் அவர்களை நடத்தியும் இந்தியாவின் உதவியை நம்பி வந்தவர்களை அலைக்கழித்து அவர்களை படாதபாடு படுத்தியது. அவர்களுக்குள்ளாகவே பகைமையை மூட்டிக் கலகம் விளைவித்தது. அவர்களின் ஒற்றுமையைக் குலைத்து ஈழத் தமிழ் போராளிகள் என்றாலே தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு சலிப்பும் கசப்பும் ஏற்படத்தக்க ஒரு சூழலை மிகக் கபடத்தனமாக உருவாக்கியது.

தி.மு.கவும், தி.கவும் "இந்திய அரசே இராணுவத்தை அனுப்பு" என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்திய அரசு ஏதோ ஒரு தேசிய இன விடுதலையின் காவலன் என்ற எண்ணத்தை உருவாக்கி இந்திய அரசின் மீது ஈழத்தமிழ் போராளிகளுக்கு ஒரு மாயையை தோற்றுவித்தன.

வலது, இடது திருத்தல்வாத கட்சிகள் தங்கள் பங்கிற்கு அவர்களால் ஆனதை ஜெயவர்த்தனே அரசின் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிராக சோவியத் சமூக ஏகாதிபத்தியமும், இந்திய அரசும் ஈழத்தமிழ் மக்களுக்கு உற்ற நண்பர்கள் என்ற நம்பிக்கையை போராளிகளுக்கு ஏற்படுத்தினர்.

மத்திய மாநில அரசுகளை பெரிதும் நம்பி அவற்றின் உதவியோடு ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற முடியும் என்று இறுதிவரை எண்ணி ஏமாந்த பல ஈழத் தமிழ்ப் போராளிகள் மனம் நொந்து விடுதலை இயக்கங்களை விட்டு வெளியேறினர். இந்திய அரசின் உளவு ஸ்தபனமான 'ரா' திட்டமிட்டு இரண்டு கூட்டணிகளை உருவாக்கியது. அவற்றில் ஒன்று முகுந்தனின் "பிளாட்", செல்வத்தின் "டெலோ", பத்மநாபாவின் "ஈ.பி.ஆர்.எல்.எப்" ஆகியவை அடங்கிய கூட்டணி. மற்றொன்று ராஜனின் "பிளாட்" டக்ளஸ் தேவநாதனின் "ஈ.பி.ஆர்.எல்.எப்" அடங்கிய கூட்டணி. பிராபாகரனின் "எல்.டி.டி.இ" என்ற அமைப்பும், பாலமுமாரனின் "ஈரோஸ்" என்ற அமைப்பும், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அரசை சார்ந்திருந்தன. இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளின் செல்வாக்கிற்குள் கொண்டு வரப்பட்டன.

இந்திய அரசின் உளவு ஸ்தாபனமான "ரா" - முன் கூறப்பட்ட இரண்டு கூட்டணிகளை பிரபாகரனின் "எல்.டி.டி.இ" என்ற அமைப்புக்கு எதிராகக் செயல்பட வைத்தது. பிரபாகரனின் "எல்.டி.டி.இ" அமைப்போ குறுகிய முதலாளிய தேசிய உணர்வுடன் ஒரு பாசிச முறையில் செயல்பட்டது. ஜெயவர்த்தனே அரசின் பாசிச இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடக்கூடிய அனைத்து தேசிய விடுதலைச் சக்திகளுடன் ஐக்கியப்பட மறுத்தது. பிற அமைப்புகளை தடை செய்தது. இதன் விளைவாக ஈழத் தமிழ்நாட்டில் பிரபாகரனின் "எல்.டி.டி.இ" நீங்கலாக வேறு எந்த அமைப்பும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.

(2)
இந்திய அரசு, சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகள், ஏகாதிபத்தியவாதிகள் ஆகியோரின் இத்தனை சதிகளையும், சூழ்ச்சிகளையும் மீறி ஜெயவர்த்தனே அரசின் இராணுவத் தாக்குதலை எதிர்த்து ஈழத் தமிழரின் ஆயுதமேந்திய போராளிகளின் விடுதலைப் போராட்டம் தொடர்ந்தது. இதன் விளைவாக இலங்கை அரசு அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ நெருக்கடியில் சிக்கியது. இந்நிலையில் ஜெயவர்த்தனே அரசின் இராணுவத் தாக்குதலை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த பிரபாகரனின் எல்.டி.டி.இ அமைப்பை நிராயுதபாணியாக்கவும் ஆயுதங்களை கீழே போடச் செய்யவும் வேண்டும். நெருக்கடியிலிருந்து தனது அரசு மீளவும் வேண்டும் என்ற நிலைமை ஜெயவர்த்தனே அரசுக்கு ஏற்பட்டது. இலங்கையில் நிலவும் இத்தகைய நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது இந்திய அரசு. ரஷ்யாவில் நடந்த இந்திய கலாச்சார விழாவிற்கு ராஜீவ்காந்தி சென்றபோது, அவர் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் தலைவரான கொர்பசேவுடன் இந்தியாவின் உள்நாட்டு நிலைமைகளைப் பற்றிப் பேசினார். "இலங்கை பிரச்சனை, ஆப்கானிஸ்தான் நிலைமை, பாகிஸ்தானில் நிலவும் கவலை அளிக்கும் போக்கு" ஆகியவை பற்றியும் விவாதித்தார். இலங்கைப் பிரச்சனைக்கு ஒர் அரசியல் தீர்வுகாண இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளை ரஷ்யா புரிந்து கொண்டிருப்பதுடன் ஆதரவு அளித்து வருவதாகவும் ராஜிவ் காந்தி ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்ததும் செய்தியாளர்களிடம் கூறினார். இலங்கைப் பிரச்சனையில் ரஷ்யாவிற்கும் அவருக்கும் உள்ள "புரிதலுக்கு" இணங்க இப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணும் பொருட்டு ஒரு ஒப்பந்தம் செய்யுமாறு ஜெயவர்தனே அரசை நிர்ப்பந்தித்தார். ஒப்பந்தத்தில் கையெழுத்திட கொழும்பிற்குச் செல்வதற்கு முன்தினம் ராஜீவ் காந்தி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம், தான் ஜெயவர்த்தனேவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு "இலங்கையும் பூட்டான் நாட்டைப்போன்ற இந்திய மண்டலத்திற்குள் (Indian Orbit) வந்துவிடும் என்று கூறினார். இக்கூற்று ஒரு பகற்கனவே. ஆயினும் இது பாசிச ராஜீவ் அரசின் பேராசையையும், மேலாதிக்க உணர்வையும் காட்டுவதுடன் ஏன் இந்த அரசு தமிழீழப் போராளி அமைப்புகளின் பிரதிநிதிகளை டில்லியில் அடைத்து வைத்துவிட்டு இவ்வளவு அவசரக் கோலத்தில் ஜெயவர்த்தனே அரசுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய முனைந்தது என்பதையும் தெளிவாகப் புலப்படுத்துகின்றது.

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் விளைவாக அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ நெருக்கடியில் மூழ்கிவிட்ட இலங்கை அரசை அழிவிலிருந்து காப்பாற்ற அமெரிக்க ஏகாதிபத்தியமும் விரும்பியது. இலங்கையின் அரைக்காலனித்துவ அரசை நிலைநிறுத்தும் பொருட்டும், ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்கும் ஜெயவர்த்தனே அரசு விட்டுக் கொடுத்து ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வதை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொண்டது. ஏனெனில், இலங்கை மண்ணில் ஒரு விடுதலைப் போர் வெற்றி அடைவதைவிட, அந்நாட்டில் ஒரு அரைக்காலனிய அரசை நிலைநிறுத்துவது ஏகாதிபத்தியவாதிகளுக்கு இலாபமானது. அமெரிக்க அரசும் இத்தகைய ஒரு ஒப்பந்தத்திற்கு அனுசரணையாக இருந்தது என்பதை இந்தியத் தூதர் திரு.தீட்சித் இலங்கைப் பத்திரிகையாளரிடம் கூறிய பின்வரும் கூற்று தெளிவுபடுத்தும்: "சமாதான ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு கலகத்தை அடக்குவதற்கு ராணுவ உதவியை அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் கோரியதையும், அக்கோரிக்கையை ஏற்க அமெரிக்காவும் இசைந்தது என்பதையும் இந்தியா நன்கறியும்" எனக் கூறினார். ஈழத் தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் விளைவாக அரசியல், பொருளாதார, மற்றும் இராணுவ நெருக்கடியிலிருந்து இலங்கையின் அரைக்காலனித்துவ அரசை நிலைநிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான ஜெயவர்த்தனே அரசு, (அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒப்புதலுடன்) இந்நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையைத் தனது மண்டலத்திற்குள் கொண்டுவர எண்ணிய ராஜீவ் அரசு (சமூக ஏகாதிபத்தியதோடு ஒரு புரிதலுடன்) ஆகிய இரண்டும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள முன்வந்தன.

ஈழத்தமிழரின் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இரண்டு ஒப்பந்தங்கள்; ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தலைவர்களுக்கு இடையேயும் மற்றொன்று இந்திய அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையேயும் செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மிகத் துரோகத்தனமாக ராஜீவ்காந்தி அரசு இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த எல்.டி.டி.இ தலைவர் பிரபாகரனை, எட்டப்பர்கள் எம்.ஜி.ஆர் பண்ருட்டியார் ஆகியோரின் துணைகொண்டு, டில்லியில் காவலில் வைத்துவிட்டும், பிற போராளிகளையும்கூட புறந்தள்ளிவிட்டும், ஜெயவர்த்தனே அரசுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது.

ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்: இலங்கை வடக்கு, கிழக்கு மாநிலங்களை ஒரே இன மாகாணமாக இணைப்பதும், இலங்கை ஒரே நாடு என்ற அடிப்படையில் இந்த ஒன்றிணைந்த மாநிலத்திற்கு அதிகாரம் வழங்குவதும் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சம், எனப் புகழப்படுகிறது. புதிய சமரசத் திட்டத்தில் தமிழர் பகுதிக்கு முழு சுயாட்சி வழங்கப்படுமெனவும் கூறப்படுகின்றது. இந்தக் கபட நாடகத்தின் பின்னால், ஈழத்தமிழருக்கு சுயநிர்ணய உரிமை அல்லது தனி நாடு அமைத்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்படுகின்றது என்பது நயவஞ்சகமாக மூடி மறைக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு மாநிலங்கள் வரலாற்று அடிப்படையில் தமிழர்கள் வாழும் பகுதி என்று அங்கீகரித்து விட்டு இந்த மாநிலங்கள் இணைப்புப் பற்றி கிழக்கு மாநிலத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற விதி இணைக்கப்பட்டது ஏன் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் காந்தியைக் கேட்டார். திருமணத்திற்குச் சம்மந்தப்பட்ட இரு தரப்பினரில் ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் திருமணமாக இது இருப்பதால் மணப்பெண்ணுக்கு ஒரு ஜனநாயக ரீதியான வாய்ப்பை அளிப்பதுதான் நியாயம் என்று ஒரு முரணற்ற ஜனநாயகவாதியைப் போல் ராஜீவ்காந்தி அவருக்கு விடையளித்தார். திருமண விவகாரத்தில் விவகாரத்து செய்யும் உரிமையைப் போன்று, தேசிய இனப் பிரச்சினையில் ஒரு தேசிய இனத்திற்கு பிரிந்து போகும் உரிமை ஒரு ஜனநாயக உரிமை என்பதைக் கிழக்கு மாகாணத்தின் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளும் ராஜீவ்காந்தி, ஈழத் தமிழினத்திற்கும் இலங்கை அரசிலிருந்து பிரிந்துபோகும் உரிமை உண்டு என்பதை ஏற்க மறுப்பது ஏன்? இதுவே ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஒரு துரோகத்தனமான ஒப்பந்தம் என்பதைக் காட்டுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்படுவதாகக் கூறப்படும் முழுசுயாட்சி, மாநிலத்திற்கு அதிகாரம், ஈழத் தமிழினத்தவரை தேசிய இன ஒடுக்குமுறைக்கு ஆளாக்குவதிலிருந்து மீட்காது. நாம் முன்பு சொன்னதையே மீண்டும் ஒரு முறை எடுத்துக் கூறுவோம். "ஈழத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது பேரம் பேசக்கூடிய ஒன்றல்ல; ஏனெனில் சுயாட்சியோ அல்லது வேறு எந்தவிதமான அதிகாரத்தைக் கீழ் மட்டங்களுக்குப் பிரித்தளிக்கும் முறையோ, அந்நாட்டை ஆளுகின்ற வர்க்கங்களின் அதிகாரத்தின் அஸ்திவாரங்களை சிதைக்காமல் அப்படியே வைத்துக்கொள்வதும்; அது பழுதுபடாமல் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு சில்லறைச் சலுகைகளை வழங்கும் முறையேயாகும். இது ஓர் சீர்திருத்த முறையேயாகும். இச்சீர்திருத்த முறையானது எல்லா வடிவங்களிலும் நிலவும் தேசிய ஒடுக்கு முறையை ஒழித்துக்கட்டுவதல்ல. ஒரு சுயாட்சியை பெற்றிருக்கும் ஓர் இனம், ஆளுகின்ற இனத்துடன் சம உரிமையைப் பெற்றுவிட முடியாது. ஒடுக்கும் இனமும், ஒடுக்கப்பட்ட இனமும் சம உரிமை பெறவேண்டுமானால் அதை நிலைநாட்டுவதற்கான ஒரு புரட்சிகரமான முறை ஒடுக்கப்பட்ட தேசிய இனம் பிரிந்து செல்லும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையைப் பெறுவதேயாகும். இம்முறையினால்தான் இனஒடுக்கலுக்கு முடிவு கட்ட முடியும், இன விடுதலையும் வழங்கமுடியும். எனவேதான் ஈழத் தமிழருக்கு பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது பேரம் பேசுவதற்குரிய ஒன்றல்ல என்கிறோம்".
(அரசியல் தீர்மானம் ஈழத் தமிழீழத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி! ஈழத் தமிழ் விடுதலைப் போராளிகளின் முதுகில் குத்தாதே!!, தமிழ் மாநிலக் குழு, இ.க.க (மா.லெ) (ம.யு) )

ஆயினும் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஈழ தமிழினத்தவர்க்கு சுயநிர்ணய உரிமையை மறுப்பதுடன், சுயநிர்ணய உரிமைக்காக (தனிநாடு அமைப்பதற்காக) போராடும் போராளிகள் தங்களின் கரங்களிலுள்ள ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர்கள் அவ்வாறு ஒப்படைக்க மறுப்பாராயின் இந்தியப்படையைக் கொண்டு அவர்களிடமிருந்து பறிப்பதற்கும் அவர்களை ஒடுக்குவதற்கும் உத்தரவாதம் செய்கிறது. எனவே இந்த ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கையின் தேசிய இனச்சிக்கலுக்கு ஒரு அரசியல் தீர்வு ஆகாது. அதற்கு மாறாக ஈழத்தமிழினத்தாரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நசுக்குவதற்காகவும், அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ நெருக்கடியில் மூழ்கியிருக்கும் இலங்கை அரசை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்கி அந்நாட்டின் அரைக்காலனித்துவ அரசை நிலைநிறுத்துவதற்காகவும், இந்திய - இலங்கை அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவ ஒப்பந்தமும் - ஒரு கூட்டு இராணுவ நடவடிக்கையும் ஆகும். எனவே ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டிய ஒன்றாகும்!

(3)
தனிநாடு அமைத்துக் கொள்வதே ஈழத் தமிழ் மக்கள் இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை அடைவதற்கு உகந்த வழியாக இருக்கின்றது. ஆயினும் இலங்கை அரசு தேசிய இனச்சிக்கலை தீர்த்து இரு இனங்களும் ஒரே அரசு அமைப்பிற்குள் வாழ வகை செய்வதாக கூறுகின்றது. அவ்வாறு இரு இனங்களும் ஒரே அரசு அமைப்பிற்குள் வாழ வேண்டுமாயின் ஈழத்தமிழருக்கு பிர்ந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை வழங்குவதன் அடிப்படையில் இலங்கையின் தேசிய இனச்சிக்கல் தீர்க்கப்பட வேண்டும், என்பது கோட்பாடு ரீதியில் சரியான ஒன்றாகும். இதன் அடிப்படையில் அரசியல் செயல்தந்திரங்கள் வகுப்பதும் சரியான ஒன்றாகும். ஏனெனில், இத்தகைய செயல்தந்திரம் இலங்கை அரசின் உண்மையான உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவதற்கும், சுயநிர்ணய உரிமையை மறுத்துவிட்டு தொடர்ந்து பாசிசமுறையில் ஈழத்தமிழினத்தை ஓர் தேசிய இனம் என்கிற முறையில் அழிக்கும் அரசு அமைப்பிற்குள் வாழ முடியாது என்பதை அனைத்து மக்களையும் உணரச்செய்து தனிநாடு அமைத்துக் கொள்வதின் அவசியத்தை ஏற்கச் செய்ய முடியும்.

அத்துடன் சிங்கள தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் தேசிய இனச்சிக்களுக்கு ஒரு ஜனநாயக ரீதியான தீர்வை ஆதரிக்கின்றார்களா என்பதை சோதித்துப் பார்க்கவும் முடியும். சிங்கள தேசிய இனத்தை சேர்ந்த மக்கள் இந்த ஜனநாயக ரீதியான தீர்வுக்காக போரிட முன்வந்தால் இருவரும் சேர்ந்து ஒரு மக்கள் குடியசை அமைக்க முடியும்.

இன்றுள்ள ஜனநாயக விரோதமான அரைக்காலனித்துவ (அரை நிலப்பிரபுத்துவ) அரசுக்கு மாறாக ஒரு மக்கள் குடியரசு அமைக்கப்படுமாயின், ஈழத்தமிழர் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையைப் பெற்று தேசிய இன ஒடுக்கு முறையிலிருந்து விடுதலையை அடைய முடியும். ஈழத்தமிழருக்கு வேண்டியது வெறும் பிரிவினை அல்ல. அவர்களுக்குத் தேவை ஒரு விடுதலை பெற்ற மக்கள் குடியரசு. ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசு மறுத்துவிட்டு தொடர்ந்து அவர்களை ஒடுக்குமானாலோ, சிங்கள தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டு இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகும் நிலையை மேற்கொண்டாலோ, அல்லது பெரும் தேசிய வெறிச் செயலில் ஈடுபட்டாலோ, ஈழத்தமிழ் மக்கள் தனிநாடு ஒன்றை அமைத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் தீர்மானமாகப் பங்கு கொள்வார்கள்.

ஆகையால் ஈழத் தமிழ் விடுதலை இயக்கத்தினர் தனிநாடு கோரிக்கையை கைவிடாமல் இலங்கை வாழ் இரு இனங்களும் ஒரே அரசு அமைப்பிற்குள் வாழவேண்டுமாயின், ஈழ தமிழினத்திற்கு சுயநிர்ணய உரிமை வழங்குவதின் அடிப்படையில், இலங்கையின் தேசிய இனச்சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் என்பதின் அடிப்படையில் அரசியல் செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்வது சரியான ஒன்றாகும்.

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இந்த ஜனநாயகத் தீர்வை மறுத்துவிட்டு ஈழத்தமிழினத்தை இலங்கையில் வாழும் ஒரு தேசிய இனம் என்பதை மட்டும் அங்கீகரிக்கின்றது. ஈழத்தமிழினம் ஒரு தேசிய இனம் என்று அங்கீகரிப்பதைக்கூடச் சகித்துக் கொள்ள முடியாமல், அவ்வாறு அங்கீகரித்ததற்காக இவ்வொப்பந்தத்தை எதிர்த்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான திருமதி பண்டாரநாயகாவின் கட்சியும், புத்தகுருமார்களும், நடத்தும் கலகங்களும் தெற்கில் வாழும் சிங்களத்தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும் கலகங்களும் ஈழத் தமிழர்களின் தனிநாடு (முழக்கம்) கோரிக்கை இன்னும் பொருந்தக்கூடியது என எடுத்துக் காட்டுகின்றன.

(4)
தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் ஈழத்தமிழ் மக்கள் அணிதிரண்டிருந்தும், ஆயிரமாயிரம் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடத் தயாராக இருந்திருந்தும், ஏராளமான நங்கைகள் நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொள்ள முன்வந்திருந்தும் எண்ணற்ற போராளிகள் உயிரைத் துச்சமென மதித்துப் போரில் ஈடுபட்டிருப்பினும், ஒரு பலமான பின்புலம் வாய்த்திருத்தும், பகைவர்களுக்கிடையில் முரண்பாடு பயன்படுத்தக் கூடியதாயிருந்தும், அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கித் தவிக்கும் நிலையிலும், சுருங்கக்கூறின் அணமைக்கால வரலாறில் காண முடியாத அரிய வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் இன்று ஈழத் தமிழ் போராளிகள் தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது ஏன்?

இலங்கை ஆளும் வர்க்கத்தினருக்கும், இந்திய ஆளும் வர்க்கத்தினருக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணி ஈழத்தமிழ் போராளிகள் இந்திய ஆளும் வர்க்கத்தினரைச் சார்ந்து நின்றனர். இந்தியாவின் மத்திய அரசையும், தமிழ் மாநில அரசையும் சாந்து நின்றனர்.முகுந்தனின் "பிளாட்", செல்வத்தின் (சிறி சபாரத்தினம்) "டெலோ", பத்மநாபாவின் "ஈ.பி.ஆர்.எல்.எல்." ஆகிய அமைப்புகள் மத்திய அரசைச்சார்ந்து நின்றன என்றால் பிரபாகரனின் "எல்.டி.டி.இ" பாலகுமாரனின் "ஈரோஸ்" ஆகிய அமைப்புகள் தமிழக அரசின் முதல்வர் எம்.ஜி.ஆரை நம்பிச் செயல்பட்டது.

இந்தியாவிலுள்ள தேசிய விடுதலை சக்திகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் சார்ந்து நிற்பதற்கு மாறாக, மத்திய மாநில அரசுகளைச் சார்ந்து நின்றனர். அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையைப் போலாயிற்று.அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலுள்ள முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணியதாலோ அல்லது ரஷ்ய அரசு ஒரு சமுக ஏகாதிபத்திய அரசு என்பதைப் பார்க்கத் தவறியதாலோ ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தை தனது நண்பன் என கருதினர். திருத்தல்வாத கட்சிகளை நம்பினர். பிரபாகரனின் "எல்.டி.டி.இ" யைத்தவிர மற்ற அமைப்புகள் இத்தவறான சிந்தனைக்கு வெவ்வேறு அளவுகளில் ஆட்பட்டிருந்தன.

தனிநாட்டிற்காக போராடுவதாலேயே சிங்கள மக்கள் அனைவரையும் பகைவர்களாக பார்ப்பது கூடாது; மாறாக, தங்கள் கோரிக்கையின் நியாயத்தை எடுத்துக் கூறி சிங்கள மக்களையும் கூட ஆதரவாக வென்றெடுப்பதுடன் கூடவே ஒரு விடுதலை இயக்கம் என்ற முறையில் சிங்கள தேசிய இனத்தை சேர்ந்த பாட்டாளிகளின் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது ஜெயவர்த்தனே பாசிச அரசின் ஒடுக்குமுறைகளைக் கண்டிப்பது ஒரு ஜனநாயக கடமையாகும். ஆயினும் போராளிகளுக்கு இந்தப் பார்வை இல்லாததுடன் சிலர் மேலும் தாண்டிச்சென்று குறுந்தேசிய வெறியில் சிங்கள மக்களையே தாக்கும் நிலையும் எடுத்தனர்.

ஈழத் தமிழ் போராளி அமைப்புகள் தேசிய இன விடுதலை அம்சத்தை மட்டுமே கருத்தில் கொண்டது, ஜனநாயகத்திற்கான (ஜனநாயக உரிமைகளை) போராட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. விடுதலை பெற்ற நாட்டில் கட்டவேண்டிய மாற்று ஜனநாயக அரசமைப்பு பற்றிய கண்ணோட்டமில்லை. எல்.டி.டி.இ-யைப் பொறுத்தவரை தனது செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் நிலவிக் கொண்டிருந்த அதே அரசு கட்டமைப்பைக் கொண்டும், அதே ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தும் தனது படை பலத்தைக் கொண்டும் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தினார்கள்.

ஈழத் தமிழ்நாட்டு மக்களை பல்வேறு அமைப்புகளில் திரட்டியும், அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட மக்களின் வலிமையைச் சார்ந்த நிற்பதற்கும் மாறாக வெறும் இராணுவ பலத்தை மட்டுமே (ஆயுதக் குழுக்களின் பலத்தை மட்டுமே) சார்ந்து நின்றனர். விடுதலை போருக்கு மக்களை அரசியல் ரீதியில் திரட்டுதல், அமைப்பாக்குதல் ஆயுதம் தரிக்கச் செய்தல் ஆகிய பணிகள் புறக்கணிக்கப்பட்டன. சுருங்கக்கூறின் மக்கள் திரள் பாதை கடைப் பிடிக்கப்படவில்லை.

ஈழப்போராளிகளின் அமைப்புகள், ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் தமது அமைப்புகளைக் கட்டியமைக்க வேண்டும் என்பதைப் புறக்கணித்ததுடன் தமது அமைப்புக்கும், மக்களுக்கும் இடையிலும் தமது அமைப்பிற்கும் பிற விடுதலை இயக்க அமைப்புகளுக்கு இடையிலும் மேற்கொள்ள வேண்டிய உறவை ஜனநாயக அடிப்படையில் அமைத்துக் கொள்ளவில்லை.பல்வேறு போராளி அமைப்புகளுக்கிடையில் தோன்றிய கருத்து வேற்றுமைகளை, அரசியல், தத்துவப் போராட்டங்கள் மூலம் தீர்க்க வேண்டியவற்றை, இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு கண்டனர்.

நவீன சமுதாயத்தில் எந்தவொரு வர்க்கமும் தனது அரசியல் கட்சியின் மூலமாகவே தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்கிறது என்பதைக் கிரகித்துக் கொள்ளவில்லை. தேசிய விடுதலைப் புரட்சியை நிறைவேற்றுவதற்கும் கூட ஒரு முரணற்ற ஜனநாயகத்திற்காக போராடும் அரசியல் கட்சி ஒன்று வேண்டும் என்பதை உணரவில்லை.

திம்பு பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் நாம் தோழமையுடன் முன்வைத்த பின்வரும் கருத்துக்களை அவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்;

 "அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலுள்ள முரண்பாட்டையும், இலங்கை ஆளும் வர்க்கத்திற்கும், இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாட்டையும் பயன்படுத்துவது என்ற பெயரால் அவர்களைச் சார்ந்து நிற்பதும், அவர்களுடன் அணி சேருவதும், சரணாகதிப் பாதையில் போய் முடியும் என்பதையே சமீபகாலச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. தனது சொந்த நாட்டு மக்களைச் சார்ந்து நின்று போரிட்டால் ஒரு பெரிய நாட்டை சிறிய நாடு வெல்ல முடியும்; ஒரு பேரின ஒடுக்குமுறையை எதிர்த்து ஒரு சிறிய இனம் வெல்ல முடியும் என்பதையும் அண்மைக்கால வரலாறு நிரூபித்துள்ளது." "எனவே தமிழீழ விடுதலைப் போரில வெற்றிபெற ஈழத்தமிழ்ப் போராளிகள், சொந்த தேசிய இனத்து தொழிலாளர், உழவர், அறிவாளிப் பிரிவினரையும், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களையும், வர்க்கங்களையும் சார்ந்து நிற்க வேண்டும். தமிழ் தேசியம் பேசி மக்களைத் திரட்டிக் கொண்டு ஆளும் வர்க்கங்களோடு சமரசம் செய்து கொள்வதன் மூலம் விடுதலைப் போரைச் சீர் குலைக்க விரும்பும், தமிழீழ தரகு முதலாளிகளின் அரசியல் பிரதிநிதியான அமிர்தலிங்கம் போன்ற சமரசச் சக்திகளைத் தனிமைப்படுத்தி, அவர்கள் பின் உள்ள மக்களை வென்றெடுத்து எதிரிக்கெதிராக நிறுத்த வேண்டும். ஜெயவர்த்தனேயின் பாசிச ஆட்சிமுறையால் ஒடுக்கு முறைக்குள்ளான சிங்கள இனத்திலுள்ள பாட்டாளிகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் வென்றெடுத்து அணி சேர்த்துக்கொள்ள வேண்டும். முதலாளி நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்க இயக்கங்களையும், ஒடுக்கப்படும் நாடுகளிலுள்ள தேசவிடுதலைச் சக்திகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் சார்ந்து நிற்கவேண்டும். அமெரிக்க, ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடானாலும், இலங்கை ஆளும் வர்க்கத்திற்கும் இந்தியா ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடானாலும்; அவர்களிடமிருந்து கிடைக்கும் உதவி தற்காலிகமானது, நிலையானது அல்ல; சார்ந்து நிற்கக் கூடியது அல்ல என்று உணர்ந்து கொண்டு, சொந்தநாட்டு மக்களைச் சார்ந்து ஊன்றி நின்று போரிட்டால் வெற்றி பெறுவது என்பது நிச்சயமான ஒன்று....."
(அரசியல் தீர்மானம் - ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி! ஈழத் தமிழ் விடுதலைப் போராளிகளின் முதுகில் குத்தாதே!)

தொகுத்துக் கூறுவோமானால், ஈழத்தமிழ் போராளிகள் தமது நாட்டு தேசிய இன விடுதலைப் புரட்சியை நிறைவேற்றுவதற்கான ஒரு திட்டத்தை வகுத்து கொள்ளவில்லை. அத்திட்டத்தை வழிகாட்டியாக கொண்டும், சர்வதேசிய, தேசிய நிலைமைகளைப் பற்றி ஒரு சரியான மதிப்பீட்டின் அடிப்படையிலும், கோட்பாடு ரீதியில் அமைந்த அரசியல், இராணுவப் போர்தந்திரங்களை வகுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவாக தேசிய இன விடுதலைப் புரட்சியின் நேர்முக, மறைமுக சேமிப்பு சக்திகளை தவறாக கையாணடனர். இதற்கு காரணம், நவீன சமுதாயத்தின் முன்னேறிய வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் தத்துவத்தை - மார்க்சிய - லெனினிய - மாசேதுங் சிந்தனையைத் - தமது சித்தத்திற்கும், செயலுக்கும் வழிகாட்டியாக அவர்கள் கொள்ளவில்லை. அதற்கு மாறாக குட்டிமுதலாளிய சிந்தனையில் தமது திட்டங்களையும், செயல்களையும் வகுத்துக் கொண்டார்கள். சிந்தனைத் துறையில் குட்டி முதலாளியத்திற்கு முதலாளியத்தினின்று தனித்து ஒரு தத்துவம் கிடையாது. ஆகவே ஒரு ஆளும் வர்க்கப் பிரிவை எதிர்த்து மற்றொரு ஆளும் வர்க்கப் பிரிவை, இலங்கை ஆளும் வர்க்கத்தை எதிர்த்து இந்திய ஆளும் வர்க்கங்களைச் சார்ந்து நின்றார்கள். மக்களிடையிலும் இலங்கை அரசை எதிர்த்து இந்திய அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். ஆகையால் இந்திய அரசின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இருப்பினும் இலங்கையில் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒரு புதிய கட்டத்திற்கு,ஒரு உயர்ந்த கட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். சிந்தனைத் துறையிலும், புரட்சிகர நடைமுறையிலும் புதிய புரிதல்களையும், அனுபவத்தையும், அத்தேசிய இனத்திற்கு ஏற்படுதியிருக்கிறார்கள். இன்றுவரை நடந்த தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் படிப்பினைகளைத் தொகுத்து மக்களிடையில் பரப்பினால் முன்னோடிச் சக்திகள் ஒரு சரியான திட்டத்தின் அடிப்படையில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும். மேலும் அவை அடுத்துவரும் பேரெழுச்சியின்போது பெரும் சாதனைகளை ஏற்படுத்தும்.

பாட்டாளி வர்க்க கட்சி ஒன்றில்லாமல், அதன் தலமையின் கீழ் அன்றி இன்றைய சகாப்தத்தில் ஒரு தேசிய விடுதலைப் புரட்சி ஏகாதிபத்தியத்தையும், அதனுடைய அடிவருடிகளையும் எதிர்த்து வெல்ல முடியாது என்பதை ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்போராட்டம் மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கின்றது.

இவ்வுண்மையை ஏராளமான ஈழத்தமிழ் போராளிகள் உணரத் துவங்கியுள்ளனர். சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தையும், சீன வகைப்பட்ட டெங் திரிபுவாதத்தையும் பின்பற்றுகின்ற போலி கம்யூனிஸ்டுகளின் உண்மை சொரூபத்தையும் தங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு அவை ஆற்றிய பங்கையும் அவர்கள் கண்டு கொண்டு விட்டார்கள். அவர்களுக்கு உடனடியாக தேவைப்படுவது மார்க்சிய - லெனினிய - மாசேதுங் சிந்தனையை தனது வழிகாட்டியாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, ஏனெனில் ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் புரட்சியும் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியேயாகும்.

(5)
ராஜீவ் - ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்தை இந்திய - இலங்கை அரசுகள், அமெரிக்க, ரஷ்ய சமூக ஏகாதிபத்தியங்களின் ஒப்புதலுடன் விரைந்து வெறித்தனமாக செயல்படுத்த துவங்கி விட்டன. ஈழப் போராளிகளை நிராயுதபாணிகளாக்கிவிட்டு, ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போரை நசுக்கும் பொருட்டும் நெருக்கடியில் தவிக்கும் இலங்கை அரசை நிலை நிறுத்துவதற்கெனவும் இவ்வொப்பந்தத்தின்படி இந்தியப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் போர்க்கள கொடுமையிலிருந்து சுடுகாட்டு அமைதிக்குத் தள்ளப்பட்டு, இலங்கை ராணுவத்திற்குப் பதிலாக இந்திய ராணுவத்திற்கு பதில் சொல்லவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதுகாறும் ஈழத்தமிழரை எதிர்த்துப் போரை நடத்திக் கொண்டிருந்த இலங்கை இராணுவம் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு சிங்கள மக்களை வேட்டையாட அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தியா- இலங்கைக்கு ராணுவத்தைக் கொண்டு செல்வது இது முதல் முறையல்ல. 1972ல் சிங்கள இன இளைஞர்களிடமிருந்து அரசைக் காப்பாற்ற இந்தியா படை அனுப்பி போராட்டத்தை நசுக்கியது. வங்க தேசம், நேபாளம் உட்பட பல தெற்காசிய நாடுகளின் பிற்போக்கு ஆட்சிமுறைக்கு ஆதரவாகவும், தனது விஸ்தரிப்புவாத நோக்கிலும் தலையீடுகள் நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் இந்திய மக்களையும் பெருந்தேசிய வெறியில் மூழ்கடிக்க முனைகிறது.

இவ்வாறு தெற்காசியாவின் பிற்போக்குக் கோட்டையாக இந்தியா விளங்குகின்ற நிலையில், தி.க., தி.மு.க போன்ற கட்சிகள் இந்திய ராணுவம் இலங்கை சென்று ஈழத்தமிழர்களை காப்பாற்றும் என்ற மாயையைப் பரப்பி இருந்த நிலையில், இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் பாட்டாளிவர்க்க இயக்கம் பலவீனமாக இருந்ததாலும் ஈழ விடுதலைப் போரை இந்தியா படைபலம் கொண்டு நசுக்குவதை தடுத்து நிறுத்த இயலவில்லை.

எனவே ராஜீவ் - ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்தை முறியடிப்பதும், இந்திய படையை இலங்கையிலிருந்து திரும்பப் பெறச் செய்வதும் இன்று இந்தியப் பாட்டாளி வர்க்க இயக்கங்களினதும் ஜனநாயக இயக்கங்களினதும் ஒரு தவிர்க்க முடியாத ஜனநாயக கடமையாக இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்த வரையில் இதுகாறும் ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலைப் போரின் பின்புலமாக செயல்பட்ட நிலையிலிருந்து, தனது ஆட்சியாளர்களின் அநியாயமான, நயவஞ்சகமான, ஆதிக்க வெறிபிடித்தச் செயல்களை முறியடிக்க வேண்டியது அதன் முக்கியமான கடமையாகி விட்டது. இக்கடமையைச் செய்யத் தவறுமாயின் அது மிகக் கேவலமான பெருந்தேசிய வெறியர்களால் இழிவு படுத்தப்படும் பிற இந்திய மக்களுடன் ஒரு கொடுமையான பாசிச ஆட்சி முறையினால் ஒடுக்கப்படும்.

எனவே பின்வரும் முழக்கங்களை தமிழக மக்களிடையில் கொண்டு செல்வது பாட்டாளி வர்க்க இயக்கத்தினரின் கடமையாகும்.

ராஜீவ் - ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தம் ஒழிக!

ஆயுதம் ஏந்துவது ஈழமக்களின் அரசியல் உரிமை!

மேலாதிக்க பேராசை பிடித்த ராஜீவ் அரசே!

இந்திய படைகளை இலங்கையிலிருந்து திரும்பபெறு!

ஈழத்தமிழர்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் வெல்க!!!

ஆகஸ்ட் 87.

No comments:

Post a Comment