Sunday 7 October 2012

கூடங்குளம் அணு உலையைத் திற!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

 அணுசக்தி ஆபத்து என்று பீதியூட்டி கூடங்குளம் அணு உலையை எப்படியாவது இழுத்து மூடிவிடவேண்டும் என்று அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகின்றனர். அக்டோபர் 29ல் சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் மிரட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகளோ கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி, அவர்களின் மாற்று வாழ்வாதாரப் பிரச்சனைகளை முறையாகத் தீர்த்துவைக்க இன்று வரை முழுமையாக முயற்சி செய்யவில்லை. இத்தகைய ஒரு சூழலில், நாட்டில் நிலவும் மின்வெட்டு, மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு கூடங்குளம் மக்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்துடன் அணு உலையைத் திறக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அணு உலையைப் பற்றிய பீதி

 அணு உலை எதிர்ப்பாளர்கள் புகுசிமாவில் ஏற்பட்ட சுனாமி பேரழிவைக் காட்டி அணு உலை விபத்து, கதிர்வீச்சு ஆபத்து, அணுக்கழிவுகளின் அபாயம் என்று பீதியூட்டி, அச்சுறுத்தி கூடங்குளம் அணு உலையை மூடியே ஆக வேண்டும் என்கின்றனர். புகுசிமாவில் அணு உலை உருகி கதிர்வீச்சு தாக்கியதற்குக் காரணம் அணுத் தொழில் நுட்பம் அல்ல என்பதையும், தனியார் நிறுவனங்களின் இலாப வெறியின் காரணமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகப் பின்பற்றாததே காரணம் என்பதையும் ஜப்பான் அரசாங்கத்தின் ஆய்வறிக்கை தெளிவாக்கிவிட்டது. மேலும் அணுகதிர்வீச்சு பற்றிய அணு சக்தி எதிர்ப்பாளர்களின் பிரச்சாரம் வெறும் பீதி என்பதும் அம்பலமாகிவிட்டது. புகுசிமாவில் யாரும் கதிர்வீச்சால் இறக்கவில்லை. புகுசிமா விபத்தைத் தொடர்ந்து டோக்கியோவில் கதிர்வீச்சின் தாக்கமானது உடலில் ஓராண்டில் பொட்டாசியம் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் தாக்கத்தில் (390 மைக்ரோ சீவெர்ட்ஸ்), பத்தில் ஒரு பங்குதான் நிலவியது (40 மைக்ரோ சீவெர்ட்ஸ்). அணு உலையின் 50 மைல் சுற்றளவில் வசிப்பவர்களின் மீது ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதில் வெளிப்படும் கதிர்வீச்சின் தாக்கம் (0.1 மைக்ரோ சீவெர்ட்ஸ்) அளவுக்குக் குறைந்ததுதான். அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் விபத்தின்போது கதிர்வீச்சின் தாக்கம் இயற்கையிலும் மருத்துவத் துறை மூலமும் ஒரு மனிதன் பெறுகின்ற (4000 மைக்ரோ சீவெர்ட்ஸ்) அளவில் நான்கில் ஒரு பகுதிதான் இருந்தது. செர்னோபிலில் நடந்த கொடிய கதிர்வீச்சுப் பாதிப்புகளுக்குப் பிறகு அணுக் கதிர்வீச்சுப் பாதுகாப்பில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணு உலையே, “கதிர்வீச்சு அபாயம் என்பது பீதி” என்பதை நடைமுறையில் நிரூபித்து வருகிறது. எனவே அணுக்கதிர்வீச்சு ஆபத்து என்பது பீதியூட்டுவதேயாகும்.


 அணு உலைகளை மூடவேண்டும் என்பதற்கு அவர்கள் கூறுகின்ற மற்றொரு காரணம் புகுசிமாவிற்குப் பிறகு உலகம் முழுவதும் அணு உலைகளை மூடிவருகிறார்கள் என்பது. இது ஒரு வடிக்கட்டிய பொய்யாகும். இன்று உலகில் 65 நாடுகள் அணு உலைகளை நிறுவ ஆர்வம் காட்டி வருகின்றன. புகுசிமாவிற்குப் பிறகும் அமெரிக்கா தனது 104 அணு உலைகளில் ஒன்றைக்கூட மூடவில்லை. பிரான்ஸ் 74 சதவீதம், பெல்ஜியம் 57சதவீதம், ஸ்வீடன் 40 சதவீதம், ஸ்விட்சர்லாந்து 41 சதவீதம் அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. புகுசிமாவிற்குப் பிறகு ரசியா 20 சதவீதம் புதியதாக அணுசக்தி மின்சாரத்தையும், சீனா 51 புதிய அணு உலைகளையும், தென்கொரியா 20 அணு உலைகளையும், வியட்நாம் 5 உலைகளையும் கட்டிவருகின்றன.

அணு சக்தித் துறையின் நெருக்கடி

 அணு உலைகளைத் திறப்பதற்குப் பல நாடுகள் விரும்பினாலும், பொதுவாக அணு சக்தித் துறை உலகம் முழுவதும் இறங்குமுகத்திலேயே உள்ளது. புகுசிமாவிற்கு முன்பே அணு சக்தித் துறை வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அணு சக்தித்துறையின் வரலாற்றிலேயே 2008ஆம் ஆண்டில்தான் உலகில் ஒரு அணு உலை கூட கட்டப்படவில்லை. 2009 முதல் 2011 வரை 9 அணு உலைகள் கட்டப்பட்டன. அதே சமயம் பழைய 11 அணு உலைகள் மூடப்பட்டுவிட்டன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 1989இல் 177 அணு உலைகள் இயங்கின. அது 2011ல் 143ஆகக் குறைந்துவிட்டன. 2010ல் அணு சக்தித் துறை மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை விட (375 ஜிகா வாட்ஸ்) பிற சூரிய ஒளி, காற்றாலைகள், உயிரியல் மற்றும் கழிவுகள் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு அதிகரித்துவிட்டது (381 ஜிகா வாட்ஸ்).
 மேற்கண்டவாறு அணு சக்தித்துறை வீழ்ச்சியைச் சந்தித்துவரக் காரணம் அணுத் தொழில்நுட்பம் அல்ல என்றும், இன்று அந்நாடுகள் சந்தித்துக்கொண்டிருக்கிற முதலாளித்துவப் பொது நெருக்கடிதான் காரணம் என்றும் முதலாளித்துவ ஆய்வாளர்களே கூறுகின்றனர். அணு உலைகளை அமைப்பதற்கும், மின் பகிர்மான திட்டங்களுக்கும், விபத்துக்காலச் செலவினங்கள் அதிகமாக இருப்பதாலும் எந்த ஒரு தனியார் நிறுவனத்தாலும் அணு உலைகளை இலாபகரமாக இயக்கமுடியவில்லை. பொருளாதார நெருக்கடிகளால் மற்றத் துறைகளைப் போலவே அணுமின் துறையும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல லட்சம் கோடி டாலர்களை அரசாங்கம் இலவசமாக வழங்கினாலும் முதலாளித்துவ வர்க்கங்களால் எந்த ஒரு தொழில் நிறுவனத்தையும் மீட்க முடியவில்லை. எனவே அணு சக்தித்துறை உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளையும் தனியாரிடமிருந்து நஷ்ட ஈடு இன்றிப் பறிமுதல் செய்து சமூக உடைமை ஆக்குவதன் மூலம் மட்டுமே இப்பிரச்சினைகளைக்குத் தீர்வுகாண முடியும். மாறாக அணு உலைகளை மூடுவது தீர்வாகாது. முன்னேறிய நாடுகளில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் பின் தங்கிய நாடுகளில் மக்கள் ஜனநாயக சர்வாதிகார ஆட்சியையும் நிறுவுவதுதான் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கான ஒரே வழியாகும். அதன் மூலம் மட்டுமே படிப்படியாகச் சமூக உடைமையை நோக்கிச் செல்ல முடியும். இருப்பினும் நிலவுகின்ற முதலாளித்துவ ஆட்சியின் கீழேயே உலகமய தனியார்மயக் கொள்கைகளை ஒழித்து அணு சக்தி உள்ளிட்ட சேவைத் துறைகளை அரசே ஏற்று நடத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அணு உலையை பாதுகாப்பாகவும் மக்களுக்கான நஷ்ட ஈட்டையும் உத்திரவாதப் படுத்தி இயக்க முடியும். அதற்கு மாறாக அணு உலையை மூடு என்று போராடுவது வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பும் அடையாள அரசியலேயாகும். முதலாளித்துவ நெருக்கடிகளை மூடி மறைத்து ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றுவதே ஆகும். குறிப்பாகக் கூடங்குள அணு உலையை மூடு என்ற போராட்டத்தின் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் அடங்கியுள்ளன.

ஆற்றல் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம்

 இந்திய நாட்டின் அணு சக்தி உள்ளிட்ட ஆற்றல் துறைகள் அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்தக் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்.  இந்திராகாந்தியின் காலத்தில் இந்தியா தற்காப்பிற்காக அணு குண்டுச் சோதனை நடத்தியபோது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் எரிபொருள் வழங்க மறுத்தன. அதன் பிறகு ராஜீவ்காந்தி  ரசியாவுடன் கூடங்குளம் ஒப்பந்தம் போட்டு எரிபொருளுக்கு உத்திரவாதம் செய்தார். ரஷ்யாவில் மரபுவழி முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டதால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அடுத்து பா.ஜ.க அரசாங்கம் அணுகுண்டு சோதனை செய்தபோது அமெரிக்காவும் பிரிட்டனும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதை எதிர்த்தே வாஜ்பாய் அரசாங்கம் கூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தைப் புதுப்பித்தது. எனவேதான் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆரம்பம் முதலே கூடங்குளம் அணு உலையை எதிர்த்து வருகின்றனர். தற்போது உதயகுமார் கும்பல் அதையேதான் கூறுகிறது.அதனடிப்படையிலேயே தற்போது உதயகுமார் கும்பலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடி வருகிறது.

 அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் அணு சக்தி, எண்ணெய், எரிவாயு உட்பட அனைத்து ஆற்றல் வளங்களின் மீதும் தனது ஏகபோகத்தை நிறுவுவதற்குத் துடிக்கிறது. சர்வதேச அணுக்கழகம் [International Atomic Energy Agency (IAEA)], அணு எரிபொருட்கள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு ((Nuclear Suppliers Group - NSG), அணு ஆயுதப் பரவல் தடைச்சட்டம் (Nuclear Non - Proliferation Treaty) மூலம் அணுசக்தி துறை முழுவதையும் தமது கட்டுப்பட்டில் வைத்துள்ளது. ஐந்து அணு ஆயுத நாடுகள் தவிர்த்து உலகில் எந்த ஒரு நாடும் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது மட்டுமல்ல, அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கக் கூடாது என்றும் மிரட்டுகிறது. தமக்கு அடிப்பணியும் நாடுகள் அணு ஆயுதம் செய்தாலும் கண்டுகொள்ளாத அமெரிக்கா, தமக்கு அடிப்பணியாத நாடுகள் அணுமின்சாரம் தயாரிப்பதையும் மறுக்கிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது என்ற பேரில் ஆப்கன், ஈராக்கின் மீது போர்த்தொடுத்து அந்நாடுகளில் பொம்மை ஆட்சியை நிறுவியுள்ளது. தற்போது ஈரான் அணு குண்டு செய்கிறது என்று கூறி அந்நாட்டின் மீது போர்த்தொடுக்க ஆயத்தம் செய்து வருகிறது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்தியக் கிழக்கில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது மேலாதிக்கத்திற்காகவே கொடிய ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துகின்றது.

 அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவைசெய்யும் ஒரு எடுபிடி நாடாக இந்தியாவை மாற்றும் இராணுவ ஒப்பந்தத்தை இந்தியா ஏற்ற பிறகுதான், இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துகொண்டது. அணுசக்தி ஒப்பந்தமும்கூட ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்களை ஆதரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் ஹைடு சட்ட நிபந்தனக்கு உட்பட்டே போடப்பட்டது. ஈரானிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுப்பது; இந்தியாவின் தற்காப்புக்கான அணு ஆயுதத் திட்டத்தைச் சிதைப்பது; இந்தியாவின் சுயேச்சையான அணுமின் திட்டத்தை ஒழிப்பது; இந்திய அணு ஆற்றல் சந்தையில் தமக்குப் போட்டியாக விளங்கும் ரசியா மற்றும் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளை விரட்டுவது என்பதே அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.
 ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றபிறகு, 2010ஆம் ஆண்டு அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. ஜனநாயகத்தை மீட்பது, மனித உரிமையைக் காப்பது, ஊழலை ஒழிப்பது என்ற பேரில் உலகின் எந்த ஒரு நாட்டிலும் அமெரிக்கா தலையிடும் என்றும்; அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தும் என்றும் அது கூறுகிறது. ஏமன், எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து மக்கள் போராடியபோது அந்தப் போராட்டங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா “ஆட்சி மாற்றத்தின்” மூலம் தமது பொம்மை ஆட்சிகளை நிறுவிக்கொண்டது. அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் துணைநின்றன. அதற்கும் முன்னர் சோவியத் ரசியாவிலிருந்து பிரிந்து வந்த நாடுகளில் பல வண்ணப் புரட்சிகள் எனும் பேரில் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி “ஆட்சிமாற்றத்தை” அமெரிக்கா செய்தது.

 இந்தியாவிலும் அன்னா அசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரும், உதயகுமார் தலைமையிலான அணு உலைக்கு எதிரான இயக்கங்களும் இன்னும் பலவகையான தொண்டு நிறுவனங்களும் “அமெரிக்காவிடம் நிதியுதவிபெற்று அதன் கைப்பாவைகளாகச் செயல்படுகின்றன”. அமெரிக்காவின் தீவிர விசுவாசியான மன்மோகன் கும்பல் அமெரிக்காவின் கோரிக்கையை முழுமையாகச் செயல்படுத்தும் முறையில் அதற்கு நிர்ப்பந்தம் கொடுப்பது தற்போதைய போராட்டங்களின் நோக்கமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் தாசனான மன்மோகன் கும்பலையும் எதிர்த்து இந்திய மக்கள் புரட்சிகரப் போராட்டத்திற்குத் தயாராகிவிட்டால் அப்போது “அமெரிக்காவின் நேரடிப் பொம்மை ஆட்சியை நிறுவ இந்தத் தொண்டு நிறுவனங்கள் துணை நிற்கும்”. அதற்காகப் பல்வேறு கோரிக்கைகளை வைத்து அவைகள் போராடுகின்றன. அந்த நோக்கத்தை அடைவதற்கு அரசியல் திரட்டலுக்கான போராட்டங்களில் ஒன்றுதான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமும்.

பாதுகாப்பு உத்திரவாதத்துடன் அணு உலையைத் திற

 கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவது என்று மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தவுடன் உதயகுமார் கும்பல் கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது. அணு உலை ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு, மக்களின் மறுவாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றுவது, கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்காகப் போராடப் போவதாக அறிவித்தனர். ஒரு புறம் உண்ணாவிரதப் போராட்டம், முற்றுகைப் போராட்டம் என நடத்திக்கொண்டே மறுபுறம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் அணு உலை பாதுகாப்புக் காரணங்களுக்காக அணு உலையை மூட வேண்டும் என வழக்குத் தொடுத்தனர். சென்னை உயர்நீதிமன்றம் அணு உலையைத் திறக்க வேண்டும் - பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது.
 அதன் அடிப்படையில் அரசாங்கம் அணு உலையில் எரிபொருளை நிரப்பத் துவங்கியதுடன், அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பாக நட்ட ஈடு மற்றும் சுற்றுச் சூழல் அனுமதி பற்றிக் கேள்வி எழுப்பி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உச்சநீதிமன்றம் அணு உலையின் பணிகளை நிறுத்த மறுத்துவிட்டது. பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசோ இந்திய அணு சக்தி கழகம் முன்வைத்துள்ள 17 பாதுகாப்பு அம்சங்களில் 7ஐ நிறைவேற்றியுள்ளதாவும், மீதியை அணு உலையை இயக்கிக்கொண்டே நடைமுறைப்படுத்துவதாகவும் நீதி மன்றத்தில் கூறியுள்ளது.

 எனவே தற்போதைய பிரச்சினை பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் தீர்த்துவிட்டுத்தான் அணு உலையைத் திறக்க வேண்டுமா? அல்லது இருக்கும் நிலையிலிருந்து அணு உலையைத் தொடங்கி நடத்திக்கொண்டே பாதுகாப்பு அம்சங்களை முழுமையாகச் செயல்படுத்துவதா என்பதேயாகும். இன்று தமிழகத்திலும் நாடு முழுமையும் உள்ள மின்சாரப் பற்றாக்குறையைக் கணக்கில் கொண்டும் கூடங்குளம் அணு உலையில் அமைக்கப்பட்டுள்ள நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளை கணக்கில் கொண்டும் பார்க்கும் போது அணு உலையைத் தொடங்கி இயக்கிக்கொண்டே மீதியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீர்ப்பது ஒன்றுதான் உகந்த வழியாகும். அவ்வாறு தீர்வு காண்பதற்குத் தடையாக இருப்பது எது? நீதிமன்றத்தில் அணு உலையை எதிர்க்கவில்லை பாதுகாப்புக்காகத்தான் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டே மக்கள் மன்றத்தில் அணு உலையை மூடவேண்டும் என்று முற்றுகைப் போராட்டம் நடத்திவரும் உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரின் அராஜகமே தடையாக உள்ளது.

 மறுபுறம் மத்திய, மாநில அரசுகளோ ஆரம்பத்திலிருந்தே கூடங்குளம் மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறையின்றியே செயல்பட்டுவருகின்றன. காங்கிரஸ் கட்சி போபால் விஷவாயுப் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் அக்கட்சியின் வாக்குறுதிகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாது. கூடங்குளம் மக்கள் பிரச்சினைகளை அடக்குமுறைகள் மூலம் தீர்வுகாணாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

மக்கள் பிரச்சினைகளை பேசித் தீர்

 கூடங்குளத்தில் இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் விபத்துக்கள் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; மீனவர்கள், விவசாயிகள் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்; பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்குதல், எல்லாவற்றுக்கும் மேலாக ரசிய நிறுவனத்தை விபத்துக்கான நட்ட ஈட்டை ஏற்கவைப்பது; ரசியாவுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் மட்டுமல்லாது அமெரிக்காவோடு ரகசியாமாகச் செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தங்களையும் வெளியிடவேண்டும் எனப் போராடுவது அவசியமாகும். மேற்கண்ட கோரிக்கைகளைப் பேசித்தீர்க்க உதயகுமார் குழுவினருடன் மட்டுமல்லாது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும். அதைக் கூடங்குள அணு உலையை இயக்கிக் கொண்டே செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவதுதான் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் செய்யவேண்டியதாகும்.

கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்து

 உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பாளர்கள் தங்களைக் காந்தியவாதிகளாகவும், தாங்கள் அகிம்சை வழியில் போராடுபவர்களாகவும் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அணு உலைக்கு எதிராக மறியல் செய்வது, முற்றுகைப் போராட்டம் என்று செயல்படுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு கூட நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்று அராஜகமாகப் பேசுகின்றனர். அவர்களை பொறுத்தவரை எல்லா விதமான நியாய தர்மங்களையும் மீறி வாய்ப்புக் கிடைக்குமானால் கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தகர்த்து தரைமட்டமாக்கவும் தயங்கமாட்டார்கள். உண்மையில் அதுதான் அவர்களின் வேட்கையும் கூட.

 உதயகுமார் கும்பல் அணு உலைக்குச் சேதாரம் விளைவித்தால் அதை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்துவார்களா? அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்களா? அல்லது அணு உலையை இடிக்க விட்டுவிட்டு வழக்குப் போட்டுவிட்டோம் என்று நாடகமாடுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் மன்மோகன் தலைமையிலான மத்திய ஆட்சியும், ஜெயா தலைமையிலான மாநில ஆட்சியும் அமெரிக்காவின் ஆதரவு ஆட்சிகளேயாகும். உதயகுமார் போன்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிபெறுகிறார்கள் என்று பிரதமரே கூறியபோதும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவ்வாறு அமெரிக்காவிலிருந்து வரும் நிதியை தடுத்து நிறுத்தவும் இல்லை. நரசிம்மராவ் ஆட்சியின் போது அயோத்தியில் பெரும் அளவிலான இராணுவத்தைக் குவித்து வைத்த பிறகும் கூட இந்துமத வெறியர்கள் பாபர் மசூதியை இடித்ததை எப்படி வேடிக்கை பார்த்ததோ அதேபோல அமெரிக்காவின் ஆதரவாளர்கள் தற்போது கூடங்குளம் அணு உலையை இடிப்பதையும் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே அணு உலையைத் தாக்குபவர்களை முன்கூட்டியே தடுக்கவேண்டும். அவ்வாறு அணு உலையை இடிக்க முயற்சி செய்தால் அதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் அணிதிரள வேண்டும்.

 தொகுத்துப் பார்க்கும் போது இன்று அணு மின் நிலையங்கள் அமைப்பதில் உள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு அணு உலைகளை மூடுவதன் மூலம் தீர்வுகாண முடியாது. மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் செய்து கொண்டுள்ள அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்களை ஒழித்துக்கட்டி ஒரு சுதேசிய மின் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலமே தீர்வு காணமுடியும். அதற்கு அணு உலைக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டு அந்நிய ஆதிக்கத்திற்கு முடிவுகட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதே தீர்வாகும்.

 அணுசக்தியை எதிர்த்துப் போராடுவது ஜனநாயக உரிமை என்றும், எனவே கூடங்குளம் அணு உலையை மூடு என்றும் ஒரு சிலர் இயக்கம் நடத்துகின்றனர். அதன் மூலம் அமெரிக்காவிடமிருந்து நிதியுதவி பெற்று செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அணு உலையை மூடக்கோருவது  ஜனநாயக உரிமை என்றால், அணு உலையைத் திற என்பதும் ஜனநாயக உரிமையே. உண்மையில் அணு உலையைத் திற என்பதே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாகும். எனவேதான் கூடங்குளம் அணு உலையைத் திற என்ற கோரிக்கையின் பின்னால் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரளவேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

* கூடங்குளம் அணு உலையைத் திற!

* அணு உலையால் மக்களுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளை, அனைத்து அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகளுடன் பேசித் தீர்வுகாண்!

* அணு உலை மீதான தாக்குதலை முறியடிக்க நடவடிக்கை எடு!

* தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து நிதி வருவதைத் தடைசெய்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு அக்டோபர், 2012
================
முழு விரிவான கூடங்குளம் குறுநூலைப் படிக்க இணைப்பில் அழுத்தவும்.  http://samaveli.tripod.com/
=================