Thursday 22 November 2012

தர்மபுரியில் சாதி வெறியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவோம்!

தருமபுரியில்... சாதிவெறியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவோம்!

தருமபுரி அருகே செல்லன் கொட்டாய் வன்னிய சாதியைச் சேர்ந்த இளம்பெண் திவ்யாவும், நத்தம் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் என்பவரும் காதலித்து கலப்பு மணம் செய்துகொண்டார்கள். அதை எதிர்த்து பா.ம.க.வைச் சேர்ந்த சாதி வெறியர்கள் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் மீது ஒரு கொடிய சாதி வெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இனிமேல் யாரும் காதலித்து கலப்புத் திருமணம் புரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் இந்த சாதிக் கலவரம்.

திட்டமிட்ட சாதிக்கலவரம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திவ்யாவும் இளவரசனும் காதலித்து வந்துள்ளனர். அதை திவ்யாவின் பெற்றோர் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளனர். திவ்யாவின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் வேறு மாப்பிள்ளைக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்தனர். எனவே திவ்யா அக்டோபர் 8ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி, இளவரசனுடன் அக்டோபர் 15ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பா.ம.க.வைச் சேர்ந்த சாதிவெறியர்கள் திவ்யாவின் பெற்றோரை நிர்ப்பந்தம் செய்து காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மணமக்கள் இருவரும் டி.ஐ.ஜி சஞ்சய் குமார், தருமபுரி டி.எஸ்.பி அஷ்ரா கர்க் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களும் இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறினர்.
எந்த ஒரு ஆணும், பெண்ணும் தமக்கான துணையை விரும்பி காதலித்து திருமணம் செய்து கொள்வது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். அது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமையுமாகும்.

ஆனால் வன்னிய சாதியைச் சார்ந்த முக்கியஸ்த்தர்களும், பா.ம.க.வைச் சேர்ந்தத் தலைவர்களும் திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்து அழைத்துவருமாறு தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்துவந்தனர். தந்தையின் வேண்டுகோளை திவ்யா நிராகரித்தார். அதன் பின்பு நவம்பர் 4ஆம் தேதி பா.ம.கவின் தர்மபுரி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் மதியழகன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் நாய்க்கன் கொட்டாயில் சாதிய பஞ்சாயத்தைக் கூட்டினர். நவம்பர் 7க்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் திவ்யாவை ஒப்படைக்க வேண்டும், இல்லையேல் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை கொளுத்திவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இவை அனைத்தும் காவல்துறையினருக்குத் தெரியும்.

பெற்றோரின் வற்புறுத்தலுக்கோ, சாதிப் பஞ்சாயத்தின் மிரட்டலுக்கோ திவ்யா பணியவில்லை. பிரிந்து வந்தால் தம்மை கொன்று விடுவீர்கள் என்று கூறி இளவரசனுடனேயே வாழ்வேன் என்று கூறிவிட்டார். இதன் காரணமாக அவரின் தந்தை நாகராஜ் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த சாவில் மர்மம் உள்ளது. அவரின் உறவினர்கள் விஷம் கொடுத்து கொன்றனர் என்ற ஒரு செய்தியும் நிலவுகிறது. அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டு விசாரணையை ஒழுங்காகச் செய்தால்தான் அதன் உண்மை புரியும்.

பா.ம.க.வைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா, மதியழகன், சரவணன், சின்னசாமி, சி.வி.மாது ஆகியோரின் தலைமையில் 30 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வன்னியர்கள் பிணத்தை எடுத்துக்கொண்டு நத்தம் காலனிக்கு சென்று கலவரத்தைத் தொடங்கினர். பின்னர் திருப்பத்தூர் மெயின் ரோட்டில் பிணத்தை வைத்து மறியல் செய்து வன்னிய மக்களை சாதிவெறியூட்டி மூன்று கிராமங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் இடித்து நொறுக்கி பெட்ரோல் குண்டுவீசி தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டில் உள்ள டி.வி., கிரைண்டர், கட்டில் போன்ற பொருட்களை வெளியே எடுத்துவந்து கொளுத்தியுள்ளனர். தங்கம், வெள்ளி மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள், புத்தகங்கள் சைக்கிள்கள் அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்கள் கடந்த ஒரு தலைமுறைக்கு மேல் சேமித்து வைத்திருந்த அனைத்து உடைமைகளும் அழிக்கப்பட்டு அம்மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் போல் மாற்றப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த சாதிக்கலவரம் நாகராசனின் தற்கொலைக் காரணமாக உணர்ச்சி வசத்தால் ஏற்பட்ட சம்பவம் அன்று. மாறாக அது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகும். அதற்கு இந்த கலப்புத் திருமணம் மட்டுமே காரணம் அல்ல. மாறாக பா.ம.கட்சி இழந்துவிட்ட தமது அரசியல் செல்வாக்கை மீட்பதற்காக சாதிவெறியைத் தூண்டி வன்னிய ஓட்டுவங்கியை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஒருபகுதியேயாகும். சென்ற மேமாதம் மகாபலிபுரத்தில் பா.ம.க.வால் நடத்தப்பட்ட சித்ராபவுர்ணமி விழா மேடையிலும், கடந்த செப்டம்பர் மாதம் அரியகுளத்தில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்திலும் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வன்னிய இனப் பெண்களை காதலித்து திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா என்று பகிரங்கமாக அழைப்புவிடுத்தார். அதன் தொடர்ச்சிதான் தற்போதைய கலவரம். இந்தக் கலவரத்தில் தொழில் முறையில் கொள்ளையடிக்கவும், கொலை செய்யவும் பயிற்சி பெற்ற ரவுடிகள் 300 பேரை வெளியிலிருந்து கொண்டுவந்து ஈடுபடுத்தியுள்ளனர்.
எனவே இது திட்டமிட்ட சாதிக்கலவரமேயாகும்.

சாதிக்கலவரத்திற்கு தமிழக அரசு துணைபோகிறது

தருமபுரி காவல் துறையினர் தெரிந்தே இந்தக் கலவரத்தை அனுமதித்துள்ளனர். குருவின் பேச்சும், நாய்க்கன்கொட்டாய் சாதியப் பஞ்சாயத்து முடிவுகளும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதாகும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நடக்க இருந்த சாதிக்கலவரத்தை தடுத்திருக்க முடியும். மேலும் சம்பவம் நடக்கும் போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தாலும் கூட கூட்டம் கலைந்திருக்கும் அதையும் செய்யவில்லை. ஆனால் கலவரத்தை ஒரு புறம் அனுமதித்துவிட்டு, மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்தாக்குதல் நடத்திவிடாது தடுத்து நிறுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களின் உடைமை இழப்புக்கு நட்ட ஈடு தருகிறோம் என்று கூறி அவர்களை அடக்கி வைத்தனர். மேலும் கலவரத்தை தூண்டியவர்களை, திட்டமிட்டுக் கொடுத்தவர்கள் என முக்கியமானவர்களை இன்னமும் வன்கொடுமை சட்டப்படிக் கைது செய்யவே இல்லை. தற்போது நடந்த முடிந்த சம்பவங்களுக்கு கீழ்மட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கண் துடைப்பு நாடகத்தை நடத்துகின்றனர். எனவேதான் சாதிவெறியர்களை எதிர்த்து தருமபுரியில் ம.ஜ.இ.க ஒட்டிய சுவரொட்டியை காவல்துறையினர் கிழித்தார்கள். நத்தம் கிராமத்திற்கு பிரச்சாரம் செய்யச் செல்லும்போது தடை ஏற்படுத்தி ம.ஜ.இ.க தோழர்கள் 20 பேரை கைது செய்தனர். இந்தக் கலவரம் பற்றி ஆய்வு செய்த அனைத்துக் குழுக்களின் அறிக்கையும் இது ஒரு திட்டமிட்டச் சாதிக் கலவரம்தான் என்று கூறுவதோடு காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
உண்மையில் இச்சாதிக் கலவரத்திற்கான முழு பொறுப்பையும் தமிழக முதல்வரும், காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளுமே ஏற்கவேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ இந்துமதவாத பிற்போக்கிலும், வர்ணாசிரம தர்மத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அத்துடன் முக்குலத்தோர், கொங்கு வேளாளர், வன்னியர் போன்ற தமிழகத்தின் பெரும் எண்ணிக்கை கொண்ட சாதிகளை தம்வசப்படுத்தி ஓட்டுவங்கியாக பயன்படுத்துவதில் திறமையானவர். மேலும் தமிழகத்தின் காவல்துறை உயரதிகாரிகளில் பலர் உயர்சாதி வெறிபிடித்தவர்களாகவும் உள்ளனர். பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சென்ற ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு அதற்கு நல்லதொரு உதாரணமாகும். இத்தகைய நிலைமைகள்தான் சாதிக்கலவரங்கள் நடத்துவதற்கு சாதிவெறிச் சக்திகளுக்கு ஊக்கமளிக்கின்றன.

தருமபுரியில் தற்போது நடந்தது போன்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்முறை இன்று தமிழகத்திலும் - நாடுமுழுவதிலும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளன. தாழ்த்தப்பட்டச் சாதியை சார்ந்த மாயாவதி முதலமைச்சராக இருந்தபோதும் உ.பி.யில் இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்த முடியவில்லையே ஏன்? இதை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி?

பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள ஆதிக்கச் சக்திகளே சாதிக்கலவரத்திற்குக் காரணம்

1947 அரசியல் அதிகார மாற்றத்திற்குப் பிறகு இந்திய அரசு நிலப்பிரப்புத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டே அந்நிய மூலதனத்தைச் சார்ந்து நின்று தரகு முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதையிலேயே பயணம் செய்கிறது. நிலச்சீர்திருத்தத்தின் மூலம் உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்கப்படுவதற்கு பதிலாக நேரடி குத்தகைதாரர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மேல்தட்டுப் பிரிவினருக்கே நிலம் வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்கப்படவே இல்லை. பசுமைப் புரட்சித் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப் புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் புதிய நிலப்பிரபுத்துவ மற்றும் பணக்கார விவசாய வர்க்கம் ஒன்று உருவாகி உள்ளது. அந்த வர்க்கம் குத்தகை, வட்டி, வாரம், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு கிராமப்புற ஆளும் வர்க்கங்களாக உருவெடுத்துள்ளது. அது பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியிலேயே கடுமையான வர்க்க முரண்பாடுகளை உருவாக்கியுள்ளன. அந்த ஆளும் வர்க்கங்கள் மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடுகின்றன. தமது சாதியிலேயே அதிகரித்துவரும் வர்க்க முரண்பாடுகளை மூடிமறைக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறியைத் தூண்டுவதன் மூலமும் ஒரு சாதிய வாக்கு வங்கியை உருவாக்குகின்றனர். அந்த நோக்கத்திற்காகத்தான் சாதிக்கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசு செயற்படுத்திவரும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்ற புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் இன்று நாட்டை நாசமாக்கி ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கிராமப்புற விவசாயம் அழிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறு நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகளில் ஒரு பிரிவினர் கிராமத்தை விட்டு நகர்ப்புறம் நோக்கி விரட்டப்பட்டுள்ளனர். அத்துடன் மத்திய மாநில அரசுகள் முதலாளித்துவப் பொதுநெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது திணிப்பதால் பஸ்கட்டணம், பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, விவசாயத்திற்கான மானியத்தை வெட்டுதல், கல்வி கடைச்சரக்காக மாற்றப்படுதல் மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது. மக்கள் வாழவே முடியாத ஒரு நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமைகளில் அனைத்து சாதியிலும் உள்ள உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து எங்கே ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு தயாராகிவிடுவார்களோ என்று ஆளும் வர்க்கங்களும், சாதி ஆதிக்க சக்திகளும் அஞ்சுகின்றன. எனவே சாதிக்கலவரங்களைத் தூண்டி வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புகின்றனர். இது ஆட்சியாளர்களுக்கும் அவசியமானதுதான். எனவேதான் சாதிவெறி சக்திகளை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்காமல் கலவரத்திற்கு துணைபோகின்றனர்.

‘குடிதாங்கியின்’ அவலநிலை

காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் குறித்து ராமதாசு பேசும்போது “நான் காதலை எதிர்க்கவில்லை” என்றும், “ஏதுமறியா பெண்களைத் திட்டமிட்டுக் கடத்தி, பலாத்காரப்படுத்தி, கல்யாணம் செய்வது, பேரம்பேசி பணம் பறிப்பது என்பதை விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை சேர்ந்த சிலர் ஒரு செயலாகவே செய்துவருகின்றனர். இதனால் வன்னியப் பெண்களின் வாழ்க்கை நாசமாக்கப்படுகிறது. இந்த நாடகக் காதலை ஏற்க முடியாது” என்றும் அவர் கூறுகிறார். இராமதாசு, தூய்மையான காதல்பற்றிப் பேசி கலப்புத் திருமணங்களை மட்டும் எதிர்க்கவில்லை. தங்களது சாதிக்குள்ளேயே ஏழை, பணக்காரர்களுக்கு இடையே வளர்ந்துவரும் காதலையும் எதிர்க்கிறார். உண்மையில் சாதிக்குள் பெற்றோர்களால் செய்யப்படும் ஏற்பாட்டுத் திருமணங்கள் பெண்களுக்கு தூக்கு கயிராகவே மாறியுள்ளது. வரதட்சணை கேட்டுக் கொடுக்க முடியாததால் எத்தனை பெண்களின் உயிர் பறிபோகிறது. பெண்களை பணம் காய்க்கும் மரமாக மாற்றும் ஏற்பாட்டுத் திருமணங்கள்தான் வன்னிய சாதிப் பெண்களுக்கும் தூக்குக் கயிறாக மாறியுள்ளது. காதல் மறுப்பு மூலம் இந்த சாதிய உள்முரண்பாடுகளை மூடிமறைக்கிறார் இராமதாசு.

ஒருங்கிணைந்த வெள்ளாளக் கவுண்டர்கள் பேரவை மாநில அமைப்பின் தலைவர் மணிகண்டன் காதல் மணம், கலப்பு மணத்தை எதிர்த்துப் பேசும்போது, “கவுண்டர் சமுதாயத்துக்குன்னு ஒரு பெரிய பாரம்பரியமும் மரியாதையும் கலாச்சாரமும் இருக்குதுங்க. ஆனால் காதல் மற்றும் கலப்புத் திருமணத்தில் எங்க சமுதாய அடையாளம் அநியாயத்துக்கு அழிஞ்சுபோகுது. இந்தச் சீரழிவை தடுத்து நிறுத்தியே ஆகனும்” என்று கூறுகிறார்.

உண்மையில் நிலப்பிரபுத்துவ சாதியப் பண்பாட்டின் பாரம்பரியப் பண்பாடு என்பது மிகவும் கேவலமானது. மடங்கள், கோவில்கள், மாடவீதிகளில் தேவதாசியை உருவாக்கியது என்ன பாரம்பரியம்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது வன்புணர்ச்சியில் ஈடுபட்டு படுகொலைகள் புரிந்தது எந்தப் பண்பாடு? விதவைகளுக்கு மறுமணத்தை மறுத்து அவர்களை காமக்கிழத்திகளாக மாற்றிக்கொள்ளும் சாதியப் பண்பாடு என்ன புனிதமானது? இன்றும் கோவில்களும் மடங்களும் காமவெறிக் கூடாரங்களாக மாறி நிலப்பிரபுத்துவ பண்பாடு நாற்றமெடுக்கிறதே இதுதான் இவர்கள் சொல்லும் பண்பாடு! பாரம்பரியம், பண்பாடு என்று கூறிக்கொண்டு காதலையும், கலப்பு மணங்களையும் மறுக்கும் இந்தக் காட்டுமிராண்டிகளை வளரும் தலைமுறை ஏற்கப் போவதில்லை. வளர்ந்துவரும் பொருளாதார நிலைமைகள், நகர்மயமாதல், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தும் காதலையும், கலப்புத் திருமணத்தையும் வளர்த்துக்கொண்டே செல்லும். இந்தச் சாதி வெறிச் சண்டாளர்களின் கனவு நொறுங்கும்.

சாதிக்கலவரம் பரவும் அபாயம்!

தர்மபுரி கலவரத்திற்குப் பிறகும் கூட பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர்கள் அடுத்தடுத்த சாதிக்கலவரங்களுக்கு தயார் செய்கின்றனர். இந்தக் கலவரம் முடிவு அல்ல ஆரம்பம்தான் என்று சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் அணிதிரள முயற்சி எடுக்கின்றனர்.
கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் மணிகண்டன் கூறும்போது “வன்கொடுமை, கலப்புத் திருமணம், நில உரிமை மீட்பு என்றெல்லாம் சொல்லி பெரும்பாலான மக்கள் மீது அநீதி இழைக்கப்படுகிறது. திராவிடர் கழகத்தின் மாணவரணி செயலாளராக இருந்தவர் கோவை செழியன். அவரே தனது இறுதி காலத்தில் திராவிடம்தான் மக்களை சீரழிக்கிறது என்று உணர்ந்து தலித் அல்லாதோர் பேரவையை உருவாக்கினார். எனவே இப்போது தலித்துகளை கார்னர் செய்வதற்கல்ல... தலித் அல்லாதவர்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளோம். காடுவெட்டி குரு உள்ளிட்ட மற்ற சமுதாயத் தலைவர்களோடு பேசியுள்ளோம். விரைவில் இந்தியா முழுதும் உள்ள தலித் அல்லாத சாதித்தலைவர்களை கூட்டி மாநாடு நடத்துவோம்” என்று சாதிவெறியை வெளிப்படுத்தியுள்ளனர். தருமபுரி கலவரத்திற்கு காரணம் பா.ம.க அல்ல என்றும், தலித்துக்களால் பாதிக்கப்பட்ட அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து நடத்தியது என்று ராமதாசு கூறியதற்கு பலன் உடனே கிடைத்துவிட்டது. இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக உயர்சாதி ஆதிக்க சக்திகள் பெரும் தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துகின்றன.

அதற்கு பதிலளித்து பேசும்போது விடுதலை தமிழ் புலிகள் அமைப்பைச் சார்ந்த தலித் தலைவர் குடந்தை அரசன் இவ்வாறு கூறுகிறார்:

“தலித்துக்கள் சார்பாக சட்டம் இருக்கிறது என்பவர்களைக் கேட்கிறேன்... தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனைபேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். அந்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசுதவறிவிட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு ஜாமீன் கிடையாது.ஆனால் இந்தச்சட்டம் தற்போது நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் இதுபோல் துணிந்து தலித்துக்கள் மீதான வன்முறைகளை அவர்களால் அரங்கேற்ற முடிகிறது” இவ்வாறு சாதிவெறியர்களுக்கு சரியான பதிலளிக்கும் இவர் அவர்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட இயக்கங்களை தனியாகக் கூட்டணி சேர்ப்பது பற்றிப் பேசுகிறார்.

“எனவே அண்ணன் திருமாவளவன், டாக்டர். கிருஷ்ணசாமி, சகோதரர் ஜான்பாண்டியன், செ.கு.தமிழரசன், ஜெகன்மூர்த்தி உள்ளிட்டத் தலைவர்களை ஒன்றிணைத்து தலித்துக்கள் மீது தொடுக்கப்படும் இந்தப்போரை எதிர்கொள்ள வேண்டும். இவர்களை ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பை நாங்கள் செய்வோம். அகில இந்திய அளவில் ராம்விலாஸ் பாஸ்வான்,மாயாவதி போன்ற தலித் தலைவர்களின் ஒருங்கிணைப்பையும் இதற்காக செய்வோம். வரலாறு மீண்டும் கற்காலத்தை நோக்கி திரும்பிட அறிவாளர்கள் அனுமதிக்கக் கூடாது” என்றும் கூறினார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒன்றிணைவது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக போராடி ஒருபோதும் உயர் சாதி ஆதிக்கத்தை ஒழித்துவிட முடியாது. அனைத்து சாதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களோடு ஒன்றிணைந்து போராடுவது மூலம் மாட்டுமே சாதிய தீண்டாமையையும், சாதிக் கலவரங்களையும் ஒழிக்கமுடியும்.

திருமாவளவன் அவர்கள் பாலன் வழிதான் எங்கள் வழி என்று பேசுகிறார். வரவேற்கிறோம். அப்படி எனில் சேரி என்றால் சிறுத்தை என்ற நிலைப்பாட்டைக் கைவிடவேண்டும். சாதியம் நிலவுவதற்கான நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும் திட்டத்தை ஏற்கவேண்டும். அனைத்து சாதியிலும் உள்ள உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர இயக்கங்களோடு இணைந்து பணியாற்ற முன்முயற்சி எடுக்கவேண்டும்.

சாதியத் தீண்டாமை ஒழிப்பு, சாதிக்கலவரத்தை தடுத்த நிறுத்துவது பற்றிய பிரச்சினையில் காங்கிரஸ், பா.ஜ.க போன்ற அகில இந்திய தரகு முதலாளித்துவக் கட்சிகளும், தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற மாநில அளவிலான தரகுமுதலாளித்துவக் கட்சிகளும் ஆதிக்க சாதிகளின் பக்கமே நிற்கின்றன. சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக அம்பேத்கரும் பெரியாரும் எவ்வளவு போராட்டம் நடத்தியிருப்பினும், அவர்களின் வழி எந்நாளும் சாதி தீண்டாமையை ஒழிக்கப் பயன்படாது. இக்கொள்கைகளையுடைய நாடாளுமன்றவாத தேர்தல் சந்தர்ப்பவாத நிலைபாட்டிலிருந்து இக்கட்சிகள் ஒரு போதும் ஜனநாயகப் பாத்திரத்தை ஆற்றமாட்டா. இக்கட்சிகள் தனித் தொகுதி தவிர பிற தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தவே தயாரில்லை. இவை எங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவத்தை பெற்றுத்தரப் போகிறது.
இடது, வலது திருத்தல்வாதக் கட்சிகள் குறிப்பாக சி.பி.எம் தலைமையில் இயங்கும் சாதி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாதி தீண்டாமையை எதிர்த்தும், சாதியக் கலவரத்தை எதிர்த்தும் பயனுள்ள பணிகளை செய்துவருகிறது. அனைத்து சாதி உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறது. இவை அனைத்தும் சரியானதும் அவசியமானதுமாகும். எனினும் அக்கட்சிகள் கடைப்பிடித்து வரும் சமரசவாதப் பாதை - ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பில் அது கொண்டுள்ள சமரசப் பாதையோடு அம்பேத்கர், பெரியாரின் சமூக சீர்திருத்தவாதத்தை ஒன்றிணைக்கின்ற சமரசப் பாதை - சாதித் தீண்டாமையை ஒழிப்பதற்கு பயன்படாது.

நாய்க்கன் கொட்டாய் பகுதியில் பாலன் தலைமையிலான நக்சல்பாரி இயக்கம் - அதன் தொடர்ச்சியாக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பலமாக இருந்தவரை சாதிவெறியர்கள் தலையெடுக்க முடியாமல் அடங்கிக் கிடந்தனர். ஆனால் தன்னை பாலனின் வாரிசு என்று கூறிக்கொள்ளும் கலைப்புவாதியும், பிழைப்புவாதிகளும் இயக்கத்தை சீரழித்து பிளவு படுத்தியதால் இயக்கம் பலவீனமடைந்தது. அத்துடன் இந்த சக்திகள் சாதிவெறியர்களுக்குத் துணைபோகும் துரோகத்தையும் செய்கின்றன. ஏற்கெனவே வெள்ளாளப்பட்டிப் பிரச்சினையில் வன்னியர் பக்கம் நின்று செயல்பட்டார்கள். இன்று இந்தக் கலவரம் தன்னியல்பாக நடந்தது, இரண்டு சாதியினர்தான் பொறுப்பு என்று கூறி உயர்சாதி ஆதிக்கச் சக்திகளுக்கு துணைபோவதுடன் மறுபுறம் சாதிக் கலவர எதிர்ப்பு கூட்டியக்கம் என்ற ஒன்றை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பது போல ஏமாற்ற நினைக்கின்றனர். இந்தத் துரோகத்தைப் புரிந்துகொண்டு, புரட்சிகர ஜனநாயக சக்திகள் முன்னிலும் பலமாக செயலாற்றுவதை தடுத்துவிட முடியாது.

சாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கு புதிய வழி

தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புகள் மற்றும் பல்வேறு உண்மை அறியும் குழுக்கள் அனைத்தும் சாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த உண்மை குற்றாவாளிகளை கைது செய்வது, சட்டங்களை கடுமையாக்குவது, தனிப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் நட்ட ஈடும் கேட்பது போன்ற கோரிக்கைகளையே முன்வைக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்டங்களும், சிறப்புத் திட்டங்களும் சாதி, தீண்டாமையை ஒழிக்கபோவதில்லை. சாதிக் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதுமில்லை.

சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாக இருப்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், அரசியல் மற்றும் பண்பாடுமேயாகும். அதாவது அகமணமுறை, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலைமுறை, பரம்பரைச் சடங்குகள், தீண்டாமை, தீண்டாதவருக்கு பொது உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பேயாகும். இவை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் மேற்கட்டுமானமேயாகும். இவற்றிற்கு அடித்தளமாக இருக்கும் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதே அதற்குத் தீர்வாகும். இந்திய அரசு தரகுமுதலாளித்துவ, நிலப்பிரத்துவ ஆளும் வர்க்கங்களை பாதுகாக்கின்ற அரசாகும். எனவே இந்திய அரசை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் தூக்கியெறிவது ஒன்றுதான் சாதி, தீண்டாமைக்கும் சாதிக் கலவரங்களுக்கும் முற்றுபுள்ளி வைக்கும்.

எனவே உடனடியாக சாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக, சாதிக் கலவரங்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து சாதியிலும் உள்ள உழைக்கும் மக்கள் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம்!

* காதல் செய்வதும் கலப்பு மணம் புரிவதும் ஜனநாயக உரிமை!

* தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறி தாக்குதல் நடத்திய பா.ம.க வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடு!

* தாழ்த்தப்பட்டோர் மீது சாதி வெறியர்கள் தொடுக்கும் வன்கொடுமைகளை
முறியடிக்க அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!

* நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும் சாதியத்தையும் ஒழிக்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
நவம்பர் 2012