Tuesday 21 February 2012

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!ஜனநாயகவாதிகளே!!

அமெரிக்காவின் அடிமைச் சேவகன் மன்மோகன் கும்பலின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை கடந்த நவம்பர் 24ஆம் தேதி எடுத்தது. பல்பொருள் விற்பனையில்51 சதவீதமும் (Multibrand retail), ஒரு பொருள் விற்பனையில் 100 சதவீதமும் (Single brand retail) அனுமதித்து, அமெரிக்காவின் வால்மார்ட் போன்ற ஏகாதிபத்தியப் பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களுக்கு மாபெரும் இந்தியச் சந்தையை திறந்துவிடும் துரோகத்தைச் செய்துள்ளது. சோனியாவும், வருங்காலப் பிரதமர் கனவில் மிதக்கின்ற ராகுல் காந்தியும் இந்தத் துரோகத்திற்கு ஆசி வழங்கியுள்ளனர். வணிகர்கள், எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி 10ல் மன்மோகன் கும்பல் ஒரு பொருள் விற்பனையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்துவிட்டது.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும்; அவர்களின் விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும்; நுகர்வோர்களுக்கு தரமான பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும்; பன்னாட்டு நிறுவனங்கள் “மெகா மால்களை’திறப்பதன் மூலம் 10 மில்லியன் பேர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்;வேளாண் பொருட்களை பாதுகாப்பது; குளிரூட்டிப் பதப்படுத்துவது மற்றும் பொருட்கள் போக்குவரத்தில் நவீனத்தைப் புகுத்துவது போன்ற கட்டமைப்புத் துறை வளர்ச்சியடையும் என்று கூறி இந்தத் துரோகத்தை நியாயப்படுத்துகிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம் சில்லரை வணிகத்தில் நிறுவப்படுவதால் வேளாண் பொருட்களை விவசாயிகளிடமிருந்து மலிவான விலைக்கு வாங்கி நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்று பகல் கொள்ளையடிப்பர்; சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள 4 கோடி மக்களின் வாழ்வுரிமையைப் பறிப்பர் என்று கூறி இந்தியா முழுவதிலும் வணிகர்கள் டிசம்பர்-1ல் மாபெரும் கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். வணிகர்களின் கடும் எதிர்ப்பினாலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளான பா.ஜ.க, இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரசும், திமுகவும் அமைச்சரவை முடிவை எதிர்த்ததாலும் தற்காலிகமாக அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக மன்மோகன் கும்பல் அறிவித்துள்ளது. எங்கே இந்த முடிவை செயல்படுத்தினால் ஆட்சி பறிபோய்விடுமோ என்று அஞ்சித்தான் அம்முடிவை நிறுத்தியுள்ளனர். வர இருக்கும் ஐந்து மாநிலத் தேர்தலுக்குப்பின் கருத்தொற்றுமை (எம்.பிக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவது உட்பட) அடிப்படையில் பல்பொருள் விற்பனையையும் அந்நியருக்குத் திறந்துவிடுவது என்று சதித்தனமாகச் செயல்படுகிறது மன்மோகன் கும்பல்.

அனைத்துத் துறையிலும் அந்நிய முதலீடு நாட்டை சீரழிக்கிறது
அந்நிய மூலதனம் வந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும், ஏற்றுமதி பெருகும், வேலைவாய்ப்புப் பெருகும், நாட்டின் அந்நியக்கடன் சுமை ஒழியும் என்று கூறித்தான் 1990களில் அன்றைய நரசிம்மராவ் தலைமையில் நாட்டின் கதவுகளை ஏகாதிபத்தியவாதிகளுக்கு அகலத்திறந்துவிட்டது காங்கிரஸ்கட்சி. அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளான உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளைத் துவக்கி வைத்தன. அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த அனைத்துக் கட்சிகளும் அதைத் தொடர்ந்தன. தொழில்துறை, வேளாண்துறை, நிதித்துறை மற்றும் சேவைத்துறைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்துத்துறைகளிலும் அந்நிய மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தன. ஆனால் இன்று அக்கொள்கைகள் நாட்டின் அனைத்துத்- துறைகளையும் சீரழித்துவருகின்றன.

முதலாளித்துவ உலகம் சந்தித்துக் கொண்டிருகின்ற பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் முன்வைக்கப்பட்ட உலகமயக் கொள்கைகள் தீர்க்கவில்லை – மாறாக அம்முதலாளித்துவ நெருக்கடிகளை உலகு தழுவியதாக மாற்றிவிட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், மீளமுடியாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றன. அத்தகைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு தற்போது இந்திய சில்லரை வணிகத்தைத் திறந்துவிட ஏகாதிபத்தியவாதிகள் நிர்ப்பந்திக்கின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நீடித்துவரும் மந்த நிலை இந்தியப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7 சதவீதத்திற்குக் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. தொழிற்துறை வளர்ச்சி 1.9 சதவீதமாகவும், வேளாண்துறை வளர்ச்சி 1 சதவீதத்திற்கும் கீழ் என வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. அத்யாவசியப் பொருட்களின் விலை விண்ணைத்தாண்டிப் பறக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு 20சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய நிதி மூதலீட்டாளர்களின் முதலீடுகள் நாட்டைவிட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி குறைந்து அந்நிய செலாவணிக் கையிருப்பு குறைந்து கொண்டே செல்கிறது. பொருளாதார நெருக்கடி தொடர்வதால் அரசாங்கத்தின் வரி வசூல் குறைந்துவிட்டது. எனவே அரசாங்கம் செலவை ஈடுகட்ட ரூ.40,000 கோடி கடன் வாங்குவது என்று முடிவெடுத்துள்ளது. இவ்வாறு நாடு மீண்டும் கடன் பொறியில் சிக்கிவருகிறது. அந்நிய முதலீட்டை அனைத்துத்துறையிலும் அனுமதித்ததால் நாட்டிற்கு கிடைத்துள்ள பரிசு இதுதான்.

மன்மோகன் கும்பலோ சரிந்துவரும் பணத்தின் மதிப்பை காப்பாற்றவோ, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ முயற்சி செய்யவில்லை. அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆளும் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்க நலன்களிலிருந்து சீர்திருத்தத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது என்ற பேரில், தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்ட நிதித்துறைகளையும், சினிமா பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகத்துறைகளையும் பன்னாட்டுக் நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது மூலமும், வேளாண்துறையில் உயிரியல் தொழில் நுட்ப மசோதாவைக் கொண்டு வருவதன் மூலமும் அந்நிய மூலதனத்திற்கு சேவைசெய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் சில்லரை வணிகத்தை தற்போது திறப்பது என்ற முடிவும். மன்மோகன் கும்பல், நெருக்கடிக்குத் தீர்வு காண்பது என்று கூறிக்கொண்டு எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகின்ற துரோகச் செயலைத்தான் செய்கிறது.

வேளாண்மைத்துறை வீழும், விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கும்

அமெரிக்க வால்மார்ட் போன்ற பன்னாட்டு வணிக நிறுவனங்களின் "மெகா மால்களை" இந்தியாவின் சில்லரை வணிகத்தில் அனுமதித்தால் விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளை பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவர் என்றும், இடைத்தரகர்களான வணிகர்களிடம் இருந்து விவசாயிகள் மீட்கப்படுவர் என்றும் கூறுவது உண்மைதானா? அதற்குமுன் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அரசு அமல்படுத்திவரும் புதிய காலனிய வேளாண் கொள்கைகள் - அதாவது வேளாண் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்ததால் விளைந்த விளைவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்:
- நிலச்சீர்த்திருத்தத்தை மறுத்து, உச்சவரம்புச் சட்டத்தையும் மீறி பன்னாட்டு, உள் நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகள் கையில் நிலத்தைக் குவித்து குழும விவசாயத்திற்கு வழிவகுத்தது;
- ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து வேளாண் விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கான அளவுரீதியான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் அகற்றியது;
- ஏகாதிபத்திய பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் ஏராளமான மானியம் பெற்று மலிவான விலையில் வேளாண் பொருட்களை இந்தியச் சந்தையில் கொட்டிக்குவிப்பதும், இந்திய விவசாயிகளுக்கு வழங்கிவந்த மானியங்களை வெட்டியதுடன் இந்திய அரசாங்கம் ஆதரவு விலை கொடுத்து கொள்முதல் செய்யும் கொள்கைகளை கைவிட்டதாலும் இந்தியாவில் விவசாயிகள் இறக்குமதியான பொருட்களின் விலையோடு போட்டி போட முடியாமல் விவசாயத்தை விட்டு வெளியேற்றப்பட்டு ஓட்டாண்டிகளாக்கப்படுவது தீவிரமாதல்;
-அறிவுசார் சொத்துரிமை மற்றும் மரபனுமாற்று விதைகள் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் பெற்று, இயற்கை வளங்கள் மற்றும் உயிரியல் வளங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்வது
-அரசாங்க நிதி ஒதுக்கீடு மற்றும் கடன்கள் குறைக்கப்படுவதால், தனியார் கடன் என்ற கந்து வட்டிக் கடனில் மூழ்கி விவசாயிகள் பட்டினிச்சாவு மற்றும் தற்கொலைக்குத் தள்ளப்படுதல்.
மேற்கண்ட இந்திய அரசின் புதியகாலனிய வேளாண் கொள்கைகள் இந்திய விவசாயத்தை வேரோடு அழித்து வருவதுடன், கடந்த 15 ஆண்டுகளில் நாடு முழுதும் 2.15 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்த பிறகும் தற்கொலைச் சாவுகள் தொடர்ந்து கொண்டேயுள்ளன. இத்தகைய ஒரு சூழலில் அந்நிய முதலீட்டிற்கு சில்லரை வணிகத்தைத் திறந்து விடுவது, இந்திய விவசாயிகளை பன்னாட்டு "மெகா மால்களின்" இலாப வெறிக்கு பலியிடுவதில்தான் முடியும்.

அமெரிக்காவில் வால்மார்ட் என்ற பல்பொருள் விற்பனை நிறுவனம் 12ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளைக் கொண்டுள்ளது. அது தினசரி ரூ 6,400கோடிக்கு வணிகம் செய்கிறது. அது உலகிலேயே அதிகப் பணியாளர்களை -இந்திய ரயில்வேக்கு அடுத்தப்படியாக - பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது. 2007-ம் ஆண்டு நிலவரப்படி நெதர்லாந்து நாட்டின் அஹோல்டு 74 சதவீதமும், பிரான்சின் கேற்றிபோர் 52 சதவீதமும்,ஜெர்மனியின் மெட்ரோ 53 சதவீதமும், பிரிட்டனின் ரெஸ்கோ 22 சதவீதமும்,அமெரிக்காவின் வால்மார்ட் 20 சதவீதமும் வெளி நாட்டு வர்த்தகத்தையே நம்பி உள்ளன.

வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர வணிக நிறுவனங்கள் பெருமளவிலான முதலீடுகளைக் கொன்டிருப்பதாலும்; நவீனத் தொழில் நுட்பத்தையும் (பதப்படுத்தல், குளிரூட்டுதல், பெட்டக வசதிகள் மற்றும் நவீனப் போக்குவரத்துகள்), கம்ப்யூட்டர், சேட்டிலைட் போன்ற நவீனத் தகவல் தொழில் நுட்பங்களையும் தம்வசம் கொண்டிருப்பதாலும் வேளாண்துறையில் உள்ள இடைத்தரகர்களை எளிதில் அகற்றிவிடும். விவசாயிகளோடு நேரடியாக ஒப்பந்த விவசாய முறைகளைப் புகுத்துவதன் மூலமும், விவசாயிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள், பயிர்காலக்கடன்கள் வழங்குவதன் மூலமும் அவர்களைத் தங்களது கட்டுப்பட்டிற்குள் கொண்டு சென்றுவிடுவார்கள். அதன் பிறகு விவசாயிகளின் பொருட்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்கு நிர்ப்பந்தம் செய்வர்.

அமெரிக்காவிலுள்ள ஒரு உற்பத்தியாளர் வேதனையோடு இப்படிக் கூறுகிறார்,
“பொருளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் தவறு செய்கிறோம்; ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்தால், இருமடங்கு தவறு செய்கிறோம். காரணம் வால்மார்ட்டிற்கு விற்றால் லாபம் கிடைக்காது. மறுத்தால் விற்பனையே செய்ய முடியாது”.
 பன்னாட்டு ஏகபோகங்கள் உற்பத்தியாளர்களை எப்படி கசக்கிப் பிழிகின்றன என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

1994-ல் ஐ. நா நடத்திய "பொருளாதார முன்னேற்றமும் வளர்ந்து வரும் நாடுகளும்" என்ற தமது ஆய்வு அறிக்கையில் பன்னாட்டுப் பகாசுர வணிக நிறுவனங்கள் எப்படி உற்பத்தியாளர்களுக்கு மலிவான விலை கொடுத்துச் சூறையாடுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

பருத்தியில் 4 - 8சதவீதமும், புகையிலையில் 6 சதவீதமும், வாழைப்பழ உற்பத்தியாளர்களுக்கு 14சதவீதமும், டீ விற்பனையில் பிரிட்டனில் 47 சதவீதமாக இருப்பது அமெரிக்காவில் 15 சதவீதமாகவும் சந்தையில் விற்கும் விலையில் உற்பத்தியாளருக்குக் கிடைக்கிறது. 2007-ஆம் ஆண்டு ஆக்ஸ்பாம் (OXFAM)நடத்திய ஆய்வு மேற்கண்ட நிலை இன்னமும் மோசமாகியுள்ளதையே காட்டுகிறது. பொருட்களை கொள்முதல் செய்யும்போது இடைத்தரகர்களை அகற்றிவிட்டு, வாங்குவோர் - ஒரு சில பகாசுர நிறுவனங்கள் - ஒரு புறமும் பொருட்களை விற்கின்ற ஏராளமான விவசாயிகள் மறுபுறமும் இருப்பது மலிவான விலைக்கு சரக்குகளை பெறமுடிகிறது. பொருட்களை விற்கின்ற சந்தையில் பல சிறு சிறு வணிக நிறுவனங்களை அகற்றிவிட்டு, ஒரு சில "மெகா மால்கள்" ஒருபுறமும் ஏராளமான வாங்குபவர்களான நுகர்வோர் மறுபுறமும் இருப்பது தங்களது சரக்குகளை அதிகப்படியான லாபத்தில் விற்பதற்குமான வாய்ப்புகளை இத்தகைய ஏகபோகங்கள் வழங்குகின்றன. இது ஒரே சமயத்தில் விவசாயிகளை கசக்கிப்பிழிந்து வயிற்றிலடிக்கவும், நுகர்வோர்களை ஒட்டச்சுரண்டவுமான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இ ந் நிறுவனங்கள் உலக அளவில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதால், இந்திய நாட்டு விவசாயிகள் - சிறு நடுத்தர விவசாயிகள் மட்டுமல்லாது, குழும விவசாயம் செய்யும் நிறுவனங்களும் கூட போட்டி போடமுடியாமல் அழிக்கப்படுவர். இவ்வாறு சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது விவசாயிகளின் ஓட்டாண்டித்தனத்தை அதிகரிப்பது,விவசாயிகளை நிலத்தைவிட்டு வெளியேற்றுவது, தற்கொலைக்கு தள்ளப்படுவது ஆகியவை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பை அழிக்கும்

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், பொது விநியோகத் திட்டத்தையும் அழித்துவிடும். பன்னாட்டு பெரும் வணிக நிறுவனங்கள், உலகில் எந்தப்பொருள் குறைந்த விலையில் எங்கு கிடைக்கிறதோ அதை வாங்கி உலக அளவில் விநியோகம் செய்கின்றன. எனவே இந்தியாவில் உணவுப்பயிர் சாகுபடிக்கு பதிலாக உலகச் சந்தைக்குத் தேவையான பணப்பொருள் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதன் விளைவாக உணவுதானிய உற்பத்தி வீழ்ச்சியுறும். மேலும் அரசாங்கம் ஆதரவுவிலை கொடுத்து உணவுப்பொருட்களை கொள்முதல் செய்வதைக் கைவிட்டு தனியார் நிறுவனங்களை அனுமதித்துவிடும். எனவே அரசாங்கக் கொள்முதல் இன்றி பொது விநியோகத்திட்டம் அழிக்கப்படும். எனவே உணவுப்பொருட்கள் வணிகம் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகச் சூதாட்டத்திற்கு ஆட்படுத்தப்படும். உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும். இன்று உலக அளவில் சங்கிலித் தொடர் ஓட்டல்கள் (KFC, பீசா போன்றவைகள்) உணவுப்பொருள் விற்பனை நிறுவனங்கள் கொழுத்து வளர்கின்றன.

சிறுதொழில் அழியும்

பன்னாட்டுப் பகாசுர வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் விற்கும் தொழில்துறை உற்பத்திப் பொருட்கள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள்,ஆயத்த ஆடைகள், உதிரி பாகங்கள் போன்ற பொருட்களை 30 சதவீதம் சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது. சிறு தொழிலை பாதுகாப்பது அதன் நோக்கமாம். ஆனால், இது இந்திய அளவிலானது அல்லவாம். உலக அளவிலானதாம். எனவே இனி இந்த அனைத்துப் பொருட்களும் சீனா, கொரியா போன்ற நாடுகளிருந்து இந்திய சந்தையில் கொட்டிக் குவிக்கப்படும். இதன் விளைவாக ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் திருப்பூர் சுடுகாடாக மாறும். கைத்தொழில், குடிசைத்தொழில், கதர் கிராமத் தொழில் அனைத்திற்கும் முழுதாக சமாதி கட்டப்படும். பல இலட்சம் தொழிலாளர்கள் வீதிகளில் வீசப்படுவர்.

வேலையின்மை பெருகும்

சில்லரை வணிகத்தில் பன்னாட்டுப் பெரும் வணிக நிறுவனங்கள் வருவதால் 1 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில் சிறுவணிகர்கள் கோடிக்கணக்கான பேரை அழித்து விட்டு ஒரு சில பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு வழங்கும். ஏற்கனவே உலகமய, தாராளமயக் கொள்கைகள் கிராமப்புறங்களில் 2 லட்சம் பேருக்கு மேற்பட்ட விவசாயிகளை காவு வாங்கியதுடன் சுமார் 75 லட்சம் விவசாயிகளை நிலத்தைவிட்டு வெளியேற்றி நகர்புறங்களில் வேலையற்றவர்களாக நிறுத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் பல லட்சம் சிறு தொழில்கள் மூடப்பட்டதாலும், தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கட்டாய விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளதாலும் அனைவரும் கைத்தொழிலையும், சிறு வணிகத்தையும் செய்து காலந்தள்ளுகின்றனர். இந்தியாவில் சுமார் 4.5 கோடிப்பேர் சிறு வணிகத்தை நம்பி வாழ்கின்றனர். இத்தகைய ஒரு சூழலில் பன்னாட்டுப் பெரும் வணிக நிறுவனங்கள் பல லட்சம் சதுர அடிகளைக் கொண்ட பெரும் வணிக வளாகங்களை நிறுவி,நவீன முறையில் பொருட்களை விற்க ஆரம்பித்தால், ஆரம்பத்தில் மலிவான விலையில் விற்று சிறு வணிகர்களை ஒழித்துவிடுவர். வீடுவீடாக விற்பனை செய்தால் 18 பேர் செய்ய வேண்டிய வியாபாரத்தை சாதாரணக் கடைகளில் 10பேர் செய்வர். அதே "மெகா மால்களில்" 4 பேரே செய்து விடுவர். தற்போது இந்தியாவில் மொத்த சில்லரை வணிகத்தில் அதாவது 400 பில்லியன் டாலர்கள் விற்பனையில் 44 மில்லியன் பேர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வால்மார்ட் இந்த அளவு விற்பனைக்கு வைத்திருக்கும் ஆட்களைவிட இது 20 மடங்கு அதிகமானது ஆகும். எனவே சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பதில் பல கோடிப்பேரின் வேலைவாய்ப்பை பறிக்கும். செல்போன் வருகையால் எப்படி எஸ்.டி.டி பூத் காணாமல் போனதோ அது போல, இந்தப் பன்னாட்டு மெகா மால்கள் சிறு வணிகர்களை அழித்துவிடும். செல்போன் டவர்கள் சிட்டுக்குருவிகளை அழித்ததே அதுபோல.
பன்னாட்டு மெகாமால்கள் வந்தால் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளமும் சலுகைகளும் உரிமைகளும் கிடைக்கும் என்றும்; சில்லரை வணிகத்தில் ஏற்கனவே வேலை செய்பவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக - கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்றும் கூறி ஏமாற்றுகின்றனர். பிற வணிக நிறுவனங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்களில் தொழிலாளர்களின் சம்பள விகிதம் 31 சதவீதம் குறைவாகும். உடல் நலத்திற்கான காப்பீடு, மொத்தத் தொழிலாளர்களில் 23 சதவீதம் பேருக்குத்தான் கிடைத்தது. குறைந்த ஊதியம்,அதிக அளவிலான விற்பனை இலக்கு, தற்காலிக ஊழியர்களாகவே பல ஆண்டுகள் நீடிப்பது போன்ற நிலைமைகளே, நிர்வாகம் வழங்கும் சலுகைகளைப் பெற முடியாததற்குக் காரணங்கள் ஆகும்.

கடந்த 30 ஆண்டுகளில் வால்மார்ட் தொழிலாளர்கள், சங்கம் அமைப்பதற்கு நடத்திய போராட்டங்கள் சிறிதளவே வெற்றி பெற்றுள்ளன. பெண்கள் 16 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்டுகின்றனர். அவர்களுக்கு வேலையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகள் வழங்கப்படுவதில்லை. நிர்வாகத்தின் முரட்டுப் பிடிவாதம், அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளே இதற்கான காரணங்களாகும். அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளிலேயே இத்தகைய கொடுமைகளைப் புரிந்துவரும் வால்மார்ட், இந்தியாவில் எப்படி ஆட்டம் போடும் என்பதைக் கூறவும் வேண்டுமா?

1988 முதல் 2003 வரையில் வால்மார்ட் மீது 288 தொழில் தகராறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2006 - ல் பென்சில்வேனியாவில் கடிகாரத்தைத் திருப்பி அதிக நேரம் வேலைவாங்கியதற்காக அந்நிறுவனத்தின் மீது நீதிமன்றம் 78.4 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தது. மேற்கண்ட உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, பன்னாட்டு மாபெரும் வணிக நிறுவனங்கள் அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களைக் கசக்கிப்பிழிந்து,அவர்களின் வயிற்றில் அடித்துக் கொள்ளை லாபம் பெறுவார்கள் என்பது நிதர்சனம்.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தரகுப்பெருமுதலாளிகளின் கூட்டு

அமெரிக்காவின் வால்மார்ட் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்த பன்னாட்டுப் பகாசுர வணிக நிறுவனங்கள், இந்தியாவின் 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியச் சந்தையைக் கொள்ளையடிக்க எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அவர்தம் நாடுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அது ஒன்றுதான் அவர்களுக்கு வழியாகத் தெரிகிறது. அதே சமயம் ஏற்கனவே சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுவரும் உள் நாட்டுத் தரகுமுதலாளித்துவ நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து சில்லரை வணிகம் முழுவதையும் கைப்பற்றுவதற்குத் துடிக்கின்றன. எனவேதான் சில்லரை வணிகத்தைத் திறந்து விடுவதற்கு உள்நாட்டுத் தரகுப்பெருமுதலாளிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ரிலையன்ஸ் நிறுவனம், சீனாவின் சன் ஆர்ட் (Sun Art) நிறுவனத்தைப் போல தனியாகவே மிகப்பெரும் வணிக நிறுவனங்களைக் கட்டி அமைக்கப் போவதாகக் கூறியுள்ளது. பியூட்சர் குழுமத்தின் பான்டலூன் நிறுவனம் 25- 30 சதவீதம் வளர்ச்சியடைந்து வருவதாகவும் அந்நிய மூலதனத்தின் மூலம் அதை 40சதவீதமாக உயர்த்தப்போவதாகவும் அது கூறுகிறது. பாரதி குழுமம் ஏற்கனெவே வால்மார்ட்டுடன் மறைமுக வணிகத்தில் இறங்கிவிட்டது. வெளிப்படையான சில்லரை வணிகத்திற்கு வால்மார்ட்டோடு அது பேசிக்கொண்டிருக்கிறது. ஆர்.பி கோயங்காவின் ஸ்பென்சர் நிறுவனம், அந்நிய மூலதனம் தமது நிறுவனத்தை விரிவுபடுத்த உதவும் என்று கூறியுள்ளது. மின்னணு பொருட்களின் வர்த்தக நிறுவனமான வீடியோகான், அமெரிக்காவின் பெஸ்ட் பை (Best Buy)நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. டாட்டா டிரெண்டு தனது ஸ்டார் பசார் நிறுவனத்தோடு பிரிட்டனின் டெஸ்கோ நிறுவனத்தைக் கூட்டுச் சேர்க்க பேச்சு நடத்துகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய வருகையால் அவர்களின் அனுபவம் இந்தியாவிற்கு (அதற்கு) பயன்படும் என்று அது கூறுகிறது. ஆதித்ய பிர்லா குழுமத்தின் ‘மோர்’ நட்டத்தில் இயங்குவதால், அந்நிய முதலீட்டிற்கு ஏங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பன்னாட்டு முதலாளிகளும், உள் நாட்டுத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களும் சில்லரை வணிகத்தை முழுவதும் கைப்பற்ற கூட்டுச்சேர்ந்து நிற்கின்றன.

நாட்டை ஆளும் மன்மோகன் சிங்கோ உள் நாட்டுத்தரகு முதலாளித்துவ வர்க்கங்களின் நலன்களிலிருந்து, நாட்டை அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகளின் வேட்டைக்காடாக மாற்றுவதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடிகளுக்குத் தோள் கொடுப்பதிலும், ஏகாதிபத்திய நெருக்கடிகளின் சுமைகளை இந்திய மக்கள் மீது முழுமையாகச் சுமத்துவதிலும் அமெரிக்க நாட்டின் வைஸ்ராய் போல் செயல்பட்டு வருகிறார்.
அண்மையில் ஜி-20 மாநாடு பிரான்சில் நடந்தபோது, அதில் கலந்துகொண்ட மன்மோகன்சிங், வளரும் நாடுகள் எல்லாம் ஒன்றுபட்டு அமெரிக்காவையும்,ஐரோப்பாவையும் காக்க வேண்டும் என்று சபதம் ஏற்றார். இடிந்துவிழும் அமெரிக்காவைத் தூக்கி நிறுத்த தோள் கொடுப்போம் என்று அவர் அறிவித்ததைப் பார்த்து அமெரிக்க அதிபர் ஒபாமா ஆனந்தப்பட்டார். அதன் பின்பு பாலித்தீவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் மன்மோகன் கலந்து கொண்டார். அதில் அமெரிக்க அதிபர் மன்மோகனிடம், இந்திய அணுசக்தித்துறையை அமெரிக்க முதலாளிகளுக்கு எப்போது திறந்துவிடப்போகிறீர்கள் என்று கேட்டதோடு உடனடியாக சில்லரை வணிகத்தைத் திறந்துவிட வேண்டும் என்றும் கட்டளை இட்டார். நாடு திரும்பிய உடன், மன்மோகன் மந்திரி சபையைக் கூட்டி எஜமானனின் கட்டளையை நிறைவேற்றினார்.

அமெரிக்கா, இந்திய சில்லரை வணிகத்தில் எவ்வளவு வேட்கை கொண்டுள்ளது என்பதை அந்நாட்டின் வெளியுறவுச் செயலரின் பேச்சிலிருந்தே புரிந்து கொள்ளலாம். நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டிசம்பர் 7ல் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தவுடன் ஹிலாரி கோபத்தோடு இவ்வாறு பேசுகிறார்;
"மான்டேக் சிங் அலுவாலியாவை விட்டுவிட்டு பிரணாப் முகர்ஜியை நிதி மந்திரியாக ஏன் நியமித்தார்கள்? முகர்ஜியும் அலுவாலியாவும் எப்படி ஒத்துப் போகிறார்கள்?" என்றும் " வர்த்தக அமைச்சர் ஷர்மாவால் முகர்ஜியுடனும் பிரதமருடனும் இணைந்து செயல்பட முடிகிறதா?" என்றும் கோபாவேசத்துடன் கேட்கிறார். நட்வர்சிங்கையும் மணிசங்கர் அய்யரையும் ஒழித்துக்கட்டியதுபோல பிரணாப் முகர்ஜியையும் ஒழித்துக்கட்ட அமெரிக்கா விரும்புகிறது போலும். இவ்வாறு ஹிலாரி கோபாவேசப் படுவதற்குக் காரணம், அவரே வால் மார்ட்டில் ஒரு பங்குதாரராக இருந்து கொண்டு பல ஆயிரம் கோடிகளை இலாபமாக பெறுவதுதான்.

அந்நிய முதலீட்டிற்கு இந்திய சில்லரை வணிகத்தை திறந்துவிடும் மன்மோகன் கும்பலின் துரோகத்திற்கு எதிராக வணிகர்கள் நடத்திய நாடுதழுவிய போராட்டம்தான், நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளான பா.ஜ.க மற்றும் இடது வலது போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளான திரினாமுல் மற்றும் திமுகவும் இம்முடிவைத் தற்காலிகமாகத் தடுத்துநிறுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. எனவே அந்நிய மூலதனத்திற்கு எதிராக நாடுதழுவிய மக்கள் இயக்கங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்த போராட்டமானது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையும், அவர்களின் உள்நாட்டுக் கூட்டாளிகளான தரகுப் பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களையும் எதிர்த்த நாட்டின் விடுதலைக்கான போராட்டமாகும்.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு நுழைவது மட்டுமே நாட்டை அடிமைப்படுத்தும் செயலாக பார்க்க முடியாது. மாறாக, நாட்டின் அனைத்து வாழ்வுத்துறைகளிலும் அந்நிய முதலீடுகளை எதிர்த்துப் போராடுவதின் ஒரு பகுதியாகும். உலகமயம் தாராளமயம் தனியார்மயம் போன்ற புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளை எதிர்த்தும்,அமெரிக்க - இந்திய இருதரப்பு அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களையும் முறியடித்து நாட்டில் ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே நாட்டின் விடுதலைக்கும், நெருக்கடிகளை தீர்ப்பதற்குமான ஒரே வழியாகும். எனவே தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய முதலாளிகள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட தேசபக்த சக்திகள் அந்நிய மூலதனத்திற்கு, சில்லரை வணிகத்தை திறந்து விடுவதையும், பிற துறைகள் திறந்து விடப்படுவதையும் எதிர்த்து முறியடிக்க ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அத்தகைய ஒரு கூட்டுப் போராட்டமே ஆளும் வர்க்கங்களின் துரோகத்தை முறியடிப்பதற்கான பலமிக்க சக்தியாக அமையும்.

எனவே கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

* சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!
* அந்நிய மூலதனத்திற்கு நாட்டின் அனைத்துத் துறைகளையும் திறந்துவிடும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை எதிர்த்து அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு.
பிப்ரவரி, 2012