Wednesday 19 January 2011

ஊழலை ஒழிக்க – மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்கப் போராடுவோம்!

சோனியா - மன்மோகன் - கருணா கும்பலின் ஊழல் ஆட்சி தொடர வேண்டுமா...?
சோனியா, மன்மோகன், கருணா, டாட்டா கும்பலுக்கு மாற்று அத்வானி, அம்பானி, ஜெயா கும்பல் ஆகுமா?

இல்லை,
ஊழலை ஒழிக்க – மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்கப் போராடுவோம்!
=======================
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
மன்மோகன் கும்பலின் தலைமையிலான மத்திய ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், ஊழலில் வரலாறு காணாத சாதனைகளை படைத்து வருகிறது. இரண்டாம் தலைமுறை (2G) அலைக்கற்றை ஊழலில் ரூ. 1,76,000 கோடி, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்தியதில் ரூ. 70,000 கோடி. ஐ.பி.எல். கிரிகெட் போட்டி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், அரசியல் வாதிகள் நடத்திய ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் என பல இலட்சம் கோடிகளுக்கான ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
திமுக-வைச் சார்ந்த முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியதில் முறைகேடுகள் புரிந்து, நாட்டின் கஜானாவிற்கு வரவேண்டிய ரூ. 1,76,000 கோடியை மடைமாற்றி ஊழல் புரிந்துள்ளார் என மத்திய கணக்குத் தணிக்கைக்குழு (CAG) அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏலமுறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்றும், இத்துறையில் அனுபவமில்லாத ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றதன் மூலமும் இம்மாபெரும் ஊழல்கள் நடந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அண்மையில் மன்மோகன் கும்பலின் ஆட்சியின் கீழ் நடந்துள்ள அனைத்து ஊழல்களும் இது போன்ற மோசடிகள் மூலமே நடந்துள்ளன. சிங் என்றால் கிங் என்று கூறினார்கள். ஆமாம் “ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் கிங்”தான் இந்த மன்மோகன் சிங்!

நாடாளுமன்ற போலி ஜனநாயகமும், புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளும்தான் இத்தகைய மாபெரும் ஊழல்களுக்குக் காரணமாகவும், கவசமாகவும் இருக்கின்றன. ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டுத்தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கும்பல்களும், அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், கார்பரேட் நிறுவனங்களின் அரசியல் தரகர்களும் மக்களின் வரிப்பணத்தை பல இலட்சம் கோடிகள் சூறையாடுவதற்கு தனியார்மயக் கொள்கைகளே வழிவகுத்துக் கொடுத்துள்ளன. சோனியா - மன்மோகன் - கருணாநிதி ஆகியோரின் ஆதரவும், ஆசியும் பங்கும் இல்லாமல் இம்மாபெரும் ஊழல்கள் நடந்திருக்கவே முடியாது.

பா.ஜ. கட்சி, இடது வலது போலிக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட நாடாளுமன்றவாத எதிர்க்கட்சிகள், இம்மாபெரும் ஊழல்களை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு (JPC) விசாரணைத் தேவை என்று கூறி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முடக்கின. சோனியா, மன்மோகன் கும்பலோ நாடாளுமன்றக் கணக்குக் குழு விசாரணை, சி.பி.ஐ (CBI) விசாரணை என்று கூறி எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. கடந்த 60 ஆண்டுகால அனுபவத்தை எடுத்துப்பார்த்தால் சி.பி.ஐ (CBI) விசாரணையோ, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைகளோ ஊழல்களை கண்டுபிடித்ததாகவோ, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாகவோ வரலாறே இல்லை. முந்தரா ஊழல் முதல் போபர்ஸ் மற்றும் பங்குசந்தை ஊழல்கள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஊழல் நடத்துவது ஆளும் வர்க்கங்களின் அடிப்படை உரிமை என்று நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சியினர் சீர்குலைப்பதாக நிதி அமைச்சர் பிரணப்முகர்ஜி கூக்குரலிடுகிறார்.

ஜனநாயகக் குடியரசு என்பது ஊழல் சாம்ராஜ்ஜியமே!
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ‘மாண்பு’ என்னவென்று நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் வெட்டவெளிச்சமாக்கி விட்டது. மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்தும் ஆட்சி அல்ல நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி என்பதும்; நாட்டின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை தேர்ந்தெடுப்பது, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை நிர்ணயம் செய்வது பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகு முதலாளித்துவ கும்பல்களே என்பதும் நீரா ராடியா - டாட்டா - ராசா-கனிமொழி உரையாடல்கள் நிரூபித்துவிட்டது. இந்திய நாடாளுமன்றம் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கூடாரமே என்பது மீண்டும், மீண்டும் நிரூபணமாகிவருகிறது.

ஜனநாயகக் குடியரசு எவ்வளவு போலியானது என்பதையும், ஜனநாயகக் குடியரசு எவ்வாறு முதலாளித்துவ வர்க்கங்களின் சர்வாதிகார அரசாக திகழ்கிறது என்பதையும், மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ் கூறியதை எடுத்துக்காட்டி தோழர் லெனின் பின்வருமாறு கூறுகிறார்.

ஜனநாயகக் குடியரசில் “செல்வமானது மறைமுகமாய், ஆனால் முன்னிலும் திடமாய் பங்காற்றுகிறது” முதலாவதாக “நேரடியாக அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதன் மூலம்” (அமெரிக்கா), இரண்டாவதாக “அரசாங்கத்தை பங்கு மார்க்கெட்டுடன் கூட்டுச் சேரச்செய்வதன் மூலம்” (பிரான்ஸ், அமெரிக்கா) அதிகாரம் செலுத்துகிறது.

மேலும் ஏகாதிபத்திய சகாப்தத்தில், அதே கோட்பாடு எந்த அளவிற்கு தீவிரமடைந்துள்ளது என்பதையும், ஜனநாயகக் குடியரசின் யோக்கியதைப் பற்றியும் லெனின் தொடர்ந்து கூறுவது ...
எல்லா வகையான ஜனநாயகக் குடியரசுகளிலும் தற்போது ஏகாதிபத்தியமும் வங்கிகளுடைய ஆதிக்கமும் செல்வத்தின் வரம்பில்லா அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும், செயல்படுத்துவதற்குமான இவ்விரு வழிகளையும் தனிப்பெருங் கலையாய் “வளரச் செய்துவிட்டன” என்பதுதான்...

ஜனநாயகக் குடியரசில் “செல்வத்தின்” சக்ராதிபத்தியம் மேலும் உறுதியாகிவிடுவதன் காரணம் என்னவெனில் அரசியல் பொறியமைவின் தனிப்பட்ட முறைகளையோ, முதலாளித்துவத்தின் மோசமான அரசியல் கவசத்தையோ அது ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை என்பதுதான். ஜனநாயகக் குடியரசுதான் முதலாளித்துவத்திற்கு மிகச் சிறந்த அரசியல் கவசமாகும். ஆகவே மூலதனம் இக்கவசத்தைப் பெற்றுக் கொண்டதும், அது முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசின் ஆட்சிகளிலோ, நிறுவனங்களிலோ, கட்சிகளிலோ ஏற்படும் “எந்த” மாற்றத்தாலும் அசைக்கமுடியாத திடமாகவும் உறுதியாகவும் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்கிறது என்றும் கூறுகிறார்.

லெனினினுடைய கூற்றுப்படி அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் ஏகாதிபத்தியவாதிகளும், உள்நாட்டு ஆளும் வர்க்கங்களும் லஞ்ச ஊழல்கள் மூலமும் பங்கு சந்தை மூலமும் மறைமுகமாய் அரசு இயந்திரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் இயக்கி வந்தன. ஆனால் 1990களுக்குப் பிறகு பன்னாட்டுக் கம்பெனிகளும், டாட்டா, பிர்லா, அம்பானி, மிட்டல் போன்ற உள்நாட்டு ஆளும் கும்பலும் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதன் மூலம், நாடாளுமன்ற அரசியல் கட்சிகளில் தங்கள் ஆட்களை நுழைப்பதன் மூலமும், நேரடியாக அரசியலில் தலையிடுவதும் வெளிப்படையாகவே நடக்கிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் குடும்பங்களே பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறியும் வருகிறது. இந்தக் கும்பல்கள் அரசாங்க சொத்துக்களை அபகரிப்பதிலும், லஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதும், பல லட்சம் கோடிகளை சூறையாடுவதும் நியாயப்படுத்துப்பட்டுவருகிறது.

எனவே நாடாளுமன்ற எதிர்க்கட்சியான பா.ஜ.க. மற்றும் இடது வலது போலிக் கம்யூனிஸ்டுகள் கூறுவது போல ஊழல் செய்த ஒரு சில நபர்களை தண்டித்து விடுவதாலோ, சட்ட திட்டங்களில் சில்லறைச் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதாலோ லஞ்ச ஊழலை ஒழித்துவிட முடியாது.

நாடாளுமன்ற ஜனநாயகக் குடியரசே ஊழலின் உறைவிடமாகத் திகழ்கிறது.ஆளும் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கும்பல்களே ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கின்றன. எனவே, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறைக்கு முடிவு கட்டி சோவியத் வடிவலான மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைப்பது ஒன்றே ஊழலை ஒழிப்பதற்கும், நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்குமான ஒரே வழியாகும்.

தொழிலாளர்கள் விவசாயிகள் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் குடியரசில் தேர்ந்தெடுக்கவும், திருப்பி அழைப்பதற்கும் மக்களுக்கு அதிகாரம்; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே சட்டத்தை இயற்ற மட்டுமல்ல அதை செயல்படுத்தவும் கண்காணிப்பதற்குமான அதிகாரம்; காவல்துறை, நீதிமன்றம், நிர்வாக அமைப்புகள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆள்வது; ஆளும் வர்க்கங்களின் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்குவது -அடங்கிய - (ப-ர் ) சோவியத் வடிவலான மக்கள் ஜனநாயக குடியரசு ஒன்றுதான் ஊழலை ஒழிப்பதற்கான உண்மையான மாற்றாக அமையும்.

தனியார்மயமும்.... மாபெரும் ஊழல்களும்
நாட்டில் நடந்து கொண்டிருக்கும் வரலாறு காணாத மாபெரும் ஊழல்களும், லஞ்ச ஊழல்கள் மூலம் பெற்ற பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைப்பதும் தனியார்மயம், தாராளமயம் செயல்படுத்தப்பட்ட கடந்த இருபது ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
உற்பத்தியில் அரசின் கட்டுப்பாடுகளை அகற்றுவது, உரிமம் மற்றும் கோட்டா முறைகளை ஒழித்துவிட்டால் நாட்டில் லஞ்ச ஊழல் குறையும் என புதிய தாராளக் கொள்கைகளை ஆதரிப்போர் வாதிட்டனர். ஆனால் இக்கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு அரசாங்கத்தில் பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் கை ஓங்கி லஞ்ச ஊழல் பெருகிவிட்டது. உற்பத்தியில் அரசின் தலையிடாக் கொள்கையை செயல்படுத்துகின்றோம் என்றவர்கள், முதலாளிகளைப் பாதுகாப்பதற்காக அரசின் கொள்கையை மாற்றி அவர்களுக்கு சாதகமாக தலையிடும் கொள்கைகளை செயல்படுத்துகின்றனர். பொருளாதார நெருக்கடியிலிருந்து ஆளும் வர்க்கங்களை மீட்க அரசாங்கம் ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் சலுகைகளை வழங்குகிறது. இதன் மூலம் ஆளும் வர்க்கங்களின் சொத்து பன்மடங்கு பெருகி நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் பெருகிவிட்டது.
மேலும் லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்ப்பது, கனிம வளங்கள் நிறைந்த சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைப்பது, ரியல் எஸ்டேட் மூலம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், புதிய மேட்டுக் குடியினரருக்கான நகரங்கள் அமைப்பது என விவசாயிகளின் நிலங்களைப் பறிப்பதன் மூலம் பல இலட்சம் கோடிகளை ஆளும் வர்க்கங்களும், அரசியல்வாதிகளும் கொள்ளையடித்து வருகின்றனர்.

இவ்வாறு வரி ஏய்ப்பு, இலஞ்சம், ஊழல்கள் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 240 கோடி வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, ஸ்விஸ் பேங்க், கரீபியன் தீவுகள், மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளில் இந்தியாவின் கறுப்புப் பணம் 213 பில்லியன் டாலர்கள் அதாவது 9.7 லட்சம் கோடி குவித்துவைக்கப்பட்டுள்ளதாம். அதன் தற்போதைய மதிப்பு 462 பில்லியன் டாலர்களாம். இதில் 68 சதம் கடந்த இருபதாண்டுகளில் கொண்டு செல்லப்பட்டது என்றால் தனியார்மய தாராளமயக் கொள்கைகள் எப்படி பயன்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடியும். தனியார்மய, தாராளமய கொள்கைகளால் இந்தியாவிலிருந்து மூலதனம் நாட்டை விட்டு வெளியேறியதுதான் அதிகரித்துள்ளது.

பொழுதெல் லாமெங்கள் செல்வங் கொள்ளைக்கொண்டு
போகவோ? - நாங்கள் - சாகவோ?
அழுதுகொண் டிருப்பமோ? ஆண்பிள்ளைகள் நாங்கள்
அல்லமோ? - உயிர் - வெல்லமோ
என்று பாரதி வெள்ளையர்களைப் பார்த்து கோபமாகப் பாடினான்.
இன்றோ நாட்டின் விவசாயிகள் 2 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு மீளாத் துயிலில் மண்ணுக்குள் போகிறபோது நாட்டை ஆளவந்தவர்கள் பல இலட்சம் கோடிகளை வெளிநாட்டு வங்கிகளில் குவித்துள்ள கொடுமை தொடர்கிறது...

எனவே நாடு கொள்ளை போவதை தடுக்கவும், நாட்டுமக்களை வறுமை பட்டினிச் சாவிலிருந்து மீட்கவும், இலஞ்ச ஊழலை ஒழிக்கவும், வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள இந்திய பணத்தை மீட்கவும் தனியார்மய தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து அணிதிரளவேண்டும். சுதேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைக்க மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரளவேண்டும்.

நாடாளுமன்றவாத அரசியல் கூட்டணிகள் ஊழல் கூட்டணிகளே!
சோனிய, மன்மோகன், கருணாநிதி கும்பலின் கூட்டணி புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்து, வரலாறு காணாத ஊழல் புரிந்து நாட்டின் கஜானாவை காலி செய்துவிட்டு, சுமைகள் முழுவதையும் மக்கள் மீது சுமத்துகிறது. வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வரலாறு காணாத விவசாயிகளின் தற்கொலைகள் என்ற கொடுமைகளைத் தாங்க முடியாமல் மன்மோகன் கும்பல் ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் என இவ்வாட்சிக்கு எதிராக உழைக்கும் மக்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்தக் கொள்ளைக்காரக் கும்பலை வீட்டுக்கு அனுப்ப புரட்சிகரப் போராட்டத்திற்கு மக்கள் தயாராக வேண்டும்.

தமிழகத்தை ஆளும் கருணாநிதியோ புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்வதில் பெரியார், அண்ணாவின் உண்மையான வாரிசாகவே திகழ்கிறார். அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் லஞ்ச, ஊழல்கள் மூலம் தன் குடும்ப கார்ப்பரேட் ஆசியாவிலேயே நம்பர் ஒன்னாக வருவதற்கு அரும்பாடுபடுகிறார். பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, திரைத்துறை, விமானப் போக்குவரத்து, கல்வி நிலையங்களை நிறுவுவது என கருணாநிதியின் மகன்கள், மகள், பேரன், பேத்திகளின் ஏகபோகத்தை தாங்கமுடியாமல் தமிழகம் தத்தளிக்கிறது. தமிழ்மொழிக்காப்பு, தமிழ் இனம் காப்பு, மாநில சுயாட்சி, சமூகநீதி, மதச்சார்பின்மை எல்லாம் மண்ணோடு மண்ணாகி மக்கிவிட்டது. தனது குடும்பச் சொத்தைப் பாதுகாப்பது ஒன்றே கடமை, கண்ணியம், கட்டுப்பாடாக மாறிவிட்டது. தான் ஊழலுக்கு நெருப்பு என்று கூறியதை கேட்டு உலகம் நகைக்கிறது. தமது இலவச திட்டங்கள் என்ற மோசடிகள் மாபெரும் ஊழல்கள் முன் எடுபடாதோ என்ற நடுக்கம் கருணாநிதிக்கு வந்துவிட்டது.

பா.ஜ. கட்சி ஊழல் எதிர்ப்பு பேசுவது மாபெரும் நாடகம் என்பதை நாடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. சோனியா, மன்மோகன் கும்பலின் ஊழல் ஆட்சியை எதிர்த்து தோற்கடிக்க அது தயாரில்லை. நடந்து இருக்கின்ற ஊழலுக்குப் பாதை அமைத்ததில் அதற்குப் பெரும் பங்குண்டு.

புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்வதிலும், இந்திய அரசை பாசிச மயமாக்குவதிலும் மட்டும் பா.ஜ.க. காங்கிரசோடு போட்டி போடவில்லை. ஊழல் செய்வதிலும் பா.ஜ.க காங்கிரசுடன் போட்டி போடும் கட்சிதான்.

இடது வலது போலிக் கம்யூனிஸ்டுகள் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் தனியார்மய, தாராளமய கொள்கைகளை ஆதரிக்கின்றன. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பிற்குள்ளேயே லஞ்சத்தை ஒழிக்க முடியும் என நம்பிக்கை ஊட்டுகின்றன. லஞ்ச ஊழலில் இக்கட்சியினர் குறைவாக ஈடுபடுவதாலேயே லஞ்ச ஊலை ஒழித்துவிட முடியாது. மேலும் மேற்குவங்கத்தில் மம்தாவை எதிர்க்க காங்கிரசின் தயவை நாடும் இக்கட்சிகள் எங்கே சோனியா கும்பலை எதிர்க்கப்போகிறது.
ஜெயா கும்பலோ அலைக்கற்றை ஊழலைப் பயன்படுத்தி காங்கிரசின் திமுக கூட்டணியை உடைத்து, காங்கிரசோடு தான் கூட்டணி அமைப்பதற்கு கடும் முயற்சி செய்கிறது. கருணாநிதியின் குடும்ப அரசியலையும், ஊழல்களையும் எதிர்ப்பதாககக் கூறும் ஜெயா அதைவிடக் கூடுதலாக குடும்ப அரசியலையும், ஊழலையும் செய்து வரும் சோனியா கும்பலோடு சேர்வதற்கு நாடகம் ஆடுகிறார். அவர் ஒரு பழைய நல்ல நடிகை என்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ஊழலை ஒழிக்கக் கூடிய உத்தமத் தலைவி என்பதை எப்படி தமிழ் மக்கள் ஏற்பார்கள்? ஏற்றால் சர்வ நாசம் குலநாசம்.

நாடாளுமன்றவாதக் கட்சிகள் மாறி, மாறி எத்தனை கூட்டணிகள் அமைத்தாலும் அந்த கூட்டணிகள் அனைத்தும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் ஊழல் கூட்டணிகளேயாகும். சோனியா, மன்மோகன், கருணாநிதி, டாட்டா கும்பலுக்கு, அத்வானி, ஜெயா, அம்பானி, போன்ற மற்றொரு முதலாளித்துவ ஊழல் கூட்டணி மாற்றாகாது.

எனவே நாட்டின் அதிகாரத்தை வென்றெடுக்கவும், ஊழலை ஒழிக்கவும் சோனியா கும்பலின் ஆட்சியை பதவிவிலகக் கோரிய போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மக்கள் ஜனநாயக குடியரசமைக்க புரட்சிப் பாதையில் கீழ்க்கண்ட முழக்கங்களின் பின் அணிதிரளுமாறு அனைத்து மக்களையும் அறைகூவி அழைக்கின்றோம்.

சோனியா, மன்மோகன், கருணா கும்பலின் ஊழல் ஆட்சி தொடரவேண்டுமா?

* “அலைக்கற்றை ஊழல்” – நாடாளுமன்ற ஆட்சிமுறையின் முகத்திரையைக் கிழித்தது!

* பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் நாடாளுமன்ற ஆட்சி முறையைக் கட்டுப்படுத்தும் வழிமுறையே ஊழல்!

* மகா ஊழல்களுக்கு ஊற்றுக்கண் தனியார்மயக் கொள்கைகளே!

* சோனியா, மன்மோகன், கருணா, டாட்டா கும்பலுக்கு மாற்று அத்வானி, அம்பானி, ஜெயா கும்பல் அல்ல!
திருத்தல்வாதிகளும் அல்ல!

* ஊழலை ஒழிக்க – மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்கப் போராடுவோம்!
=============================================
சமரன் : படியுங்கள் ! பரப்புங்கள்
==============================================
<குறிப்பு: தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு செல்லுங்கள்>
வெளியீடு
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு
ஜனவரி 2011