Sunday 3 April 2011

ஈழவிடுதலைப் போரை நசுக்கிய சோனியா கும்பலுக்கு தமிழகத்தில் இடமில்லை! சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

 
தமிழினவிரோத, புதியகாலனியதாசர் சோனியா காங்கிரஸ் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!
 14வது தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!


14வது தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலை வரும் ஏப்ரல் 13ல் சந்திக்க இருக்கிறோம். இத்தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் அடங்கிய ஒருக் கூட்டணியும்; அ.தி.மு.க தலைமையிலான தே.மு.தி.க மற்றும் ‘இடது’சாரிகள் அடங்கிய மற்றொருக் கூட்டணியும் போட்டியிடுகின்றன. இவைகளைத் தவிர பா.ஜ.க., இந்திய ஜனநாயகக் கட்சி தனித்தும், பிறக் கட்சிகள் இக்கூட்டணிகளில் இணைந்தும் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் உள்ளிட்ட எந்த ஒரு கட்சிக்கும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனியாக இந்தியாவை மாற்றுவதிலும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. இத்தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்னால், இத்தேர்தல் குறித்து பாட்டாளிவர்க்க இயக்கமும் பிற ஜனநாயக கட்சிகளும் செய்ய வேண்டியது என்ன என்பதை தீர்மானிப்பதற்கு முன்னால் இன்று நாடு முழுதும் நிலவுகின்ற சூழ்நிலைகளைப் பற்றி ஒரு ஆழமான பரிசீலனை செய்வது மிகவும் அவசியமாகும்.

நடக்க இருப்பது தமிழ் மாநிலத் தேர்தலேயானாலும், இந்தியா முழுவதற்குமான ஒரு ஆய்வு அவசியம். ஏனெனில், கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் சோனியா-மன்மோகன் கும்பல் செயல்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளையே தமிழகத்தை ஆளும் கருணாநிதி தலைமையிலான மாநில ஆட்சியும் செயல்படுத்தியது. மத்திய அரசின் கொள்கைகள்தான் மாநில அரசுகளின் கொள்கைகளை தீர்மானிக்கின்றன.

சோனியா-மன்மோகன்-கருணா கும்பலின் மத்திய ஆட்சியின் 6 ஆண்டுகால செயல்பாடுகள்:

2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சோனியா-மன்மோகன்-கருணா கும்பல் அதற்கு முன் ஆட்சியிலிருந்த பா.ஜ.க தலைமையிலான தே.ஜ. கூட்டணி கடைபிடித்த அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையே தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஐ.மு. கூட்டணி முன்வைத்த குறைந்தபட்சத் திட்டத்தை மன்மோகன் கும்பல் செயல்படுத்தவே இல்லை.

பா.ஜ.க. துவக்கிவைத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான யுத்ததந்திரக் கூட்டாளி உறவுக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்ததோடு, உலகமய, தாராளமய, தனியார்மயம் எனும் தேசத்துரோகக் கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்தியது. மன்மோகன் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் செய்து கொண்ட இந்திய-அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு அரசியல் பொருளாதார ஒப்பந்தங்கள் இந்திய நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றிவருவதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகமேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு எடுபிடி நாடாக இந்தியாவை மாற்றிவருகிறது.

இந்திய ஆளும் தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களுக்காக இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதோடு, மன்மோகன் கும்பல் தென்னாசியாவில் இந்தியாவின் துணைமேலாதிக்கத்தை நிறுவுவதற்கு அண்டை நாடுகள் மீது விரிவாதிக்கக் கொள்கைகளை திணிக்கிறது. இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு போன்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது.

இலங்கையின் மீது இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டும்பொருட்டு சிங்களப் பேரினவாத, பௌத்தமதவாத இனவெறிப் பாசிச ராசபட்சே ஈழத்தமிழினத்தின் மீது நடத்திய இன அழிப்புப் போருக்கு சோனியா-மன்மோகன் கும்பல் அனைத்து உதவிகளையும் செய்தது. அந்தப் போரை இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து நடத்தியது. ஈழத் தமிழினத்தின் மீதான இன ஒடுக்குமுறைகளுக்கு தொடர்ந்து சோனியா-மன்மோகன் கும்பல் ஆதரவளித்து வருகிறது. இவை அனைத்திற்கும் கருணாநிதி துணைபோகிறார்.

மன்மோகன் கும்பல் உள்நாட்டிலும் தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையே கடைபிடிக்கிறது. காஷ்மீர், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்கிவருகிறது. இந்திய அரசு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கிறது. மேலும் உலகமயக் கொள்கைகளை செயல்படுத்தும் போது அரசியல் சட்டப்படி மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களையெல்லாம் பறித்து ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைக்கிறது. இந்தி மற்றும் ஆங்கில மொழியை ஆட்சிமொழியாக்கிவிட்டு இந்தியாவின் பல்வேறு தேசிய மொழிகளை ஆட்சிமொழி, பயிற்றுமொழி, நீதிமன்ற மொழியாக்கவும் மறுக்கிறது. எனவே தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகவும், தமிழ்மொழி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாக்கவுமான கோரிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகிவருகிறது.

மன்மோகன்-சோனியா-கருணா கும்பல் செயல்படுத்தும் உலகமயக் கொள்கைகளின் விளைவுகள்:

2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கிய பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. ஆனால் மன்மோகன் கும்பல் அந்த நெருக்கடி இந்தியாவை பாதிக்கவில்லை என்றும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் என்றும் கூறுகிறது. ஆனால் இந்த வளர்ச்சியின் காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்கள் வாழ்நிலையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதோடு வேலையின்மை பெருகுகிறது. விவசாயிகள் இடம்பெயர்ந்து செல்வதும், விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலகப் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக மூன்றாம் உலகநாடுகளின் ஏற்றுமதி 12 சதவீதம் குறைந்துவிட்டது. இந்நாடுகளில் விளைபொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து விட்டன. இந்நாடுகளிலிருந்து வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் அனுப்பிவைக்கும் பணத்தின் அளவும் குறைந்துவிட்டது. மேலும் மூன்றாம் உலகநாடுகள் அன்னியக் கடனை செலுத்தவேண்டும் என்பதற்காக சம்பளத்தைக் குறைக்க வேண்டும், சமூகநலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டவேண்டும் என்று ஐ.எம்.எப் (I M F) நிர்ப்பந்தம் கொடுக்கிறது. இதன் விளைவாக இந்நாடுகளின் வளர்ச்சி குறைந்து வருகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை நம் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அவர்கள் தடைவிதிப்பது, அமெரிக்காவின் காலாவதியாகிப்போன இராணுவத் தளவாடங்களை பல ஆயிரம் கோடிகளுக்கு நம்மிடம் விற்று நமது பொருளாதாரத்தை சீரழிப்பதுடன் அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலைமைகளை உருவாக்குவது, டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் நமது பொருட்களின் விலை உயர்ந்து அந்நாடுகளில் விற்க முடியாத நிலைமை, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வழங்கும் அவுட்சோர்சிங் வேலைகளைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், சேவைத் துறைகள் மட்டுமே ஓரளவு வளர்ச்சி என்று கூறலாம், எனினும் அதன் வளர்ச்சியால் பிற துறைகளுக்கு எந்தவிதமான பயனுமில்லை.

மன்மோகன் கும்பல் தனியார்மயக் கொள்கைகளை பொதுத்துறை தனியார் பங்கேற்பு (Public Private Participation- )  எனும் பேரில் தீவிரமாக செயல்படுத்தி, நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அனைத்துத் துறைகளிலும் கதவுகளை அகலத்திறந்து விடுகிறது. சுரங்கங்கள், வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள் போன்றத் துறைகளில் அன்னிய முதலீட்டிற்கான உச்சவரம்புகளை உயர்த்தியுள்ளது. பங்குசந்தை முதலீடுகளுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளது. இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.40,000 கோடி அளவிற்கு பொதுத்துறையின் பங்குகளை தனியார்மயம் என்றபேரில் பன்னாட்டு, உள்நாட்டுத் தரகு முதலாளித்துவ கார்பரேட்டுகளிடம் ஒப்படைத்துவிட முடிவுசெய்துள்ளது.

இவ்வாறு மன்மோகன் கும்பல் நாட்டின் கதவுகளை அன்னிய மூலதனத்திற்கு திறந்துவிட்டு, பொருளாதார நெருக்கடிகளிலிருந்து ஆளும் வர்க்கங்களை காப்பாற்றுவதோடு நெருக்கடிகளின் சுமைகளை தொழிலாளி வர்க்கத்தின் மீது சுமத்துகிறது. நிரந்தர வேலைகளை ஒழித்துக்கட்டி காண்டிராக்ட் முறையை புகுத்துவது, சம்பளத்தைக் குறைப்பது, 8 மணிநேர வேலை நாளை 12 மணிநேர வேலை நாளாக அதிகரிப்பது, தொழிற்சங்க உரிமைகளைப் பறிப்பது, தொழிலாளி வர்க்கத்திற்கான சலுகைகளைக் குறைப்பது என்று தொழிலாளிவர்க்கத்தை கொத்தடிமைகளாக மாற்றிவருகிறது.

சில்லறை வணிகத்திலும் பன்னாட்டுக் கம்பெனிகளை அனுமதித்து சிறுவணிகர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது மன்மோகன் கும்பல். கார்கில், வால்மார்ட் போன்ற ஏகாதிபத்திய பராசுரக் கம்பெனிகளும், உள்நாட்டு டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் தங்களது ஆதிக்கத்தை விரிவாக்கிவருகின்றன. இதன் விளைவாக சிறுவணிகர்களில் 50 சதவீதம் பேரும், மொத்த வணிகர்களில் 61 சதவீதம் பேரும் வணிகத்துறையில் பாதிப்படைந்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் கோடிக்கணக்கான வணிகர்கள் வாழ்விழந்து நடுத்தெருவில் நிற்கும் கொடுமை உருவாகியுள்ளது.

வேளாண்துறையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம்:

மன்மோகன் கும்பலின் தலைமையிலான மத்திய ஆட்சி, நடப்பில் உள்ள நில உச்சவரம்புச் சட்டத்தைத் திருத்தி பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் நிலத்தைக் குவித்து, குழும விவசாயத்தை பெருக்கிவருகிறது. விதைகள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியிலும், வேளாண் வணிகத்திலும் பன்னாட்டுக் கம்பெனிகளை அனுமதிப்பதன் மூலம் இன்று நாட்டின் வேளாண்துறை ஒரு கடும் நெருக்கடியை சந்திக்கிறது. வேளாண்துறை உற்பத்தியோ என்றுமே இல்லாத அளவிற்கு 2009-10ல் வெறும் 0.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது.

மன்மோகன் கும்பல் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு நிலம் வழங்குவதற்காக விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. மேலும் பன்னாட்டுக் கம்பெனிகள் மலட்டு விதைகளை உற்பத்தி செய்யவும், வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபடவுமான தடைகளை நீக்கி புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. பி.டி பருத்தி, மரபணுமாற்று விதகைள், பருத்தி விவசாயத்தில் அபாயகரமான விளைவுகளை உருவாக்கிய பின்பும், மன்மோகன் கும்பல் இந்தத் துரோகத்தை செய்கிறது. வேளாண் உயர்தொழில் நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் என்ற ஒரு ஆள்தூக்கிச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டத்தின்படி சரியான ஆதாரமில்லாமல் மரபணு மாற்று போன்ற புதிய தொழில் நுட்பத்தை எதிர்ப்பவர்களை 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறையிலடைப்பதோடு ரூ.2 லட்சம் அபாராதமும் விதிக்கலாம். இவ்வாறு பாசிச சட்டங்கள் மூலம் பன்னாட்டு வேளாண் கம்பெனிகளுக்கு சேவை செய்கிறது.

வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதைக் கைவிடும் பொதுவினியோகத் திட்டத்தை ஒழித்துவிடுவது போன்ற நடவடிக்கைகளால் வேளாண் வணிகத்தில் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் நுழைய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக உணவுதானியங்களின் மீது எதிர்ப்பார்ப்பு வர்த்தகம், ஆன்லைன் வர்தகம் நடக்கிறது. இது உணவுப்பொருட்களின் பதுக்கலுக்கும், விலை உயர்வுக்கும் வழிவகுத்து விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். பன்னாட்டு கம்பெனிகளோ உணவுதானிய சூதாட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி சுருட்டுகின்றன.

மன்மோகன் கும்பல் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.5,422 கோடி குறைத்துவிட்டது. அதை மூடி மறைத்து வேளாண் துறைக்கான கடனை இவ்வாண்டு ரூ.1 லட்சம் கோடி உயர்த்திவிட்டோம் என்று கூறி இது விவசாயிகளுக்கான பட்ஜட் என்று நாடகமாடுகிறது. ஆனால் இந்தக் கடன்கள் எதற்காக வழங்கப்படுகிறது? அது யாரிடம் சென்று சேர்கிறது என்பதை பார்த்தால் அது பன்னாட்டு, உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கே என்ற உண்மை புரியும்.

தனியார் கிடங்குகள், பண்டக சாலைகள் அமைப்பது; விவசாயப்பொருட்கள், கடல் பொருட்கள் மற்றும் இறைச்சி போன்றவற்றைப் பாதுகாக்க குளிரூட்டப்பட்ட பெட்டகங்கள், அறைகள் அமைப்பதற்காகவே இக்கடன்கள் வழங்கப்படுமாம். விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதில் 1990களில் ரூ 2 லட்சத்திற்கு கீழ் கடன் பெற்றவர்கள் மொத்த விவசாயக் கடனில் 83 சதவீதத்தை பெற்றனர். ஆனால் 2009ல் அது 44 சதவீதமாக குறைந்துவிட்டன. மேலும் 2009ல் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ரூ. 2 கோடிவரை கடன் பெற்றவர்கள் மொத்தக் கடனில் 20 சதவீதத்தை பெற்றுள்ளனர். கோடிக்கணக்கில் கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. எனவே இக்கடன்கள் முழுவதும் வேளாண் கார்ப்பரேட்டுகளுக்கே செல்கிறது. எனவே இவ்வாண்டு பட்ஜெட் விவசாயிகள் பட்ஜெட் அல்ல விவசாயிகளை கைக்கழுவும் பட்ஜெட்டே ஆகும். மேலும் வேளாண்துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீடுகள் குறைந்து கொண்டே போவதற்கான காரணம் என்ன?

மன்மோகன் கும்பலின் நிதிக் கொள்கை:

மன்மோகன் கும்பல் வேளாண்துறைக்கும், மற்ற வளர்ச்சித் திட்டங்களுக்கும் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்கிறது. நாட்டின் நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கு இக்கும்பல் பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டுத் தரகு முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் மீது போட வேண்டிய நியாயமான வரி விதிப்புகளை போடுவதற்கு மறுக்கிறது. அதற்குப் பதிலாக அவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குகிறது. இவ்வாறு நாட்டின் கஜானாவை காலி செய்துவிட்டு, நிதி ஆதாரங்களை திரட்டுவதற்காக வரியில்லாத வழிமுறைகள் மூலம், அதாவது அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் சேவைகள் மீது கட்டணங்களை விதிப்பதன் மூலம், வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிகளை வெட்டுவதன் மூலம் நிதி ஆதாரங்களை திரட்டுகிறது. அதாவது குடிநீர் வினியோகம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு கட்டணங்கள் விதிப்பது, இவைகளை தனியார்மயமாக்கிவிட்டு வணிகமயமாக்குவது, இதன் மூலம் நிதி திரட்டும் கொள்கைளையே மன்மோகன் கும்பல் செயல்படுத்துகிறது. பன்னாட்டு உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு, வரி ரத்து மற்றும் ஊக்கத் தொகை என்று கூறி 2009-10ல் நிதி நிலை அறிக்கையில் ரூ 4.83 லட்சம் கோடிகளை வழங்கியது. அது 2010-11ல் ரூ5.11 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. சோனியா-மன்மோகன்-கருணா கும்பல் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கும் இந்த சலுகைகள்தான் உண்மையான இலவசங்களாகும். ஆளும் வர்க்கங்களுக்கு இலவசங்களை வாரிவழங்குவது, மக்கள் நலத் திட்டங்களை கைவிட்டு அதற்கான நிதிகளைக் குறைத்து மக்கள் உரிமைகளைப் பறிப்பது இதுவே சோனியா-மன்மோகன்-கருணா கும்பலின் நிதிக் கொள்கை. இதை மூடி மறைத்து மக்கள்நலத் திட்டங்களையே இலவசமாகக் காட்டுவதுதான் கருணாநிதியின் இலவசம் என்பதை பின்பு பார்ப்போம்.

சோனியா-மன்மோகன்-கருணா கும்பலின் ஆட்சி ஊழல் சாம்ராஜ்ஜியமே:

மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சியில் வரலாறு காணாத மாபெரும் ஊழல்கள் வெடித்துக் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு ஊழல்கள் மலிந்து போவதற்கானக் காரணம் இக்கும்பல் அமல்படுத்திவரும் உலகமய, தனியார்மய தாராளமயக் கொள்கைகளே. திமுக-வை சார்ந்த மத்திய அமைச்சர் 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி, மன்மோகன் இலாகாவில் 4ஜி அலைக்கற்றையில் ரூ2 லட்சம் கோடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ரூ.70 ஆயிரம் கோடி, இராணுவ வீரர்களுக்கு வீடுகட்டும் திட்டத்தில் ஊழல் என்று ஊழல்பட்டியல் தொடர்ந்து கொண்டே வருகிறது.

தனியார்மயம் என்ற பேரில் இந்திய நாட்டின் விலை மதிக்க முடியாத இயற்கை வளங்களை, கனிம வளங்களை, பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு, உள்நாட்டுத் தரகு முதலாளித்துவக் கும்பல்களிடம் அடிமாட்டு விலைக்கு மன்மோகன் கும்பல் தாரை வார்க்கிறது. அதற்குப் பிரதிபலனாக அவர்களிடமிருந்து அமைச்சர்கள், அதிகார வர்க்கத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் பெறும் கையூட்டுக்களே இத்தனை லட்சம் கோடிகள் ஊழல்களாக கைமாறுகின்றன.

பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு டாட்டா, பிர்லா அம்பானி போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் ஆட்சியில் உள்ள அமைச்சர்களை அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக செயல்பட வைப்பதற்கு கொடுத்த கையூட்டுகள்தான் இந்த ஊழல்கள். இவர்களை இணைக்கும் ‘அபார’ சக்தியாகவே அரசியல் தரகர் நீரா ராடியா செயல்பட்டுள்ளார்.

எந்தெந்தத் துறைக்கு யார் யாரை மாந்திரியாக நியமிக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த மந்திரியை நீக்க வேண்டும் என்பதையும் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளே தீர்மானிக்கின்றனர் என்பதை நீராராடியாவின் டேப்பும், விக்கிலீக்ஸும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டன. ராசாவை மந்திரியாக்க கருணாநிதியின் மகள் கனிமொழி நடத்திய பேரங்களும், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பேரன் தயாநிதி மாறனிடம் ரூ.600 கோடி வாங்கிக்கொண்டு மந்திரி பதவி வழங்கியதும், அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பின் போது ஒவ்வொரு எம்.பி க்கும் ரூ. 10 கோடி அமெரிக்காவின் மேற்பார்வையில் இலஞ்சம் கொடுத்து மன்மோகன் கும்பலின் ஆட்சியைக் காப்பாற்றியதும், இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதை என்னவென்று எடுத்துக்காட்டி விட்டது.

எனவே இலஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டுமானால் இவ்வர்க்கங்களின் ஆட்சிக்கு முடிவுகட்டி, ஒரு சோவியத் வடிவிலான மக்கள் ஆட்சியை உருவாக்குவதுதான் தீர்வாகும். இன்று மாற்று அரசை அமைக்க போதிய வலிமை இல்லாத சூழலில் இலஞ்ச ஊழலில் பங்கெடுத்த அனைவரையும் கைது செய்யவேண்டும் என்றும், இலஞ்சம் வாங்கியவர்களை மட்டுமல்லாது இலஞ்சம் கொடுத்த டாட்டா, பிர்லா, அம்பானி மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளைச் சார்ந்தவர்களையும் கைது செய்யவேண்டும் என்றும், இலஞ்ச ஊழல்களால் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும் கோரவேண்டும். மேற்கண்ட சோனியா-மன்மோகன்-கருணா கும்பலின் மத்திய ஆட்சி கடைபிடித்த புதியகாலனியத்திற்கு சேவை செய்யும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும் ஊழல் மலிந்த ஆட்சி முறையும்தான் நாட்டின் அனைத்து மாநிலங்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிப்பதாக இருக்கிறது.

மத்திய ஆட்சியின் கொள்கைகளையே கருணாநிதி ஆட்சி அமூல்ப்படுத்தியது:

மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சி உலகமய, தனியார்மயக் கொள்கைகளை எதேச்சதிகாரமான முறையில் செயல்படுத்துகிறது. விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற; அரசியல் சட்டப்படி மாநிலப் பட்டியலிலும், பொதுப்பட்டியலிலும் உள்ள துறைகளில், மத்திய அரசே முடிவெடுத்து செயல்படுத்துகிறது. இவ்வாறு மாநில அரசுகளிடம் உள்ள அரைகுறையான அதிகாரங்களையும் பறித்து ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைக்கிறது.

கருணாநிதி அரசாங்கம் இதை எதிர்க்கவேயில்லை. வேளாண்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக மத்திய அரசு உலகவர்த்தக அமைப்போடு (World Trade Organisation- WTO), ஒரு உடன்படிக்கையை செய்தபோது, இவ்வாறு செய்வதற்கு மத்திய அரசிற்கு அதிகாரமில்லை என்றும், அது மாநில உரிமைகளை பறிப்பதாகும் என்றும் கூறி 1998ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். ஆனால் அந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அவ்வழக்கிற்கு விரோதமாக புதிய சீர்திருத்தக் கொள்கைகளை அவரே அமல்படுத்தத் துவங்கிவிட்டார். கருணாநிதியோ எந்தவித தயக்கமுமின்றி அதேக் கொள்கைகளை செயல்படுத்துகிறார். அனைத்து அதிகாரத்தையும் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைத்துவிட்டு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு காவடி தூக்குகிறார்.

தமிழகத்தில் நிலக்குவியல் தொடர்கிறது.

மொத்த நில உடைமையாளர்களில் 2.8 சதவீதம் பேரிடம் 24 சதவீத நிலங்களும், 10 சதவீதம் பேரிடம் 50 சதவீத நிலங்களும் குவிந்துள்ளன. கருணாநிதி அரசாங்கமோ ஏற்கனவே நடப்பில் உள்ள நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மறுத்துவிட்டு, ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு குழுமமய விவசாயத்திற்காக இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை வழங்கியுள்ளது. மேலும் விதைகள் உற்பத்தியிலும், வேளாண் வணிகத்திலும் பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபடுவதற்கு வசதியாக தமிழ்நாடு வேளாண் மன்றச் சட்டம் உட்பட பல்வேறு நிறுவன அமைப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் விளைவு விவசாயத்துறை கடும் நெருக்கடியை சந்தித்திருக்கிறது. சுமார் 86லட்சம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும், 52 லட்சம் கூலி வேலைக்குச் செல்லும் சிறு, குறு விவசாயிகளும் சொல்லொண்ணாத் துயரத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்கு வருடத்தில் அறுபது,எழுபது நாட்கள் தான் வேலைகிடைக்கின்றன. பெண்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.50, ரூ.60 தான் கூலியாகக் கிடைக்கிறது. அவர்களுக்கு வருடத்திற்கு 200 நாட்கள் வேலையும், குறைந்தபட்சக் கூலியாக ஒரு நாளைக்கு ரூ.150ம் தேவைப்படுகிறது. விவசாயத் துறை நெருக்கடி, விவசாயிகள் இடம் பெயர்வது அதிகரிக்கிறது. மற்றத் துறைகளிலும் மந்தநிலை தொடர்வதால் விவசாயிகள் அவர்கள் தொழிலிலேயே தொடருமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அது விவசாயிகளின் தற்கொலையிலும், பட்டினிச் சாவுகளுக்கும் தள்ளுகிறது. தமிழ் நாட்டிலும் இந்த நிலை தொடர்கிறது.

தொழில்துறையில் கருணாநிதி அரசாங்கம் ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளை தமிழகத்தில் பெருமளவில் அனுமதிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏராளமாக செய்துள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதன் மூலம் பன்னாட்டு, உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கு குறைந்த விலைக்கு நிலம், இலவசமாக மின்சாரம், தண்ணீர், சாலைகள், தகவல் தொடர்பு, போக்குவரத்து என ஏராளமான சலுகைகளை வாரிவழங்கியுள்ளது. ஏற்கனவே 53 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் 80 மண்டலங்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றன. ஆனால் மறுபுறம் சிறுதொழில்கள், குடிசைத் தொழில்கள் மற்றும் நெசவுத் தொழில்கள் இடுபொருட்களின் விலை உயர்ந்து போவதாலும், மின்சாரம் கிடைக்காததாலும், அரசின் வரிச்சுமையாலும் இலட்சக் கணக்கில் இழுத்து மூடப்படுகின்றன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். தொழிலாளர்களின் நிரந்தர வேலை பறிப்பு, கான்டிராக்ட் முறை திணிப்பு, சம்பளக்குறைப்பு, 12 மணி நேர வேலை நாட்கள், தொழிலாளர் உரிமை பறிப்பு போன்றவற்றால் வாழ்வுரிமையை இழந்து தொழிலாளர்கள் நிற்கதியாய் நிற்கின்றனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியைக் குறைத்து வருவதாகவும் அதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கருணாநிதி கூறுகிறார். 7வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 8 சதவீதமாக இருந்தது, 13வது ஐந்தாண்டுத்திட்டக் காலத்தில் 4.9 சதவீதமாக் குறைந்துவிட்டது என்று கூறுகிறார். ஆனால் மத்திய அரசில் பங்கேற்றுள்ள கருணாநிதி அங்கு தட்டிக் கேட்காமல் இங்கே ஏன் புலம்புகிறார். மேலும் மத்திய அரசு நிதி ஆதாரங்களைத் திரட்டுவதில் பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நிலபிரபுத்துவக் கும்பல்கள் மீது வரிபோட மறுத்துவிட்டு கஜானாவை காலி செய்கிறது. நிதி ஆதரத்தைத் திரட்டுவதற்கு ஆளும் வர்க்கங்கள் மீதி வரிபோடுவதை மறுத்து வரியல்லாத வழிமுறைகளில் அதாவது அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சேவைகளின் மீது கட்டணங்களை விதிப்பதன் மூலமும், இத்துறைகளை தனியார்மயமாக்கி வணிகமயமாக்கும் கொள்கைகளை கடைபிடிக்கிறது. இவ்வாறு அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் சமூக நலத்திட்டங்களை ஒழித்துக்கட்டுவதை மூடிமறைப்பதற்கே கருணாநிதி இலவசங்களை அறிவித்துள்ளார். இன்று மக்களின் தேவை இலவசங்கள் அல்ல மாறாக சமூக நலத்திட்டங்களை மீட்டெடுப்பதேயாகும்.

கருணாநிதி மக்களுக்கு வழங்கப்போவதாக கூறும் இலவசங்களைக் கூட மக்களிடம் இருந்து பறித்துதான் வழங்கப் போகிறார். டாஸ்மாக் சாராயக் கடைகள் மூலம் தமிழ் மக்களிடமிருந்து ஆண்டிற்கு ரூ.14,000 கோடியைத் தட்டிப் பறித்துத்தான் இலவசங்களை வழங்கும் வள்ளலாக மாறியுள்ளார் கருணாநிதி. ஆனால் அந்த இலவசங்களிலும் கருணாநிதி குடும்பம் இலாபம் சம்பாதிக்கிறது.

- வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதில் ஆண்டிற்கு ஆயிரம் கோடி கருணாநிதி குடும்பக் கேபிள் நிறுவனத்திற்கு இலாபம்;

- கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கருணாநிதி குடும்பத்துடன் நெருக்கமான “ஸ்டார்” காப்பீட்டு நிறுவனத்திற்கு ஒரே ஆண்டில் ரூ.200 கோடிக்கு மேல் இலாபம்;

- 108 ஆம்புலன்ஸ் மூலம் சன், கலைஞர் தொலைக்காட்சிக்கு 1 கோடி ரூபாய் விளம்பர வருமானம்;

- தமிழ்ப் பெயர்வைத்த திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரி ரத்து என்பதன் மூலம் கருணாநிதியின் மூன்று பேரன்களின் நிறுவனங்களுக்கு சுமார் 800 கோடிக்கு மேல் இலாபம்;

- கிரானைட், மணல் கொள்ளையில் கிடைத்து வரும் கையூட்டுக்கள்;

இவ்வாறு கருணாநிதியின் குடும்பத்தினர் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டும், இலஞ்ச ஊழல்கள் மூலமும் கிடைத்த பல லட்சம் கோடிகளைக் கொண்டும் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் பெருமளவு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்களை நடத்துவது, மாறன் சகோதரர்கள் மட்டும் 20 தொலைக்காட்சி நிறுவனங்கள், பல மொழிகளில் 46 பண்பலை வானொலிகள் நடத்துவது இரண்டு தினசரி, வாரப் பத்திரிக்கைகள் நடத்துவது என்று, இக்குடும்பம் அனைத்துத் துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறது. சினிமாத்துறையினர் இக்குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளம்பியுள்ளதைப் பார்த்தாலே தெரியும் இவர்கள் யார் என்று? மேலும் இலவசங்களால் பயன்படுவது கருணாநிதி குடும்பம் மட்டுமல்ல அந்த வர்க்கங்களுக்கே ஆண்டிற்கு 5 லட்சம் கோடி இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவே உண்மையான இலவசமுமாகும்.

தொகுத்துக் கூறினால் தமிழகத் தேர்தலை நாம் கீழ்க்கண்ட சூழ்நிலைமைகளில் சந்திக்கிறோம்.

சோனியா-மன்மோகன்-கருணா கும்பலின் கடந்த 6 ஆண்டுகால ஆட்சியின் விளைவாக:

- அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியா செய்து கொண்டுள்ள இருதரப்பு அரசியல் பொருளாதார ஒப்பந்தங்களின் விளைவாக நாடு அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றப்படுவதோடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக இந்தியா மாற்றப்படுவது;

- இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்காக, இலங்கையின் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்திற்காக, ஈழத் தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத ராஜபட்சேவின் இன ஒழிப்புக் கொள்கைக்கு தொடர்ந்து இந்தியா உதவி வருவது;

- உள்நாட்டில் தேசிய இனங்களின் மீதான தாக்குதல் தொடரும்போதே, மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைப்பதும், இந்தி ஆங்கில ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவிலுள்ள பல தேசிய மொழிகள் அழியும் அபாயத்தை சந்திப்பது;

- உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதால் நாடு ஓட்டாண்டியாக்கப்பட்டு வருவதுடன், அனைத்துத் துறைகளிலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் பெருகிவருதல்;

- பொதுத்துறையைத் தனியார்மயமாக்குவதன் மூலம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், ஆளும் வர்க்கத்தினர் பல இலட்சம் கோடிகளை சுருட்டிக் கொள்வது அதிகரித்து வருவது ..

- நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஆளும் வர்க்கங்களுக்கு 5 இலட்சங்கோடிகளை இலவசமாக வழங்குவது ஒருபுறம், மறுபுறம் மக்களுக்கான சமூக நலத்திட்டங்களை ஒழித்துவிட்டு அவற்றையே இலவசமாகக் காட்டி மக்களை ஏய்ப்பது;

போன்ற மேற்கண்ட நிலைமைகளே இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ள இன்றைய பொதுவானப் போக்குகளாகும்.

இத்தகைய ஒரு சூழலில் பாட்டாளிவர்க்கம் மேற்கொள்ள வேண்டிய செயல்தந்திரம் என்ன?

இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதிலும், உலகமய தாராளமய தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், இந்திய ஆளும் வர்க்கங்களின் விரிவாதிக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும், உலகமயக் கொள்கைகளை செயல்படுத்துவதால் வரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதிலும் காங்கிரஸ், பா.ஜ.க. இவ்விரு கட்சிகளுக்கிடையில் அடிப்படையில் வேறுபாடு இல்லை. மேலும் மதவாதப் பாசிசத்தைக் கடைபிடிப்பதில் தோற்றத்தில் வேறுபாடுகள் இருந்தபோதும், காங்கிரஸ் இந்துத்துவ பாசிச சக்திகளோடு சமரசமாகவே போகிறது. பா.ஜ.க மூர்க்கத்தனமான இந்துத்துவக் கொள்கைகள் பாசிசத்தைக் கடைபிடிக்கிறது என்றால் காங்கிரஸ் தேசிய ஒருமைப்பாடு எனும் பாசிசக் கொள்கைகளைக் கடைபிடிக்கிறது. இரண்டு கட்சிகளுமே இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களே. இவ்விரண்டு கட்சிகளும் இந்திய, தமிழ் மக்களின் முதன்மையான எதிரிகளேயாகும்.

இருப்பினும் இன்றைய தமிழகச் சூழலில் பா.ஜ.க. ஒரு பெரும் சக்தியாக இல்லை. காங்கிரஸ் கட்சியோ தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் போனது. தற்போது தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க மூர்க்கத்தனமாக முயற்சி செய்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்புள்ளது. தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கும் போதே தேர்தலுக்குப்பின் புதியக் கூட்டணிகளை அமைப்பதற்கான பேரங்கள் திரைமறைவில் துவங்கிவிட்டன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி 2ஜி அலைக்கற்றை ஊழலைப் பயன்படுத்திக்கொண்டு கருணாநிதியின் மனைவி தயாளுவையும், மகள் கனிமொழியையும் கைது செய்வோம் என்று மிரட்டியே 63 இடங்களைப் பெற்றுள்ளதோடு, ஆட்சியில் பங்கு என்றும் பேசிவருகிறது. அதற்கு ஏற்பவே தொகுதிகளை வாங்கியுள்ளது. தி.மு.க-வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவதற்குத் துடிக்கிறது. ஒரு வேளை தி.மு.க-விற்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அ.தி.மு.க-வோடு சேர்ந்து ஆட்சி அமைக்கத் தயாராகவே உள்ளது. அ.தி.மு.கவின் ஜெயலலிதாவும் காங்கிரசோடு கூட்டுசேரத் தயாராகவே இருப்பார்.

காங்கிரஸ் கட்சி தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டால் தமிழகத்தில் எத்தகையதொரு நிலைமை உருவாகும்?

நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் போக்கும், தமிழகம் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக் காடாக மாறுவதும் இன்னும் தீவிரமாகும்.
ஈழத் தமிழினம் சிங்கள இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மீண்டும் எழுச்சி பெறுவதை ஒடுக்குவதற்கு தமிழகம் களமாக மாறும்.
தேசிய இன, மொழி உரிமைகளுக்காகப் போராடுபவர்கள், ஈழவிடுதலை ஆதரவாளர்கள் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள்.
தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதன் மூலம் மத்திய ஆட்சியைப் பலப்படுத்தி புதியகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்வது இந்திய அளவிலும் மேலும் பலப்படும்.
எனவேதான் காங்கிரஸ் கட்சியை பிரதான எதிரியாக கருதுகிறோம். காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டுவோம் என்றும் கூறுகிறோம்.

காங்கிரஸ் கட்சி அல்லாத தி.மு.க தலைமையிலோ அல்லது அ.தி.மு.க தலைமையிலோ ஆட்சி அமைத்தாலும், அல்லது வேறொரு கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் புதியகாலனியாதிக்கத்திற்கே சேவை செய்யும். தமிழகம் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாறுவதை தடுப்பதற்கோ, ஈழத் தமிழினத்தின் மீதான இந்திய அரசின் அடக்குமுறைகளைத் தடுக்கவோ, இந்தி ஆங்கில ஆதிக்கத்தை ஒழித்து தமிழை ஆட்சிமொழியாக, பயிற்று மொழியாக மாற்றவோ, சாதித்தீண்டாமையை ஒழித்து சமதர்ம சமுதாயம் படைக்கப் பயன்படபோவதில்லை. எனவே இக்கட்சிகளை ஆதரிக்கமுடியாது.

பா.ம.க, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள் மற்றும் புதியதாக உருவாகியுள்ள சாதிவாதக் கட்சிகள் அனைத்தும் சாதி ஒழிப்பையோ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையோ திட்டமாகக் கொண்ட கட்சிகள் அல்ல. இக்கட்சிகள் அனைத்தும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பது இல்லை. தி.மு.க அணியிலோ, அ.தி.மு.க அணியிலோ அதிக இடங்களைப் பெறுவது, தமிழக ஆட்சியிடம் பதவிகளையும் சலுகைகளையும் பெறுவதுதான் அவைகளின் இலட்சியங்களாக உள்ளன. எனவே இத்தகைய கட்சிகளுடன் சேரமுடியாது.

இடது, வலது போலிக் கம்யூனிஸ்ட்டுகளோ மத்திய ஆட்சி செயல்படுத்தும் உலகமய, தாராளமயக் கொள்கைகளை அவர்கள் ஆளும் மாநிலங்களில் அப்படியே செயல்படுத்துகின்றனர். அவர்களின் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பும் கூட சமரசத்தன்மை வாய்ந்ததுதான். இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளை ஆதரிப்பதோடு, ஈழப் பிரச்சனைக்கு இலங்கை அரசுக்குள்ளேயே தீர்வு காணவேண்டும் என்று கூறி ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்றனர். இவ்வாறு சிங்களப் பேரினவாதத்திற்கு துணை போகின்றனர். தேசிய ஒருமைப்பாடு எனும் பேரில் தேசிய சுயநிர்ணய உரிமையை ஏற்க மறுக்கின்றனர். எனவே இக்கட்சிகள் ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு மாற்றான கட்சிகள் அல்ல. இவர்களோடு பாட்டாளி வர்க்க இயக்கம் கூட்டணி அமைக்க முடியாது.

காங்கிரசை முறியடித்து, காங்கிரஸ் அல்லாத புதியதாக ஒரு மாநில ஆட்சி அமைந்தாலும், புதியகாலனிய ஆதிக்கத்தை எதிர்க்கவும் உலகமயக் கொள்கைகளை செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தவும் நிலச் சீர்திருத்தத்தை நிறைவேற்றவும் தேசிய இன சுயநிர்ணய உரிமையை வெல்லவும் தாய்மொழியை ஆட்சிமொழி, பயிற்றுமொழியாக்கவும் செயல்படும் அரசாக அமையப் போவதில்லை.

இதனால் இத்தகைய மாற்று மாநிலஆட்சியை அமைக்கப் போட்டியிடும் கூட்டணிகள் ஆதரிக்கத் தகுந்ததவையல்ல. எனவே தேர்தலைப் புறக்கணிப்பது தவிர்க்க முடியாததாக மாறுகிறது.

நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளில், சட்டமன்றங்களில் பெரும்பான்மை பெறுவதன் மூலமாக மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று கூறி ஆளும் வர்க்கக் கட்சிகளும், திருத்தல்வாதிகளும் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களாக செயல்படுகின்றனர். பெருந்திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளவும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் (அல்லது அது கலைக்கப்பட அனுமதிக்கவும்) எந்த அளவிற்கு சித்தாந்த வழியிலும், அரசியல் வழியிலும் நடைமுறையிலும் தயாரிப்பதே நம்முடைய இன்றையக் கடமையாகும். எனவே இக்கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலைப் புறக்கணிப்போம். பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம்.

* தமிழினவிரோத, புதியகாலனிய தாசர் சோனியா காங்கிரஸ் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!

* ஈழவிடுதலைப் போரை நசுக்கிய சோனியா கும்பலுக்கு தமிழகத்தில் இடமில்லை!

* தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும் தமிழை ஆட்சிமொழி பயிற்று மொழியாக்கவும் போராடுவோம்!

* மாநில ஆட்சி அதிகாரங்களை ஏகாதிபத்தியங்களுக்குத் தாரைவார்ப்பதை அனுமதியோம்!

* வேளாண் நிலங்களை பன்னாட்டுக் குழுமங்களிடம் ஒப்படைப்பதை எதிர்ப்போம்!  நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

* கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை தனியார்மயமாக்கி மக்கள் உரிமைகளைப் பறிப்பதை எதிர்ப்போம்!

* வாக்குவங்கிக்கான சாதிவாத தேர்தல் கூட்டணிகளை எதிர்ப்போம்!

* சோனியா, மன்மோகன், கருணா ஊழல் கும்பலுக்கு மாற்று ஜெயா, அத்வானி கும்பல் அல்ல!

* தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!  மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்- தமிழ்நாடு  ஏப்ரல் 2011
================================================================
சமரன்
படியுங்கள்!                                                                                        பரப்புங்கள்!!
=================================================================