Friday 26 April 2013

சமரன் 2013 மே நாள் சூளுரை

மே நாளில் சூளுரைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

      அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது புதியகாலனி ஆதிக்கத்திற்காகத் தொடுத்துவரும் போர்கள்
உக்கிரம் அடைந்துவரும் ஒரு சூழலில்: ஒடுக்கப்பட்ட நாடுகளும் தேசிய இனங்களும் அதனை எதிர்த்து நடத்திவரும் விடுதலைப் புரட்சிகள்
எழுச்சிபெற்றுவரும் ஒரு சூழலில், இவ்வாண்டு மே நாள் இயக்கத்தை எதிர்கொண்டுள்ளோம்.

அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்போம்!

      அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மேலாதிக்கத்திற்காக தனக்கு அடங்க மறுக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது ஆக்கிரமிப்புப் போர்களை
நடத்தி பொம்மை ஆட்சிகளை உருவாக்குவது தொடர்கிறது. தனது நட்பு நாடான பிரிட்டன் மற்றும் கூட்டாளிகளான நேட்டோ நாடுகளுடன் கூட்டணி
அமைத்துக்கொண்டு அத்தகைய கொடிய யுத்தங்களை அமெரிக்கா நடத்திவருகிறது.

      அமெரிக்க ஏகாதிபத்தியம், ‘பயங்கரவாதத்தை ஒழிப்பது’, ‘பேரழிவு ஆயுதங்களை அழிப்பது’ எனும்பேரால் ஆப்கனிலும், ஈராக்கிலும் பொம்மை
ஆட்சிகளை நிறுவிக்கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நட்பு நாடுகளான ஏமன், எகிப்து, லிபியா போன்ற நாடுகளிலும்கூட அம்மக்களின்
எழுச்சியைப் பயன்படுத்திக்கொண்டு, ‘மனித உரிமைப் பாதுகாப்பு’, ‘சர்வாதிகார எதிர்ப்பு’ என்ற பேரால் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு
ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்தி தனது அடிவருடிகளைக் கொண்டு பொம்மை ஆட்சிகளை நிறுவிக்கொண்டது.

      தற்போது ஈரான் மற்றும் வடகொரியாவின் மீது அணுஆயுதப் பூச்சாண்டிகாட்டி தாக்குதல் நடத்துவதற்கு தயாரிப்பு செய்துவருகிறது. உலகை ஆயிரம் முறை அழிக்கவல்ல அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள அமெரிக்கா ‘அணு ஆயுத ஒழிப்பு’ என்று பேசுவது ஒரு மோசடியேயாகும்.

      வடகொரியாவிற்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய அணுயுத்த அச்சுறுத்தல் என்பது, வடகொரியாவில் பொம்மை ஆட்சியை
உருவாக்குவது; ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது; சீனாவை அடக்கி வைப்பது ஆகிய நோக்கங்களைக் கொண்டதாகும். அதே அடிப்படையில்தான் மனித உரிமை மீறல் என்ற பேரால் இலங்கையில் இனவெறி இராஜபட்சே கும்பலைப¢ பணியவைத்து இலங்கையை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரவும் இந்தியப் பெருங்கடலை அமெரிக்க இராணுவத் தளமாக பயன்படுத்தவும்தான் இந்திய அரசுடன் கூட்டு சேர்ந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஈழத் தமிழினத்தின் விடுதலைக்குத் துரோகம் இழைத்துவருகிறது.
ஈழத் தமிழருக்கு எதிரான அமெரிக்க இந்தியக் கூட்டுச் சதிகளை முறியடிப்போம்!

      இரு கொரியாவும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து போர்த் தயாரிப்பு செய்யும் அமெரிக்கா, இலங்கையின் இறையாண்மை
ஒருமைப்பாடு என்று கூறி ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, இன அழிப்புப் போர்க் குற்றவாளி இராஜபட்சேவைக் காப்பாற்றி
வருகிறது. அதன் ஒரே குறிக்கோள் இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை நிறுவி இந்தியப் பெருங்கடலை தமது யுத்தவெறிக்குத் தளமாகப் பயன்படுத்துவது, இலங்கையில் சீனாவின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்துவது என்பதேயாகும். அதற்காகவே இந்தியாவுடன் கூட்டணி அமைத்துச் செயல்பட்டுவருகிறது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு இந்தியா சேவை செய்யும், அதற்குக் கைமாறாக தென் ஆசியாவில் இந்தியாவின் துணை மேலாதிக்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்கும். அதாவது இலங்கை மீதான இந்தியாவின் விரிவாதிக்க நலன்களை - இலங்கையின் முழுச் சந்தையையும் கைப்பற்றுவது என்ற இந்திய நலன்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்த அடிப்படையில்தான் அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டுச்
சேர்ந்து ஐ.நா. மனித உரிமைத் தீர்மானத்தை இராஜபட்சே கும்பலுக்கு ஆதரவாக நிறைவேற்றின. எனவே ஈழத் தமிழர்கள் இராஜபட்சே கும்பலை
மட்டுமல்ல, அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையையும் எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டும்தான் தமிழீழத்தை அமைக்க முடியும். அதற்கு நாம் அமெரிக்க-இந்திய கூட்டுச் சதிகளை எதிர்த்துப் போராடுவது மூலம் மட்டுமே ஈழத்தமிழர்களின்
விடுதலைக்கு ஆதரவளிக்க முடியும்.

இந்திய அரசின் தேசிய ஒடுக்குமுறைகளை எதிர்ப்போம்!

      இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களான தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்களுக்காக அண்டை நாடுகளில் தலையிட்டு தேசிய இன
ஒடுக்குமுறைகளில் ஈடுபடுவது மட்டுமல்லாது உள்நாட்டிலும் தேசிய இனங்களை ஒடுக்கி வருகிறது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்
கோரிக்கை இந்தியாவில் சட்டவிரோதமாக்கப் பட்டுள்ளது. காஷ்மீர், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களில் இராணுவ ஒடுக்குமுறைகளைக்
கட்டவிழ்த்துவிட்டு தேசிய ஒருமைப்பாடு என்று நியாயம் கற்பிக்கிறது. அத்துடன் இந்திய அரசு அனைத்து தேசிய இன மொழிகளையும், ஆட்சி
மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஏற்க மறுத்து இந்தி மொழி ஆதிக்கத்திற்கு சேவை செய்கிறது. இந்தி அல்லது ஆங்கிலமே அனைத்துத்
துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் தமிழகத்தின் பகுதியான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டதால் தமிழக மீனவர்களின்
மீன்பிடிப்பு உரிமை பறிபோய்விட்டது. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். எனவே தாய்மொழி தமிழ்மொழி
ஆட்சிமொழி பயிற்றுமொழியாக்கப் படவும் கச்சத்தீவை மீட்கவும் அனைத்துத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்குப் போராடுவதும், காஷ்மீர்,
அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் அணிதிரளவேண்டும்.

அன்னிய மூலதனத்தின் ஆதிக்கமும் தொழிலாளர்கள் மீதான கொத்தடிமைத்தனமும்!

      அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகள் முன்வைத்த உலகமய, தாராளமயக் கொள்கைகள் உலகமுதலாளித்துவ
நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ள போதிலும் அதே கொள்கைகளைத் தீவிரமாக அமூல்படுத்துவதாக மன்மோகன் கும்பல் மானவெட்கமின்றி
கூறுகிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே சுதந்திர வர்த்தகக் கொள்கைகளைக் கைவிட்டு
காப்புக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும்போது இந்தியாவின் கதவுகளை அன்னிய மூலதனத்திற்கு அகலத் திறந்துவிடுகிறது தேசத்துரோக
மன்மோகன் கும்பல்.

      உலக முதலாளித்துவ நெருக்கடி இந்தியாவைக் கடுமையாக பாதித்துள்ளது. ஏற்றுமதி வீழ்ச்சி, உற்பத்தி மந்தம், அன்னிய செலாவணி
பற்றாக்குறை என நாடு திவாலாகிவருகிறது. எனினும் மன்மோகன் கும்பல் ஆயுள்காப்பீடு, வேளாண் வணிகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும்
திவாலாகிவிட்ட பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரைவார்க்கிறது. ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடிகளை இந்திய மக்கள் மீது திணிக்கிறது.

      அன்னிய மூலதனத்தின் வருகையால் தொழில், விவசாயம் அழிந்து தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், விவசாயிகள் தற்கொலைக்கும்
தள்ளப்படுகிறார்கள். பன்னாட்டுக் கம்பெனிகளும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடித்து கொழுத்துவருகின்றன.

      அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகளைக்கூட பன்னாட்டுக் கம்பெனிகள் மதிப்பதில்லை. தொழிலாளர்கள் சங்கம் சேருதல், கூட்டுப்பேரம் உள்ளிட்ட தொழிற்சங்க உரிமைகளுக்கு எதிராக பன்னாட்டு-உள்நாட்டு பெருமுதலாளிகள், காவல்துறை, அரசு நிர்வாகம் ஆகியவைக் கூட்டணி  அமைத்துக்கொண்டு தொழிலாளர்கள் மீது வன்முறைகளை ஏவிவருகின்றனர்.

      பொதுத்துறை நிறுவனங்கள், தனியார்துறை நிறுவனங்கள் அனைத்திலும் நிரந்தரத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு காண்டிராக்ட்
தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துகின்றனர். அவுட்சோர்சிங், காண்டிராக்ட் முறையின் கீழ் குறைந்தபட்ச ஊதியமோ, பணிப்பாதுகாப்போ
இல்லாததோடு வேலைநேரம் 12 மணி நேரத்துக்கு மேல் உயர்த்தப்பட்டு தொழிலாளர் கொத்தடிமைகள் போல் கசக்கிப் பிழியப்படுகின்றனர்.

      மறுபுறம் பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளும் கொள்ளை லாபம் அடைகின்றனர். தாராளமயக் கொள்கைகளால் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் செல்வங்கள் ராக்கட் வேகத்தில் அதிகரிக்கிறது. இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை (ரூ. 5,500 கோடி சொத்துள்ளவர்கள்) சென்ற ஆண்டு 48ஆக இருந்தது இந்த ஆண்டு 55ஆக உயர்ந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குகின்ற அரசும் காவல்துறையும் தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் முதலாளி முகேஷ் அம்பானிக்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வழங்குகிறது. இதன் மூலம் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசல்ல, கார்ப்பரேட் கும்பலின் சர்வாதிகார அரசு என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. எனவே மன்மோகன் கும்பலின் காலம் கார்ப்பரேட்களுக்கு பொற்காலம். தொழிலாளி வர்க்கத்துக்கோ அது ஒரு கற்காலமாகவே அமைந்துள்ளது.

அந்நிய மூலதனத்தின் ஆதிக்கத்தாலும், மின்வெட்டாலும் உழவு, தொழில், நெசவு, சில்லரை வணிகம் அழிகின்றன!

      இந்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய காலனிய வேளாண் கொள்கைகள் வேளாண் துறையில் நிலச்சீர்த்திருத்தத்தை மறுத்து, நிலங்கள்
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு குழும விவசாயம் செய்வதற்காக தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் சட்டத்திலிருந்து தனியார் கம்பெனிகளுக்கு விதி விலக்களித்து மன்மோகன் கும்பல் ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. இந்திய நாட்டின் விளை நிலங்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கு வேளாண்மைக்கும், கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் மலிவான விலைக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

      மறுபுறம் விவசாயிகளுக்கு மானியத்தை ஒழித்தல், வெளி நாடுகளிலிருந்து மலிவான விலையில் உணவுப் பொருட்களை இறக்குமதி
செய்வதற்கான தடைகளை அகற்றுதல் போன்ற காரணங்களால் விவசாயம் அழிந்து 2.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அத்துடன் தமிழகத்தில் 16 மணி நேரம் தொடர் மின்வெட்டு, ஆற்று நீர் உரிமை பறிபோதல் போன்ற காரணங்களும் சேர்ந்து கொண்டு தமிழகமே
வறட்சிப் பிரதேசமாக மாறியுள்ளது. விவசாயிகளின் துயரத்தை வெளியிட வார்த்தைகளே இல்லை.

      சில்லரை வணிகத்தை அன்னிய மூலதனத்திற்குத் திறந்துவிடுவதால் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என வர்த்தக அமைச்சர்
கூறுகிறார். ஆனால் பல கோடி சிறுவணிகர்களின் வேலையை அது பறிக்கும் என்பதை மூடிமறைக்கிறார். பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்கள்
ஏகபோகக் கொள்முதல் செய்வது, அடாவடியாக விலைகளைக் குறைப்பது, பணப் பட்டுவாடாவை தாமதப் படுத்துவது ஆகியவற்றின் மூலம்
விவசாயிகளும் சிறு குறுதொழில் புரிகின்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களும் இதனால் பாதிப்படைவார்கள். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு
வணிகர்களையும் தற்கொலைக்குத் தள்ளும்.

      அந்நிய மூலதனத்திற்கு அனுமதி, தொடர் மின்வெட்டு, டீசல் மற்றும் ஜெனரேட்டர் மானியம் வழங்காதது, வங்கிக் கடன் கெடுபிடிகள், மத்திய
அரசின் பஞ்சு ஏற்றுமதிக் கொள்கையால் நூல்விலை உயர்வு போன்ற காரணங்களால் சிறு குறுத் தொழில்களும், நெசவுத் தொழிலும் நலிந்து விட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களில் இத்தொழில்களில் ஈடுபட்டுள்ள 60 லட்சம் பேர்களின் வாழ்க்கை கேள்விக்
குறியாகியுள்ளது. 60 லட்சம் பேர் பங்கேற்கக்கூடிய உள்நாட்டுத் தொழில்துறைக்கு மின்சாரம் வழங்காமல் வெறும் 1.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குகிறது. கேட்டால் போட்டி நிறைந்த உலகில் அந்நிய முதலீட்டை
கவர்வது தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என்று தமிழக அரசு கூறுகிறது. சுதேசியத்தை அழித்து விதேசியத்துக்கு வக்காலத்து வாங்குகிறது. இவ்வாறு
தாரளமயமாக்கல் கொள்கைகளால் “விதேசியம் ஒளிர்கிறது, சுதேசியம் இருள்கிறது”.

      ஜெயலலிதா அரசாங்கம் தமிழகத்தில் சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து
ரூ.20,000 கோடி வறட்சித் திட்டச் செலவு என்று அறிவித்துள்ளது. ஆனால் ரூ.2000 கோடிகூட நிதி ஒதுக்கமுடியவில்லை. நிதி வேண்டி மத்திய
அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஜெயலலிதா. ஆனால் மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பலோ நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி
மக்களுக்கு வழங்கும் மானியத்தை வெட்டி வருகிறது. எரிவாயு உருளை மானியத்தையும் வெட்டியதோடு டீசல், பெட்ரோல் விலைகளை உயர்த்தி
மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது. ஆதார் அட்டைமூலம் பொது விநியோகத்தையும்  ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.
இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் தாராளமயக் கொள்கைகள் ஆளும் வர்க்கங்களுக்கு சொர்க்கத்தையும் மக்களுக்கு
நரகத்தையும் கொண்டுவந்துள்ளது. ஜெயலலிதா அரசாங்கம் 110 விதிகளின்கீழ் அறிக்கை வாசிப்பதாலோ, மின்வெட்டுக்கு கருணாநிதியைக் காரணம் காட்டுவதாலோ, வறட்சியை மூடிமறைக்க இலட்சங்களை காட்டுவதாலோ, போதிய நிதி இன்றி வறட்சித்திட்டம் அறிவிப்பதாலோ தமிழக மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது. எனவே அந்நிய மூலதன ஆதிக்கத்தை எதிர்த்தும், ஜெயா அரசின் மாய்மாலங்களில் ஏமாறாமல் மத்திய மாநில எதிர்த்தும் தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைக்காகவும் வறட்சி நிவாரணத்திற்காகவும் தமிழ் மக்கள் போராடுவது ஒன்றுதான் வழியாகும்.

சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம்!

      இந்திய நாட்டில் நிலவும் முதலாளித்துவத்துக்கு முந்தைய அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே சாதி தீண்டாமைக் கொடுமைகள்
புரையோடிக் கிடப்பதற்கான காரணமாக உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில் தீர்மானிப்பது, அகமணமுறை, படிநிலை முறையில் பிறப்பால்
உயர்வு தாழ்வு என்ற சாதியமுறை தொடர்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது உரிமை மறுப்பு, ஜனநாயக உரிமை மறுப்பு, தனிச்சேரி முறைகள்
போன்ற தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்கின்றன. ஆனால் அண்மைக்காலங்களில் இராமதாசு தலைமையில் 50க்கும் மேற்பட்ட சாதிவெறி அமைப்பினர் ஒன்றுகூடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கலவரத்தை நடத்துகின்றனர். வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீக்கவேண்டும்; காதல் திருமணங்களை எதிர்த்து சட்டத்திருத்தம் வேண்டும்; தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடுகளை இரத்து செய்யவேண்டும் என்று கூறி சாதி, தீண்டாமைக்கு ஆதரவாக இயக்கம் நடத்துகின்றனர். சாதிக் கலவரங்கள் மூலம் தமிழகத்தை கற்காலத்திற்கு இட்டுச்செல்ல துடிக்கின்றனர். கிராமப்புற ஆதிக்கத்தை நிலை நாட்டவும், தாழ்த்தப்பட்ட மக்கள்மீது பண்ணை அடிமைமுறையைத் திணிக்கவும், சாதிவெறியைத் தூண்டி வாக்குவங்கியை உருவாக்கவுமே சாதிக் கலவரங்கள் நடத்தப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கான தலித் அமைப்புகள் சாதி, தீண்டாமையை எதிர்த்து, சாதிவெறியர்களை எதிர்த்து அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் ஒரு பொதுவான சாதி ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஒன்றுபடுத்தத் தவறிவிட்டன. எனவே சாதிக் கலவரங்களை எதிர்த்தும் சாதி தீண்டாமையை ஒழிக்கவும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் அணி திரளவேண்டும்.

      எனவே இம் மே நாளில் தேச விடுதலைக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள
வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.

* ஈழத் தமிழருக்கு எதிரான அமெரிக்க இந்திய கூட்டுச் சதிகளை முறியடிப்போம்!

* இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளையும், தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!

தாய்மொழி, தமிழ்மொழியை ஆட்சிமொழி பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!

* தமிழர் நலன்காக்க, மீனவர் உரிமை காக்க கச்சத்தீவை மீட்கப் போராடுவோம்!

* பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்கான நிரந்தர வேலை ஒழிப்பு, ஒப்பந்தக் கூலிமுறை, வேலை நேரம் அதிகரிப்பு போன்ற கொத்தடிமை முறைகளை எதிர்த்துப் போராடுவோம்!

* தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவோம்!

* புதியகாலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்! நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

*சாதிவாத அரசியலை எதிர்ப்போம்! சாதி, தீண்டாமையை ஒழிக்கப் போராடுவோம்!

* அந்நிய மூலதன ஆதிக்கத்தாலும் தொடரும் மின்வெட்டாலும் உழவு, தொழில், நெசவு சில்லரை வர்த்தகம் அழிவதை எதிர்த்துப் போராடுவோம்!

* தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைக்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!

*தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துவிட்டு முழுமையான நிவாரணம் வழங்காததை எதிர்த்துப் போராடுவோம்!

* உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

 
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

மே 1, 2013

Thursday 25 April 2013

கழகத்தின் மே நாள் அரக்கோண பொதுக்கூட்டமும், ஆர்ப்பாட்ட ஊர்வலமும்.


சமரன்: 2013 மே நாள் சூளுரை


 
மே நாளில் சூளுரைப்போம்!
 
அமெரிக்காவின் புதியகாலனி ஆதிக்கத்தையும் யுத்தவெறிக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!
 
நாடுகளின் விடுதலைக்காகவும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!

அமெரிக்காவின் ‘ஆசிய பசிபிக் நூற்றாண்டுத் திட்டத்தை’ எதிர்ப்போம்!
 
ஈழத் தமிழருக்கு எதிரான அமெரிக்க இந்திய கூட்டுச் சதிகளை முறியடிப்போம்!

இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளையும், தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!
 
தாய்மொழி, தமிழ்மொழியை ஆட்சிமொழி பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!

தமிழர் நலன்காக்க, மீனவர் உரிமை காக்க கச்சத்தீவை மீட்கப் போராடுவோம்!

பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்கான நிரந்தர வேலை ஒழிப்பு, ஒப்பந்தக் கூலிமுறை, வேலை நேரம் அதிகரிப்பு போன்ற கொத்தடிமை முறைகளை எதிர்த்துப் போராடுவோம்!

தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவோம்!

புதியகாலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்! நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!

சாதிவாத அரசியலை எதிர்ப்போம்! சாதி, தீண்டாமையை ஒழிக்கப் போராடுவோம்!

அந்நிய மூலதன ஆதிக்கத்தாலும் தொடரும் மின்வெட்டாலும் உழவு, தொழில், நெசவு சில்லரை வர்த்தகம் அழிவதை எதிர்த்துப் போராடுவோம்!

தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைக்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துவிட்டு முழுமையான நிவாரணம் வழங்காததை எதிர்த்துப் போராடுவோம்!

உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!

 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு


மே 1, 2013

Tuesday 9 April 2013

அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம், ஈழத் தமிழருக்கு மாபெரும் துரோகம்! கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழீழமே ஈழமக்களின் அரசியல் விடுதலைக்கு ஒரே வழி!




மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம், ஈழத் தமிழருக்கு மாபெரும் துரோகம்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது ஒரு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டது.

இவ்வாண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். “கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைக் கழகம் வலியுறுத்திய தீர்மானத்தின்படி இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் குவித்துள்ள இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; புலம் பெயர்ந்த தமிழர்களை வடக்கு, கிழக்கு பகுதியில் குடியமர்த்தி பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காணவேண்டும்” என்று அந்த அறிக்கை வலியுறுத்தியிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்ற அடிப்படையில்தான் அதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

அமெரிக்கா முன்வைத்த வரைவுத் தீர்மானம் ராஜபட்சே கும்பலை இன அழிப்புப் போர்க்குற்றவாளி என்றோ, இலங்கையில் நடந்தது ஒரு இன அழிப்புப் போர்தான் என்றோ குறிப்பிடாமல் ஒரு நீர்த்துப் போன தீர்மானமாகவே முன்வைக்கப்பட்டது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நா. அதிகாரிகள் கட்டுப்பாடுகள் இன்றி இலங்கையில் விசாரணை மேற்கொள்வது பற்றித்தான் அந்த அறிக்கை கூறியிருந்தது.

ஆனால் அமெரிக்கா முன்வைத்த இறுதித் தீர்மானத்திலோ இவ்விரண்டும் நீக்கப்பட்டுவிட்டது. மனித உரிமைகள், சர்வதேச சட்ட விதிகள் மீறல் குறித்து “நம்பத்தகுந்த சர்வதேச விசாரணைக்குழு” என்பதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கமே “சுதந்திரமான நம்பத்தகுந்த விசாரணை நடத்தவேண்டும்” என்பதாக மாற்றப்பட்டுவிட்டது. இலங்கைக்குள் ஐ.நா. அதிகாரிகள் தடையின்றி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவேண்டும் என்பதும் நீக்கப்பட்டு இலங்கை அரசின் அனுமதியுடன் தான் இயங்கவேண்டும் என்று மாற்றப்பட்டுவிட்டது.

அதாவது “இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு கவனம் செலுத்தவேண்டும். மறுவாழ்வுப் பணிகளில் இலங்கை அரசு முன்னேற்றம் கண்டிருப்பதை வரவேற்கிறோம். மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கவலைகளை எதிர்கொள்ள எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளையும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளையும் மேற்கொள்ள ஊக்கப்படுத்துகிறோம். இந்தப் பணிக்காக உதவி செய்ய அமெரிக்கா தயாராயிருக்கிறது. மேலும் அதனை நடைமுறைப்படுத்த ஐ.நா. தொழில்நுட்ப ரீதியான பங்களிப்பை வழங்கவேண்டும். சர்வதேச சமூகமானது இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு உதவவேண்டும். மக்கள் நலன்சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்.” என்று அந்த அறிக்கை இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. வரைவு அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டனம், வலியுறுத்தல் என்றிருந்த வார்த்தைகளும் நீக்கப்பட்டு ஆலோசனைகள், ஊக்கப்படுத்தல் என்று மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் இலங்கை அரசுக்கு ஆதரவளித்து ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது.

அமெரிக்கா இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான காரணம் என்ன?

அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்காக தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்துள்ளது. விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி - தமிழ் ஈழத்தைக் கைவிடச் செய்து - அவர்களைக் கொண்டு இலங்கை அரசைத் தமக்கு அடிபணிய வைக்கும் தந்திரத்தை அமெரிக்கா மேற்கொண்டது. அதற்காகத்தான் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்து அவர்களுக்கு சர்வதேச ரீதியான நிதி உதவிகளையும், ஆயுத உதவிகளையும் தடைசெய்தது. இலங்கைக்கு தனது அடிவருடி இஸ்ரேல் அரசு மூலம் ஆயுதங்கள் வழங்க உதவியது. இறுதி யுத்தத்தில் ஈழத் தமிழினம் அழிக்கப்படுவதை மௌனமாக அங்கீகரித்தது. எனவே அமெரிக்காவும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஒரு நாடுதான். இலங்கை அரசு அமெரிக்காவின் பேச்சைக் கேட்காமல் இரசியா, சீனா உதவியுடன் விடுதலைப் புலிகளை அழித்தொழித்தது. தற்போது சீனாவின் பக்கம் இலங்கை சாய்வதை தடுத்து நிறுத்தி தன்பக்கம் கொண்டு வரவே அமெரிக்கா மனித உரிமை பற்றிப் பேசுகிறது.

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா தலையிட்டு சிதைத்ததன் விளைவாகத்தான் அந்தத் தீர்மானம் இந்த அளவுக்கு மாற்றப்பட்டது என்பது ஒரு பகுதிதான் உண்மையாகும். ஆசியா மீதான அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களும், இலங்கை மீதான இந்தியாவின் துணைமேலாதிக்க நலன்களும்தான் அமெரிக்க-இந்திய-இலங்கை நாடுகளுக்கிடையில் திரைமறைவில் பேரங்கள் நடப்பதற்கும் தீர்மானம் நீர்த்துப் போவதற்கும் காரணங்களாக அமைந்தன.

இந்திய அரசு, ஐ.நா தீர்மானம் குறித்து இலங்கை அமெரிக்காவுடன் பேசவேண்டும் என்று ஆரம்பம் முதலே வற்புறுத்தியது. அமெரிக்க அடிவருடி, அரசியல் மாமா சுப்பிரமணிய சாமியை இலங்கைக்கு அனுப்பி - அமெரிக்காவோடு பேசுவதற்கு ஏற்பாடு செய்தது. சுப்பிரமணிய சாமியின் ஏற்பாட்டுடன் இலங்கை அமெரிக்காவுடன் திரைமறைவில் பேரம் பேசியே - இந்தியாவின் ஆலோசனை அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் ஈழத் தமிழருக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க - இந்திய கூட்டுச் சதியே அதற்கான காரணமாகும். அதிலும் அமெரிக்காதான் முதன்மை பாத்திரத்தை வகித்தது.

அதை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரே ஒப்புக் கொள்கிறார்: “ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான விவகாரத்தில் இந்த நடைமுறைகள் அனைத்திலும் நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றினோம். இன்னும் சொல்லப்போனால், அதில் இந்தியா மேற்கொண்ட திருத்தங்களை நாங்கள் வரவேற்றோம். எனவே இந்த விசயத்தில் இந்தியா அளித்த ஒத்துழைப்பில் நாங்கள் திருப்தி அடைந்தோம். இலங்கைத் தீவு மீது இந்தியாவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ள காரணத்தால், இந்த விவகாரத்தில் மேலும் முன்னேற்றத்தை எட்ட இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயல்படுவது சர்வதேச சமூகத்துக்கு அவசியமாகும். இந்தியாவின் தாக்கம் காரணமாக இலங்கைக்கு எதிரான தீர்மானம் நீர்த்து போனதாகக் கூறப்படுவதை நான் நிராகரிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இதிலிருந்து இந்திய-அமெரிக்க கூட்டுச் சதியையும், அமெரிக்காவின் முதன்மையான பாத்திரத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்காவின் “பசிபிக் நூற்றாண்டுத் திட்டமும்” இலங்கையும்

2011ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆசியாவை மையமாகக் கொண்ட “அமெரிக்காவின் பசிபிக் நூற்றாண்டு” கொள்கைத் திட்டத்தை வெளியிட்டார். ஈராக்கின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கனிலிருந்து படைகளைத் திருப்பப்பெற இருக்கும் நிலையில் ஆசிய-பசிபிக் பிராந்தியம் அரசியல் முக்கியத்துவம் உடையதாக மாறிவருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, ஆசியப் பகுதியில் குவிந்துள்ள கனிமவளங்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை முதல் இந்தோனேசியாவின் மலாக்கா நீர் சந்திப்பு வரையிலான பசிபிக், இந்திய பெருங்கடல்கள் முழுவதும் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் இராணுவ மேலாண்மையை நிறுவுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்துமகா சமுத்திரம் மையமாக மாறியுள்ளது. எனவே, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு பெருகிவருவது தனக்கு ஒரு அச்சுறுத்தலாகவே அமெரிக்கா கருதுகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளி நாடுகள் சீனாவின் இராணுவம் நவீனப்படுத்தப்படுவதையும், விரிவுபடுத்தப் படுவதையும் சந்தேகத்துடனேயே பார்க்கின்றன. மத்திய கிழக்கு முதல் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் வரை சீனா, எண்ணெய் மற்றும் ஆதாரவளங்கள் மீது அமெரிக்காவிற்கு போட்டியாகத் திகழ்கிறது. எனவே ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சக்திகளின் சமநிலையில் அமெரிக்காவின் மேல்நிலையைக் கொண்டுவர அமெரிக்கா தனது இராணுவ வலிமையைப் பெருக்க திட்டமிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் இராணுவத்துறைச் செயலாளர் லியோன் பனிட்டா “அமெரிக்கா ஆசியாவில் தனது படைகளை மறு சமனிலைப்படுத்த உள்ளது” என அறிவித்தார். பசிபிக்-அட்லாண்டிக் பகுதியில் அமெரிக்காவின் இராணுவம் 50:50 என நிலைகொண்டுள்ளதாகவும் அதை 2020ல் 60:40 என மாற்றியமைப்போம் என்றும் அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் அதன் இராணுவம் அதிகப்படுத்தப்பட உள்ளது. அதில்தான் அமெரிக்காவிற்கு இலங்கையின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.

ஆசியாவில் சீனாவின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் விதத்தில் அமெரிக்கா ஏற்கெனவே ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளோடு கூட்டணி அமைத்துள்ளது. தற்போது கிழக்கு ஆசியா மற்றும் தென் ஆசியாவில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு இந்தியாவைத் தனது கூட்டாளியாக மாற்றிவருகிறது. அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்கள் அதற்கான அடிப்படைகளை வகுத்துள்ளது.

யுத்ததந்திர ரீதியாக ஆசியாவை தமது கட்டுபாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா மனித உரிமைப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. தனது நட்பு நாடுகள் மீதும் கூட மனித உரிமை பேரால் தலையிட்டு ஆட்சி மாற்றம் மூலம் (Regime Change) தமது பொம்மை ஆட்சியை நிறுவி வருகிறது. ஆப்கன், ஈராக், எகிப்து, லிபியா போன்ற நாடுகளின் ஆட்சியை மனித உரிமைபேரால் கவிழ்த்து தமது பொம்மை ஆட்சியை அமெரிக்கா நிறுவியுள்ளது. ஆனால் பர்மாவில் மனித உரிமையை முன்வைத்து, மிரட்டி இராணுவ ஆட்சியாளர்களுக்கும், எதிர்க்கட்சிக்கும் சமரசம் உருவாக்கி இராணுவ ஆட்சியை தமக்கு சாதகமாக மறு அணிச்சேர்க்கை மூலம் (Regime Realignment) மாற்றிக்கொண்டது. பர்மிய அரசு அமெரிக்காவுடன் உடன்பாட்டிற்கு வந்தவுடன் அந்நாட்டில் பர்மிய அரசு நடத்தும் மனித உரிமை மீறல் பிரச்சினையை அமெரிக்கா கைகழுவி விட்டது. அதே போன்றுதான் மனித உரிமை பேசி இலங்கை இராஜபட்சே கும்பலை மிரட்டி இலங்கை அரசை மறு அணிசேர்க்கை மூலம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கிறது. மனித உரிமை என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை புதிய காலனியத்துக்கான ஒரு கருவியேயாகும். ஈழத் தமிழினத்தைப் பலிகொடுத்து இலங்கையை விழுங்கத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழினத்தின் விடுதலை சாத்தியமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இரசிய-சீன ஏகாதிபத்திய அணி போர்க்குற்றவாளி இராஜபட்சேவைக் காப்பாற்றுவதோடு, இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்குத் துணை போகின்றன. எனவே ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே - தமிழ் ஈழ விடுதலையை வென்றெடுக்க முடியும். இரு ஏகாதிபத்திய அணிகளில் பிரதானமாக அமெரிக்க அணியை எதிர்த்துப் போராடுவதுதான் தமிழ் ஈழம் காண்பதற்கான வழியாகும்.

ஈழத் தமிழின அழிப்புக்குத் துணைபோகும் இந்தியா

இந்திய அரசு திரைமறைவில் அமெரிக்காவோடு பேசி அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை அரசுக்கு சாதகமாக மாற்றிய பிறகுதான் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழக மாணவர்களின் போராட்டத்தையோ, உலகம் முழுவதும் நடந்த தமிழ் மக்களின் போராட்டங்களின் நிர்ப்பந்தங்களாலோ இந்திய அரசு அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தனியாக இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரத் தயாரில்லை. கூட்டணிக் கட்சியான திமுக வெளியேறிய போதும் கூட அதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவும் இல்லை.

இந்திய அரசு கடைப்பிடித்து வரும் தென் ஆசிய மேலாதிக்கத்திற்கான விரிவாதிக்க வெளியுறவுக் கொள்கைகள், உள் நாட்டில் தேசிய இன ஒடுக்குமுறைக் கொள்கைகள்தான், இராஜபட்சே அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவதற்கான காரணங்களாக உள்ளன.

இந்திய அரசு ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஒருபோதும் ஏற்காது என்று கூறுகிறது. ஆனால் இந்திய அரசு அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு சிறுசிறு நாடுகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. பாகிஸ்தானில் தலையிட்டு அதை இரண்டாக உடைத்தது. மாலத்தீவின் உள்விவகாரங்களில் அண்மையில் தலையிட்டது. இலங்கையின் மீது தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிட்டு இலங்கை இனவெறி அரசை பாதுகாத்துவருகிறது. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போரை நசுக்கிவருகிறது.

தனது செல்வாக்கு மண்டலத்தின் கீழ் உள்ள இலங்கையில் சீனாவின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்துவது என்ற அடிப்படையில்தான் 2009ல் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்து இராஜபட்சேவைக் காப்பாற்றியது. தற்போது இந்தியாவின் இலங்கை மீதான நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்திரவாதத்தின் அடிப்படையில் இராஜபட்சே கும்பலை கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகத்தான் இலங்கை அரசை எதிர்த்து வாக்களித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இலங்கையும் வேண்டும். எனவே ஈழத் தமிழர் மீதான போர்க்குற்றங்களோ, ஈழத்தமிழர்களின் நலன்களோ இந்தியாவுக்கு ஒரு பொருட்டல்ல. எனவேதான் ஈழத்தமிழின அழிப்புக்கு இராஜபட்சே கும்பலுக்கு இந்திய அரசு துணைபோகிறது.
 
இன அழிப்புப் போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச விசாரணையையோ, தமிழ் ஈழம் அமைப்பதற்கான பொதுஜன வாக்கெடுப்புக் கோரிக்கையையோ இந்திய அரசு ஆதரிக்காததற்கு மற்றொரு காரணம் இந்திய அரசு ஒரு இன ஒடுக்குமுறை அரசாகவும் இருப்பதுதான்.

இந்திய அரசு காஷ்மீரிலும் - வடகிழக்கு மாகாணங்களிலும் அவர்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறுத்து இராணுவ ஒடுக்குமுறையின் கீழ் அடிமைப்படுத்தி வருகிறது. காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆள் கடத்தல், காணாமல்போதல், கற்பழிப்பு, மனித உரிமை மீறல்கள் அன்றாடம் தொடர்கின்றன. வடகிழக்கு மாகாணங்களிலும் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் எல்லைமீறி நடக்கின்றன.

காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. பாதுகாப்புக் குழு 1947ல் கூறியது என்ன? காஷ்மீர் எந்த நாட்டுடன் சேர்ந்திருப்பது என்பதை பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வசதியாக இரு நாடுகளும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானே? இதுவரை இந்தியா அதை ஏற்கவில்லை. அப்படி இருக்கையில் தமிழீழம் அமைப்பதற்கான வாக்கெடுப்புக் கோரிக்கையை இந்தியா எப்படி ஏற்கும்? எனவே இன அழிப்புப் போர்க்குற்றம் பற்றியோ, இராஜபட்சே கும்பலை கூண்டிலேற்றுவது பற்றியோ, தமிழீழம் அமைப்பதற்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையையோ இந்தியா எக்காலத்திலும் ஆதரிக்காது. மாறாக இலங்கை மீதான தமது விரிவாதிக்க நலன்களிலிருந்து ஈழத் தமிழினத்தின் விடுதலைக்கு எதிராகவே செயல்படும். எனவே இந்திய அரசை எதிர்த்துதான் ஈழத் தமிழர்கள் தங்களது விடுதலைக்கான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

தனித் தமிழீழமே தீர்வு

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டப் பிறகு, அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் மற்றும் இரசியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவும் இல்லாத ஒரு சூழலில், ஐ.நா. மன்றமும் கைவிரித்துவிட்ட நிலையில் இனி தனித்தமிழ் ஈழம் சாத்தியமில்லை. எனவே தமிழீழ கோரிக்கையை கைவிட்டு அதிக அதிகாரம், அற்பச் சலுகைகளுக்கான உடனடிப் போராட்டங்கள் தான் இன்றைய தேவை என்று ஈழ எதிர்ப்பாளர்கள் ஆலோசனைகளை வாரிவழங்குகின்றனர். எப்படியாவது தமிழீழக் கோரிக்கையை கைவிடச்செய்ய வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.

ஆனால் ஈழம் ஆசியாவின் அயர்லாந்து என்பதை இவர்களால் உணரமுடியாது.

சிங்கள பேரினவாத, புத்தமதவாத இலங்கை அரசிற்குள் ஈழத்தமிழ் தேசிய இனம் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமின்றித்தான் தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிவருகிறது. ஈழத் தமிழினம் தனக்கான தனி அரசு அமைத்துக்கொள்ளும் உரிமை என்பது அதன் பிறப்புரிமை ஆகும். அந்த உரிமை, பேரம் பேசுவதற்கான ஒரு பொருள் அல்ல. அது ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும். போரின் வெற்றி தோல்வியால் அதை விலை பேச ஈழத் தமிழ் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

இலங்கையில் வாழும் இரு தேசிய இனங்களுக்கிடையிலான பகைமையையே இலங்கை அரசு தனது வாழ்வுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது தகர்ந்தால் இலங்கை அரசு அமைப்பும் தகர்ந்துவிடும். இலங்கை அரசை தகர்த்தெறியாமல் அரசியல் தீர்வு என்பதே கிடையாது.

“ஈழத்தமிழினச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு விடுதலைப்புலிகளின் பயங்கரவாதமே தடையாக உள்ளது. விடுதலைப்புலிகளை ஒழித்த பிறகுதான் அரசியல் தீர்வு” என்று சொன்ன கொலைகாரன் இராஜபட்சே இன்று ஈழமக்களுக்கு வழங்கியுள்ள பரிசு என்ன?

இராஜபட்சேவின் குடும்பம் - இராணுவம், ஆட்சியதிகாரம், நீதித்துறை என அனைத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது. இலங்கையின் தலைமை நீதிபதி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக மாற்றப்பட்டுள்ளார். இந்திய-இலங்கை ஒப்பந்தப்படியான வடக்கு, கிழக்கை இணைத்து தமிழர் தாயகம் என்பதை இராஜபட்சே கும்பல் மறுத்துவிட்டது. வரும் செப்டம்பர் மாதம் வடக்கு பகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. தமிழர் பிரதேசங்கள் முழுமையாக இராணுவ மயமாக்கப் பட்டிருக்கின்றன. தமிழர் வாழ்ந்த பகுதிகளில் இராணுவத்தின் துணையோடு சிங்களர்கள் குடியேற்றப்பட்டு தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஐ.நா. தீர்மானத்தின்படி எந்தப் போர்க்குற்றமும் விசாரிக்கப்படவில்லை. எல்.எல்.ஆர்.சி என்ற போலி விசாரணை அமைப்பு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை.

மாறாக, இன்னமும் தமிழர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. ஆள்கடத்தல், காணாமல்போதல், பாலியல் வன்முறை போன்றவை இன்றும் நீடித்து வருகின்றன. சிங்களப் பேரினவாதிகளின் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஈழத்தமிழினத்தின் மீதான வெற்றியை அரசு விழாவாக நடத்துகிறது.

இத்தகைய ஒரு சூழலில் ஈழத்தமிழர்களின் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கவோ, இராணுவமயமாக்கப்பட்ட இலங்கை அரசை எதிர்த்து ஜனநாயகத்துக்கான போராட்டத்தை நடத்துவதற்கோ, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உண்மையில் ஆதரிப்பதற்கோ எந்தவொரு இயக்கமும் சிங்களர்கள் மத்தியில் இல்லை. எனவே தமிழீழ மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறையிலிருந்து விடுபடுவதற்கு தனித் தமிழ் ஈழம் காண்பதைத் தவிர வேறு வழியில்லை. நீண்டகாலம் பிடித்தாலும், சிரமமானது என்றாலும் அவசியமானது, உறுதியானது, சரியானது என்பதும் தனித்தமிழ் ஈழம் அடைவது ஒன்றுதான் ஈழத்தமிழர்களுக்கான ஒரே அரசியல் தீர்வாகும்.

தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்குத் தடையாக இருப்பது இலங்கை அரசு மட்டுமல்ல. ஏகாதிபத்தியவாதிகள் குறிப்பாக அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளும், துணை மேலாதிக்க இந்திய அரசும் தடையாக இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட தேச மக்கள், பாட்டளி மக்கள் அனைவரும் தமிழ் ஈழத்திற்கான நட்பு சக்திகளாகும். ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடு மறைமுக சேமிப்பு சக்தியாக இருந்தாலும், ஈழ மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். எனவே தமிழ் ஈழத்திற்கானப் போராட்டத்தை உலக மக்களின் ஆதரவோடு நடத்துவதற்கான வழியையே கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த லட்சியத்தின் அடிப்படையில் உடனடிப்பணியாக சிங்கள இராணுவத்தை ஈழப்பகுதியிலிருந்து வெளியேற்றவும், தமிழர் பகுதிகளை சிங்களமயமாக்குவதைத் தடுத்து நிறுத்தவும் இன அழிப்புப் போர்க்குற்றவாளிகளை கூண்டிலேற்ற போராடுவதும் அவசியமாகும். அதற்கு உலகத் தொழிலாளர்களும், ஒடுக்கப்பட்ட தேசங்களும் குரல்கொடுப்பது அவசியமானதாகும். மாறாக உடனடிப் பிரச்சனையை மட்டும் முன்வைத்து இறுதி இலட்சியத்தை காவு கொடுப்பதோ அல்லது இறுதி இலட்சியத்தை பேசிக்கொண்டு உடனடிக் கடமைகளை உதாசீனப்படுத்துவதோ எதுவானாலும் அது ஈழத்தமிழினத்தின் தற்கொலைக்கு சமமாகும்.

தமிழீழத்திற்கு ஆதரவான மாணவர் போராட்டம்

இன அழிப்புப் போர்க்குற்றவாளி ராஜபட்சேவை கூண்டிலேற்றவும், தமிழீழம் அமைப்பதற்கான ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா ஐ.நா.வில் கொண்டு வரவேண்டும் என்ற மாணவர்களின் போராட்டம் இந்திய அளவிலும் உலக அளவிலும் நல்ல விளைவுகளை உருவாக்கியுள்ளது. இந்திய அரசோ, ஐ.நா. மன்றமோ இத்தகைய கோரிக்கைகளை எக்காலத்திலும் ஏற்கப் போவதில்லை என்ற நிலைமையில் மாணவர் இயக்கம் அடுத்தகட்டமாக எந்தத்திசையில் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐ.நா சபை மூலமாகவோ, அமெரிக்காவையும் இந்தியாவையும் நிர்ப்பந்தம் கொடுப்பதன் மூலமாகவோ தமிழீழத்தை அடைந்துவிட முடியும் என்ற மாயையிலிருந்து மாணவர்கள் விடுபட வேண்டும். அமெரிக்காவையும், இந்தியாவையும் எதிர்த்து ஒரு மக்கள் இயக்கத்தை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே, தமிழீழத்திற்கான உருப்படியான ஆதரவை நம்மால் வழங்க இயலும்.

தமிழீழத்திற்கான போராட்டத்தை ஈழத்தமிழர்கள்தான் போராடிப் பெறமுடியும். நம்மால் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவைத்தான் தரமுடியும். இன்றைய சூழலில் தமிழீழத்திற்கு ஆதரவான உலக மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் போராட்டம் அதற்கு ஒரு உந்து சக்தியாக அமையும்.

தமிழீழத்திற்கு ஆதரவாக நாம் செய்ய வேண்டிய பணி என்ன?

இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தையும், அரசியல் உரிமையையும் வழங்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பு உரிமையை மீட்பதற்காக கச்சத்தீவை மீட்கவேண்டும். இலங்கை அரசு ஈழப்பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பகுதி சிங்கள மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டம் அமையவேண்டும்.

மாணவர்கள் இயக்கம் தமிழீழத்திற்கு ஆதரவாக போராடுவதோடு, தங்களுக்கென ஒரு கொள்கைத்திட்டத்தை வகுத்துச் செயல்பட வேண்டும். இந்திய அரசின் தென் ஆசிய துணை மேலாதிக்கக் கொள்கைகளை எதிர்த்தும், இந்தியாவில் உள்ள தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்காக போராடும் திட்டத்தோடு மாணவர் இயக்கத்தை கட்டியமைக்கவேண்டும்.
 
காஷ்மீரில் இந்திய அரசு இராணுவத்தை திரும்பப்பெற்று அங்கு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவும், வடகிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் புரிந்துவரும் மனித உரிமை மீறல்களை எதிர்த்தும் மாணவர் இயக்கம் போராட முன்வரவேண்டும். தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட இந்தியாவின் பிற தேசிய இனங்கள் மீது இந்திய அரசு நடத்திவரும் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராட மாணவர் இயக்கம் முன்வர வேண்டும். சொந்த நாட்டில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் மக்களின் இயக்கம் ஒன்றுதான் ஈழத்தமிழர்களுக்கு இறுதி வரை ஆதரவளிக்கும் என்பதை மாணவர்கள் உணர்ந்து போராட வேண்டும்.
 
அடுத்தகட்டமாக மாணவர்கள் அனைத்து மாநில மாணவர்களையும் இணைத்துப் போராடப் போவதாக அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அத்துடன் மேற்கண்ட கோரிக்கைகள்தான் அத்தகைய மாணவர் அமைப்பு உருவாவதற்கு அடிப்படையாக அமையும் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

மேலும் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் விவசாயிகளின் பங்கு மகத்தானதாகும். எனவே மாணவர்கள் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் அணிதிரட்டும் போதுதான் ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்களது அடுத்தகட்ட போராட்டத்தை திட்டமிடவேண்டும்.

 மேலும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் மட்டுமே நடத்தாமல் பல்வேறு போராட்ட வடிவங்களை மேற்கொள்ளத் தயாராக வேண்டும். அத்தகைய ஒரு மாணவர் இயக்கமே தமிழகத்திற்கு அவசியமாக உள்ளது.
போர்க்குற்றம் மற்றும் தமிழ் ஈழம் குறித்து அரசியல் கட்சிகளின் நிலைபாடு

அகில இந்திய தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளையும், தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் செயல்படுத்தும் கட்சிகளாகும். தொடர்ந்து இக்கட்சிகள் சிங்களப் பேரினவாத அரசைக் காப்பாற்றவும், ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கான போராட்டத்தை நசுக்கியும் வந்துள்ளன. காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு மறைமுகமாகத் துணைபோனது. சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் போர்க்குற்றவாளிகளே. அண்மையில் இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர பா.ஜ.க மறுத்துவிட்டது. அதுவும் காங்கிரஸ் கட்சியை போலவே ‘தமிழ் மக்கள் நலன்’ என்று தமிழகத்தில் நாடகமாடுகிறது.

காங்கிரஸ், பா.ஜ.க மட்டுமல்லாது முலாயமின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், மம்தாவின் திரிணாமுல் போன்ற மாநில அளவிலான தரகு முதலாளித்துவக் கட்சிகளும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையை நியாயமற்றவகையிலும், எதிரான வகையிலும் அணுகுகின்றன. இலங்கை அரசை கண்டித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதை இக்கட்சிகளும் நிராகரித்துவிட்டன. தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்காக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஆதரிக்க மாட்டா. எனேவேதான் இக்கட்சிகள் தமிழீழக் கோரிக்கையை எதிர்த்து செயல்படுகின்றன.

சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற திருத்தல்வாத கம்யூனிஸ்டுக் கட்சிகள் தமிழ் ஈழத்தை எல்லாக் காலங்களிலும் எதிர்த்தே வந்துள்ளன. சி.பி.ஐ கட்சியானது ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று கூறிவிட்டது. இவ்விரு கட்சிகளும் இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதை எதிர்த்தன.

சி.பி.எம் கட்சியானது ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஆயுத மோதல் தீர்வாகாது என்கிறது. தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளை இணைத்து அதிகபட்ச சுயாட்சியே அது முன்வைக்கும் அரசியல் தீர்வாகும். தமிழீழத்திற்கான (தனி நாடு) பொது வாக்கெடுப்பு நடத்தக் கோருவதோ, இலங்கை நட்பு நாடு இல்லை என்று அறிவிப்பதோ இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண வழிவகுக்காது என்பது மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரச்சனை மேலும் சிக்கலுக்கு இட்டுசெல்லும் என்கிறது.

இலங்கை இராணுவம் இழைத்திட்ட போர்க்குற்றங்கள் (கவனிக்க இராஜபட்சே அல்ல) மீது சர்வதேச புலன் விசாரணை நடத்துவதற்கு பதிலாக, சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட சுயேட்சையான நம்பகமான விசாரணை செய்து தண்டனை கொடுக்க இராஜபட்சேவை ஏற்கவைக்க இந்தியாவையும் ஐ.நா.வையும் நிர்ப்பந்திக்கப் போராட வேண்டுமாம். இவ்வாறு இவ்விரு திருத்தல்வாதக் கட்சிகளும் தமிழ் ஈழத்தை எதிர்ப்பதுடன் ராஜபட்சே கும்பலுக்கும், இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளுக்கும் சேவை செய்கின்றன. இலங்கையின் இறையாண்மையைக் காப்பது எனும் பேரில் சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோகின்றன.

தரகுமுதலாளித்துவ மற்றும் திருத்தல்வாதிகளின் அணி வரிசையில் புரட்சி பேசும் புதிய ஜனநாயகம் மற்றும் ம.க.இ.க குழுவினர் இராஜபட்சே கும்பலுக்கு ஆதரவாக அணிவகுத்துள்ளனர். “இன்றைய ஈழம், இலங்கை மற்றும் அனைத்து நாட்டு அரசியல் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல. இன்றைய ஈழப்பிரச்சனையின் யதார்த்த நிலையில் உடனடியான, தற்காலிகத்தீர்வு எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் அரிச்சுவடியிலிருந்து தொடங்கி அமைப்பையும் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இனவாத நோக்கில் உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, சிறியவையானாலும் இராஜபட்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப்போராடும்சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப்போராடுவதுதான்” தீர்வு என்று பு.ஜ. கூறுகிறது.

அதாவது, ஈழம் புதிய சூழ்நிலை, புதிய பாதை என்று கூறி தனி ஈழம் சாத்தியமில்லை என்றும் அக்கோரிக்கையை கைவிடவேண்டும் என்றும் பு.ஜ. மற்றும் ம.க.இ.க குழுவினர் கூறுகின்றனர். அவர்கள் இன்று மட்டுமல்ல கடந்த 30 ஆண்டு காலமாகவே உதட்டில் ஈழத்தை உச்சரிப்பதும் உண்மையில் ஈழ கோரிக்கைக்கு குழிபறிக்கும் வேலையைத்தான் செய்துவருகின்றனர். தமிழீழத்தை ஆதரிப்பதுபோல் பேசுவது மறுபுறம் இலங்கை அரசின் பாசிசப்போக்கையும் விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கையும்  சமப்படுத்தி பேசினர். இறுதியில் புலிகளின் பாசிசப்போக்கை எதிர்த்துப் போராடுவதையே முதன்மைப் பணியாகக் கொண்டனர். இவ்வாறு ஈழப்போராட்டத்துக்கு துரோகம் இழைத்து வந்தனர். அதையேதான் இன்றைய சூழலிலும் அவர்கள் தொடர்கின்றனர்.

இராஜபட்சேவை போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. அவை மூலம் தண்டிக்கவேண்டும் என்று போராடும் மாணவர்களை எள்ளிநகையாடும் ம.க.இ.க.வினர், “நூரம்பர்க்” போன்ற விசாரணைமன்றம் தேவை என புரட்சி வேடம் போடும் ம.க.இ.க.வினர், ராஜபட்சேவை தண்டித்தால் ஈழத்தமிழர்களுக்கு இன்னல் அதிகரிக்கும் என்று பயமுறுத்துகின்றனர்.

“அப்படி ஒரு நடவடிக்கை வந்தால் இராஜபட்சேவை போன்ற ஒரு நரித்தனமான பாசிஸ்டு அதை எப்படி எதிர்கொள்வான் என்பதை நாம் பார்க்கவேண்டும். அதை இலங்கையின்  இறையாண்மை மீது தாக்குதலாக, சிங்கள மக்களுடைய கவுரவத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக அதை ராஜபட்சே சித்தரிக்கப் போகிறார். அதையட்டி மீண்டும் தேசவெறியும், இனவெறியும் தூண்டப்படும். ஏற்கனவே இலங்கையின் இறையாண்மையில் இந்தியா அல்லது அமெரிக்கா தலையிடுகிறது என்ற கோணத்திலேதான் அங்கேயிருக்கிற சிங்கள இனவெறியர்கள் அதை எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.”என்று ம.க.இ.க.வினர் எழுதுகிறார்கள்.

அதாவது ராஜபட்சேவை தண்டிப்பதுகூட தமிழர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் வாதிடுகின்றனர். இதைவிட ராஜபட்சேவுக்கு ஆதரவாக யாராவது பேசமுடியுமா?

அடுத்து ராஜபட்சேவின் இராணுவப் பாசிசத்திற்கு எதிராக சிங்களப்பகுதியில் ஒரு அமைப்பும் போராட முன்வராத ஒரு சூழலில், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்துப் போராட அங்கே ஒரு அமைப்பும் முன்வராத ஒரு சூழலில், இரு இன மக்களும் ஒன்றுசேர்ந்து வர்க்கப்போராட்டம் நடத்தவேண்டும் என்று கூறுவது தமிழீழக் கோரிக்கையை கைவிடச்செய்வதற்கான தந்திரமின்றி வேறென்ன?

இவ்வாறு பு.ஜ.குழு மற்றும் ம.க.இ.க.வினர்  உருவாக்கியுள்ள ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர்கள் கூட்டமைப்பும் தமிழீழத்துக்கு துரோகம் செய்வதை மாணவர்கள் புரிந்துகொண்டு புறந்தள்ள வேண்டும். அவர்கள் ராஜபட்சேவுக்கும் இந்திய அரசுக்கும் துணைபோகும் சந்தர்ப்பவாதத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டும்.

தமிழீழமும்-தமிழக சட்டமன்றத் தீர்மானமும்

மாணவர்களின் போராட்டம் தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள எழுச்சியைக்  கண்டு ஜெயலலிதா அரசாங்கம் தமிழக சட்டமன்றத்தில் போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்ற சர்வதேச விசாரணை, பொதுவாக்கெடுப்பு மூலம் தனி ஈழம் அமைப்பதற்கான ஆதரவு என்ற தீர்மானத்தை இயற்றியுள்ளது. ஏற்கனவே இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா  தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

ஆனால் தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன் காக்கும் மத்திய அரசாங்கம்தான் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றுள்ளது. எனவே ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இந்திய அரசு செயல் படுத்துமா? ஈழத்தில் தமிழர்கள் தனிநாடு அமைத்துக்கொள்ளும் உரிமையை இந்திய ஆளும் வர்க்கங்களும் அரசும் ஆதரிக்குமா? ஏற்கனவே இக்கோரிக்கைகளை ஆதரிக்கமுடியாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. எனவே தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்த ஜெயலலிதா என்னசெய்யப் போகிறார்? மத்திய அரசிடம் அந்தக்கோரிக்கைகளை முன் வைத்துப் போராட வேண்டும். மத்திய அரசு பணியவில்லை என்றால் ஆட்சி அதிகாரத்தை தூக்கியெறிந்துவிட்டு தமிழக மக்களோடு கைகோர்த்துப் போராட தமிழக முதல்வர் தயாராவாரா? கருணாநிதி போலவே கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருப்பதை இனி தமிழ் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எப்படி இருப்பினும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ள தீர்மனங்களை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசை எதிர்த்துப் போராட தமிழக மக்கள் தயாராக வேண்டும். 

ம.தி.மு.கவின் வை.கோ, நெடுமாறன், தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் மணியரசன் போன்ற தமிழ் தேசியம் பேசுபவர்கள் இது நாள்வரை அமெரிக்காவின் ஆதரவோடு தமிழீழம் பெற்றுவிட முடியுமென்று கூறி வந்தனர். அமெரிக்காவின் ஆதரவை நம்பி கடந்தகாலத்தில் நெடுமாறன் அமெரிக்க தூதுவருக்கு பூச்செண்டுக் கொடுத்தார். வை.கோ ஒபாமாவைப் பாராட்டி புத்தகம் எழுதினார். சென்ற ஆண்டு ஐ.நா. மனித உரிமைத் தீர்மானத்தை இவர்கள் ஆதரித்தனர். தற்போது அந்தத் தீர்மானத்தை மாணவர்கள் அம்பலப்படுத்தியப் பிறகு அதை எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். ஈழம் உள்ளிட்ட உலகில் எந்த ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனமும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடித்தான் பெற முடியும் என்பதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். தற்போதும்கூட நெடுமாறன், ஈழவிரோத பா.ஜ.க வின் கூட்டத்தில் பங்கேற்கிறார். இவையெல்லாம் ஏகாதிபத்தியம் பற்றிய இவர்களின் மாயைகளையும், மத்திய ஆளும்வர்க்கங்களுடன் சமரசம் செய்து கொள்வதையும் காட்டுகின்றன. இவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளவேண்டும். மாணவர்களும் இதுபோன்ற சமரசவாத சக்திகளால் ஈழப்போராட்டம் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும்; ஈழத்திற்கு எதிரான அமெரிக்க - இந்திய கூட்டுச்சதியை முறியடிக்கவும்; இந்திய அரசின் விரிவாதிக்க மற்றும் தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளை எதிர்த்துப்போராடவும்; போர்க்குற்றவாளியான இராஜபட்சேவை கூண்டிலேற்றவும்; ஒரு ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை கட்டியமைக்க மாணவர்கள், தமிழ்தேசிய மற்றும் புரட்சிகர சக்திகள் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஓரணியில் அணிதிரளுமாறு அறைகூவி அழைக்கின்றோம்.

அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம்!

போர்க்குற்றவாளிகள் மீதான சர்வதேச விசாரணைக் கோரிக்கைக்கு எதிரான அமெரிக்க-இந்திய கூட்டுச்சதியை முறியடிப்போம்!

ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை பேரத்திற்கான ஒன்றல்ல!

தமிழீழமே ஈழமக்களின் அரசியல் விடுதலைக்கு ஒரே வழி!

ஈழத்தை சிங்களமயமாக்கவும் இராணுவமயமாக்கவும் இலங்கைக்கு இந்தியா துணைபோவதை முறியடிப்போம்!

ஈழத்திலிருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்றவும், ஈழத் தமிழர்களை சொந்த மண்ணில் குடியமர்த்தவும் உலக மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஏப்ரல் 2013