Monday 21 October 2013

காங்கிரசும், பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்.



காங்கிரசும், பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்.
முதல் பதிப்பு: மார்ச் 1993,    இரண்டாம் இணைய பதிப்பு: அக்ரோபர் 2013
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்கதளம், சிவசேனை ஆகிய இந்து மதவெறி பாசிச அமைப்புகள் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதியைத் திட்டமிட்டுத் தாக்கித் தகர்த்து தரை மட்டமாக்கினர்.இக்கோரச் சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவில் தலையெடுத்தாடும் இருதலைப் பாசிசப் பாம்பான பா.ஜ.க, காங்கிரஸ் எதிரிகளை எதிர்த்து,தேசிய முன்னணி, இடது சாரி முன்னணி,மற்றும் மாநில சமரசசக்திகளைத் தனிமைப்படுத்தி,இந்து பாசிச அரசியலை எதிர்த்து மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்போர் அனைவரையும் ஓர் அணியில் திரட்டுவதற்கான அரசியல் செயல் தந்திர பாதை என்கிற முறையில் `காங்கிரசும், பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்`.எனும் நூல் மார்ச் 1993 இல் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டு, பாசிச எதிர்ப்பு ஜனநாயகப் பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.அப்பிரசுரத்தை 2013 அக்ரோபரில் இணைய பதிப்பாக வாசகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
சமரன் (ப-ர்)

காங்கிரஸ், பாரதீய ஜனதா என்னும் இரட்டைத் தலை பாசிச பாம்பை நசுக்குவதற்கு பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்களின் வழியின் சாராம்சத்தைப் பின்வருமாறு கூறலாம்.

மதச்சார்பற்ற அரசை உருவாக்கவும், மதம் தனி நபரது சொந்த விவகாரமாக ஆக்கிடவும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவிட மக்களை அணிதிரட்ட வேண்டும்.

பாசிசப் போக்கை முறியடிப்பதற்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா எனும் இரட்டைத் தலைகளைக் கொண்ட இந்தியப் பாசிச பாம்பை நசுக்க வேண்டும்.

ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றிவாகை சூட தேசிய முன்னணி மற்றும் இடதுசாரி முன்னணி ஆகிய இரண்டு சமரச சக்திகளைத் தனிமைப்படுத்திட வேண்டும்.

மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைத்திட பாட்டாளி வர்க்க புரட்சிகர அமைப்புகளும் ஜனநாயகவாதிகளும் ஓரணியில் திரள வேண்டும்.

================================================================

காங்கிரசும், பாரதிய ஜனதாவும் 
இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்.

‘இந்து ராஜ்யம்’ நாட்டு மக்களுக்கு எதிரான ஒரு அறைகூவல்!

டில்லி ஆட்சியைப் பிடிக்கவே இந்த மதக்கலவரங்களும் அட்டூழியங்களும்.

பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்கதளம், சிவசேனை ஆகிய இந்து மதவெறி பாசிச அமைப்புகள் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதியைத் திட்டமிட்டுத் தாக்கித் தகர்த்து தரை மட்டமாக்கிவிட்டன. இந்தத் தாக்குதல் இஸ்லாமிய மதத்தினர் மீது தொடக்கப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல. மதச் சார்பின்மை, ஜனநாயக மதிப்புகள், மக்களின் ஒற்றுமை ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல் ஆகும். பாபர் மசூதி தகர்க்கப்பட்ட பிறகு டிசம்பர் 7-ம் தேதி துவங்கிய மதக் கலவரங்கள் தன்னியல்பாகத் துவங்கியவைப் போல தோன்றினாலும் அது உண்மை அல்ல. நாடு தழுவிய அளவில் மதக்கலவரங்களைத் துவங்குவதற்கு இந்த காவிச்சட்டைக் கும்பல் தயாரித்து வைத்திருந்தது
என்பதுதான் உண்மையாகும்.

பாபர் மசூதி தகர்ப்பு எதிர்பாராது நடந்துவிட்டது; துரதிருஷ்டவசமானது, என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் ஆரம்பத்தில் கூறியதெல்லாம் அவர்கள் வழக்கமாகச் செய்யும் பித்தலாட்டம்தான். பா.ஜ.கா-வின் நான்கு மாநில அரசாங்கங்கள் கலைப்பையும், இந்து மதவெறி அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடைகளையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் பாசிச அராஜகச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கத் தொடங்கி விட்டனர். ஜனநாயகத்தின் காவலர்கள் என்ற ஒரு பொய்வேடம் பூண்டு அரசியல் தாக்குதல்களிலும், வன்முறை மதக்கலவரங்களிலும் ஈடுபடத் துவங்கிவிட்டனர். நரசிம்மராவ் கும்பலுடன் திரைமறைவில் உடன்பாடுகளைக் காண்பதற்கும், தங்களின் கோரிக்கைகளை ஏற்கும்படி செய்வதற்கும் ஒருபுறம் மதக்கலவரங்களை நடத்துவது, மறுபுறம் நாடாளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்வது என்ற செயல் தந்திரங்களை வகுத்து அவற்றைச் செயல்படுத்தத் துவங்கிவிட்டனர்.

பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல நகரங்களில் இந்துமதவெறி பாசிசக்கும்பல் மதக்கலவரங்களை நடத்தின. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். லட்சக்கணக்கானோர் நகரங்களை விட்டு வெளியேறினர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள
சொத்துக்கள் நாசமானது. காவிச்சட்டை பாசிச அமைப்புகள் பணபலம் படைத்த வீடு கட்டும் காண்டிராக்டர்களுடனும், கிரிமினல் கும்பல்களுடனும் கைக்கோர்த்துக் கொண்டு குடிசைப் பகுதிகளுக்கு தீ வைத்து அவர்கள் வாழும் நிலத்தை அபகரித்துக்கொள்ளும் ஈனச் செயல்களில் ஈடுபட்டனர். கொள்ளையடித்தல், சூறையாடுதல், கற்பழித்தல் இன்னும் பிற பஞ்சமா
பாதகங்கள் எல்லாம் இவர்களுக்கு கைவந்த கலை என நிரூபித்துவிட்டார்கள். இவை அனைத்தும் இராமனின் பெயரால் செய்யப்பட்டன. இந்தக் காவிச்சட்டை காடையர்களின்  தாக்குதலனின் இலக்காக இருந்தவர்கள், இஸ்லாமியர்கள் மட்டும் இல்லை. ஏழைக் குடிசைவாழ் மக்கள், பம்பாய் வாழ் தமிழர்கள் போன்ற தேசிய இனச் சிறுபான்மையினர், இந்து ராஜ்யத்தை எதிர்க்கும் ஜனநாயகவாதிகள், மற்றும் அறிவாளிகள் ஆகியோர் அனைவரும் இக்கும்பலின் தாக்குதல்களுக்கு இலக்குகளாயினர்.

மதக் கலவரங்கள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன?

மசூதியை இடிப்பதற்கும், மதக்கலவரங்களுக்கும் ஆதரவாக மக்களை இந்தக் காவிச்சட்டை அமைப்புகள் எவ்வாறு திரட்டின? முஸ்லீம்களைத் “திருப்திப்படுத்தும்” கொள்கையால்தான் உங்களுக்கு வேலை வாய்ப்பு குறைகிறது. இந்துக்கள் தங்கள் சொந்த நாட்டில் இரண்டாம்தரக் குடிகளாக நடத்தப்படுகின்றனர். பாரதீய ஜனதாக் கட்சி மட்டும்தான் இந்துக்களுக்காக
போராடுகிறது. இந்துக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இந்து ராஜ்யத்தை அமைப்பதுதான். இன்னும் பல பொய்களை இந்தக் காவிச்சட்டைக் கும்பல் நீண்டகாலமாக பிரச்சாரம் செய்துவந்தன. அத்துடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வன்முறைச் செயல்களுக்கு ஆள் சேர்த்து வந்தன. வன்முறை நடவடிக்கைகளைத் தயாரித்து வந்தன. இவ்வழியில்தான் காவிச்சட்டை
அமைப்புகள் மசூதி இடிப்புக்கும், மதக்கலவரங்களுக்கும் தயாரித்தன.

இந்நாட்டில் நிலவும் வேலையின்மை, பஞ்சம், பட்டினி, விலைவாசி ஏற்றம், இந்து வணிகர்களுக்கு ஏற்படும் நெருக்கடி, நாட்டின் இன்றைய பின்தங்கிய நிலைமை, அவலங்கள் ஆகிய அனைத்திற்கும் காரணம் இஸ்லாமியர்கள் ஓட்டு வங்கியாக பயன்படுத்துவதுதான் என்றும், இவை எலாவற்றிற்கும் தீர்வு இந்து ராஜ்யம் அமைத்தல்” - “இந்துத்துவம்” என்று பாரதிய ஜனதாக் கட்சியும் காவிச்சட்டை அமைப்புகளும் கூறுகின்றன. ஆனால் உண்மை என்ன? காலம் காலமாக முஸ்லீம்களுக்கு விசேச சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் முஸ்லீம்கள் முன்னேறிவிட்டார்கள்; இந்துக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பாரதீய ஜனதாக் கட்சி கூறுவது ஒரு கலப்படமற்ற பொய். இந்திய மக்கள் தொகையில் 11 சதவீதத்திற்கும் அதிகமாக இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்கள் இந்தியப் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் வகிக்கும் நிலை என்ன? இந்திய மக்கள்
அனைவரையும் ஒன்றாக கணக்கிட்டால், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் முஸ்லீம்களே. முஸ்லீம்கள் அனைவரையும் தனியாகக் கணக்கிட்டால், அதில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 46 சதவீதம் ஆகும். மேலும், இந்திய மக்கள் தொகையில் 11 சதவீதத்தினராக உள்ள முஸ்லீம்கள் பின்வரும் துறைகளில் எத்தனை சதவீதத்தினராக உள்ளனர் என்பதைப் பாருங்கள்.


மேற்கூறப்பட்ட எல்லாவற்றிலும் மக்கள் தொகையில் அவர்களுக்குள்ள 11 சதவீதத்தை எட்டவில்லை என்பதைக் காணலாம். இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள் சுரண்டப்படுவதை விட அவர்கள் குறைவாக சுரண்டப்படவில்லை என்பதை மேலே காட்டப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மத உரிமைகள் மறுக்கப்படுவதன் காரணமாக இந்துக்களைவிட முஸ்லீம்கள்தான் அதிகமான ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். இந்துமதத்தைப் பின்பற்றுவோர் முஸ்லீம்களால் ஒடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக உயர்சாதி ஆதிக்கமுறைக்கும், தீண்டாமைக் கொடுமைக்கும், பார்ப்பனீய இந்து மதம்தான் தெய்வீகத்தண்மையை வழங்குகிறது. இந்துமதத்தைச் சேர்ந்த தரகுப்பெரு முதலாளிகளும், பெரும் நிலப்பிரபுக்களும்தான் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினராக இருக்கின்றனர். அவர்கள்தான் இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து இந்திய மக்களைச் சுரண்டுவதுடன், இந்த நாட்டின்மீது ஏகாதிபத்தியம் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இந்த நாட்டின் அரைக்காலனித் தன்மையை (அரை அடிமைத்தனத்தை) நிலை நிறுத்துவதற்கும் தூண்களாக இருக்கின்றனர்.

இன்று இந்தியாவின் பொருளாதார நெருக்கடிக்கும், அதன் அரைச்சுதந்திரம் பறிபோவதற்கும் இந்தியப் பொருளாதாரத்தின் மீது பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் ஆதிக்கம் வளர்வதற்கும், இந்த நாட்டின் வளமான நிலங்களை நிலப்பிரபுக்கள் தமது ஏகபோகமாக ஆக்கிக்கொண்டு உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்காமல் தடுப்பதற்கும், விவசாயிகள் பன்னாட்டுக் கம்பெனிகளாலும், தரகுப் பெரு முதலாளிகளாலும் சுரண்டப்படுவதற்கும் காரணமாக இருப்பது நரசிம்மராவ் கும்பல் கடைப்பிடிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளும், அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணிந்து போகும் அரசியல் கொள்கைகளுமே ஆகும். இந்துத்துவம் பேசும் பாரதீய ஜனதாகட்சி நரசிம்மராவ் கும்பலின் இந்த தேசத்துரோக, மக்கள் விரோத கொள்கைகளை ஆதரிக்கிறது. இந்துமதவெறி பாசிச அரசை நிறுவுவதன் மூலம் இந்த நாட்டின் மீது அமெரிக்காவின் தலைமையின் கீழ் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்தை மேலும் வளர்ப்பதன் மூலம் இருக்கும் அரைச்சுதந்திரத்தையும் அடகு வைப்பதற்கு நரசிம்மராவ் கும்பலுடன் போட்டியிடுகிறது.

‘இந்து ராஜ்யம்’ இந்து மதவெறி பாசிஸ்டுகளின் ஒரு பகற்கனவு:

இந்த நாட்டைப் பீடித்திருக்கும் அனைத்துப் பிணிகளுக்கும் சர்வரோக நிவாரணி என பா.ஜ.க கூறும் ‘இந்து ராஜ்ஜியத்தை’ அமைத்தல் - இந்துத்துவம் என்பதின் இலட்சணங்கள் என்ன?

இதுவரை பா.ஜ.க அதை எழுத்து பூர்வமாகவோ, வெளிப்படையாகவோ அறிவித்தது இல்லை. அது சொன்னவை சில, சொல்லாமல் செய்ய விரும்புகின்றவை சில. சொல்லாமல் மறைத்து வைத்திருக்கும் அதன் உள்ளக்கிடக்கையை இந்துமதப்  பண்டாரங்கள், பரதேசிகள், சாமியார்கள் (துறவிகள்) அமைப்பு - ஆகிய இந்திய சாதுக்கள் சந்நியாசிகள் பஞ்சாயத்து - ஒரு தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் சுவாமி முக்தானந்தம், ஆசார்யவாமதேவ் ஆகிய இருவர், தற்போதுள்ள இந்திய அரசியல் சட்டம் எந்த அளவிற்கு இந்துக்களுக்கு விரோதமாக உள்ளது என விளக்கி 67 பக்கங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை வெளியிட்டார்கள். இதற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அகில இந்திய சந்நியாசிகள் பஞ்சாயத்தின்
தீர்மானத்திற்குப் பின்வரும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்து பண்பு நெறிகளின் அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்காக புதிய அரசியல் நிர்ணயசபையை நிறுவ வேண்டும் - யாரும் கேள்வி கேட்க முடியாத உயர்பதவியை பிராமணர்களுக்கு உறுதிசெய்யும் ஜாதி அமைப்பிற்கு அரசியல் சட்டத்தின் மூலம் அங்கீகாரம்
அளிக்க வேண்டும். சிறுபான்மையினரைப் பாகுபடுத்திக் காட்டும் பிரிவுகளையும், சட்டங்களையும் நீக்குவோம். மேற்கூறப்பட்டிருப்பவை ஆர்.எஸ்.எஸ் தலைவரும் இந்தக் காவிச்சட்டை அமைப்புகளின் குருநாதருமான எம்.எஸ் கோல்வால்கர், 1939-இல் வெளியிட்ட ‘நாம் அல்லது நமது தேசியத் தன்மையின் விளக்கம்’ என்ற நூலில் இந்து ராஷ்டிரம் பற்றிய திட்டத்தைக் குறித்துக் கூறப்பட்டுள்ள கருத்தாக்கங்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. கோல்வால்கரின் கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சியோ வேறு எந்தக் காவிச்சட்டை அமைப்போ விமர்சித்தது இல்லை. இந்தக் காவிச்சட்டை அமைப்புகள் இன்றுவரை அவற்றை வேதவாக்காக ஏற்றுச் செயல்படுத்தி வருகின்றன.

‘நாம் அல்லது நமது தேசியத்தன்மையின் விளக்கம்’ என்ற நூலில் கோல்வால்க்கர் கூறுவதைப் பாருங்கள்:

”இந்துக்களின் பூமியில் இருப்பது இந்து தேசம். இருக்கவேண்டியதும் அதுவே. அதன் இன்றைய உறக்க நிலையிலிருந்து அதற்கு விழிப்பூட்டி வலிமை பெறச்செய்வதை இலட்சியமாகக் கொண்ட இயக்கங்கள் மட்டுமே உண்மையான தேசிய இயக்கங்கங்களாகும். மற்றவை அனைத்தும் தேசிய இலட்சியத்துக்கு எதிரான துரோகிகள், விரோதிகள், கொஞ்சம் கருணையோடு சொல்வதானால் முட்டாள்கள்.”

மேலும் கோல்வால்கர் தான் கனவு காணும் இந்து இராஜ்ஜியத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

“பிறமதங்களைப் பின்பற்றும் இந்திய மக்கள் தங்களின் வேற்றுமையைக் கைவிட்டு, இந்து தேசத்தின் மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றை ஏற்று, அவர்கள் இந்து தேசிய இனத்தில் (National race) முற்றாக இணைந்து விட்டால் ஒழிய அவர்களுக்கு தேசவாழ்வில் இடங்கிடையாது. அவர்கள் தங்களின் இன, மத, பண்பாட்டு வேற்றுமைகளை வைத்துக் கொண்டிருக்கும் வரையில் அவர்கள் அன்னியர்களாக மட்டுமே இங்கே இருக்க முடியும்.” அவர் தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறார்; “இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனத்தவர், ஒன்று இந்து பண்பாட்டையும், மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்தை மதிக்கவும் அதற்கு பயபக்தி செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்துக்கும், பண்பாட்டுக்கும் - அதாவது இந்து தேசத்துக்கு புகழ் பாடுவதைத் தவிர வேறு எந்த கருத்துக்கும் அவர்கள் இடம் தரக்கூடாது. இந்து இனத்துடன் கலந்துவிடும் பொருட்டுத் தங்களின் தனிவாழ்வை இழந்துவிட வேண்டும்; அல்லது இந்து தேசத்துக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக மட்டுமே அவர்கள் இந்த நாட்டில் தங்கியிருக்கலாம். எதற்கு உரிமை கொண்டாடக் கூடாது. குடியுரிமையைகூட அவர்கள் கோரக்கூடாது.”

இதுதான் 1939-இல் கோல்வால்க்கர் பகற்கனவு கண்ட இந்து இராஜ்ஜியம் - இந்துத்துவம். இதுவே காவிச்சட்டைகளுக்கு வேதவாக்கு. இருப்பினும் பாரதீய ஜனதாக் கட்சி வெளிப்படையாகவும், ஒப்பனை செய்து கொள்ளாமலும் தனது உண்மையான பாசிச முகத்தைக் காட்டிக் கொள்வதில்லை. ஆயினும் பா.ஜ.க தனது கொள்கைகள், முழக்கங்கள், ராமன், ரொட்டி, இந்து இராஜ்ஜியம், இஸ்லாமியப் பகைமை, வர்ணாசிரம தர்மத்தைப் பேணுதல்; ஏகாதிபத்தியத்திற்கு தொண்டூழியம் செய்தல், தரகுப்பெருமுதலாளிகளுக்கும், பெரும் நிலப்பிரபுக்களுக்கும் கரசேவை செய்தல், ஆகிய அனைத்தையும் கோல்வால்கரின்  பகற்கனவை நனவாக்கும் நோக்கத்துடன்தான் வகுத்துக்கொள்கிறது. நாடாளுமன்ற அமைப்புகளின் மூலமே இந்துமதவெறி பாசிச இராஜ்ஜியத்தை இராம இராஜியத்தை நிறுவும் பொருட்டு, காவிச்சட்டை அமைப்புகளுக்கிடையில் வேலைப் பிரிவினை செய்யப்படுகின்றன;

சித்தாந்தத்துறை, இராணுவத்துறை பணிகளுக்கு ஆர்.எஸ்.எஸ், நாடாளுமன்ற அரசியல் பணிகளுக்கு பா.ஜ.க மதவெறியைத் தூண்டுவதற்கும், கரசேவைக்கும் விஸ்வ இந்து பரிசத்துக்கும் சூலமேந்திய சாமியார்களின் பஞ்சாயத்தும் இவ்வாறு வேலைப்பிரிவினை செய்து கொண்டுள்ளன. அரசியலிலும்கூட பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது.

ஒருபுறம்,அத்வானி சாதுவாக, கவர்ச்சிகரமாகப் பேசுவார்; “உண்மையான மதச்சார்பின்மை, யாருக்கும் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது. பழைய மகோன்னத நாட்களை மீண்டும் கொண்டு வருவோம்.” இவ்வாறு அவர் இதமாகப் பேசுவார். மறுபுறம், பாசிச இந்து இராஷ்டிரத்திற்கு ஆதரவாக அனல் கக்கும் ஆவேச உரைகள்: “நாட்டில் இந்துமத அரசை உருவாக்குவதற்காக அரசியல் சட்டத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வருவோம். சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் தரும் எல்லாப் பிரிவுகளையும், சட்டங்களையும் நீக்குவோம். அயோத்தி பாபர் மசூதிக்கு ஏற்பட்ட கதி பிற மசூதிகளுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், காசி ‘கியான்பி’ மசூதியையும், மதுரா ‘ஈகா’ தொழுகை இடத்தையும், டில்லி செங்கோட்டை ‘ஜூம்மா மசூதியையும்’ இஸ்லாமியர்கள் தாமாக முன்வந்து இந்துக்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஏற்கனவே பட்டியலிலுள்ள 3000 மசூதிகளை இடிப்பதோடு, அவற்றின் எண்ணிக்கையையும் கூட்டிக்கொண்ட போவோம்.” இவ்வாறு கனல் கக்கும் விதத்தில் மற்றொரு முகம் பேசும். எதிரிகளைக் குழப்புவதற்காகவும்,
இந்து இராஜ்ஜியம் என்ற கருத்தை எந்த அளவிற்கு மக்கள் ஏற்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதை சோதித்துப் பார்ப்பதற்காகவும் இந்த இரட்டைவேடம் போடப்படுகிறது.

பாபர் மசூதியை இடித்துவிட்ட வெற்றிக்களிப்பில் சந்நியாசிகளும், சாமியார்களும் தாங்கள் அரசுக்கும், சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என இறுமாப்புடன் அறிவித்து விட்டனர். இந்தியாவில் ஒரு இந்து இராஜ்ஜியத்தை அமைக்கப் போவதாகவும் கூறத் துவங்கி விட்டனர். பாரதீய ஜனதா அமைக்கப் போவதாகக் கூறும் அந்த இந்து இராஜ்ஜியம் எத்தகைய ஒரு இராஜ்ஜியமாக இருக்கும் என்பதை பாபர் மசூதியை இடித்ததை அடுத்து நடைபெற்ற மதக்கலவரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்திவிட்டன. அந்த மகோன்னதமான இராஜ்ஜியத்தில் இந்துமதத்தையும், இந்துப் பண்பாட்டையும், இந்தி மொழியையும் ஏற்காதோர் குடியுரிமைக்கும்கூடத் தகுதியற்றவர்களாக ஆக்கப்படுவர். இந்து இராஜ்ஜியம், ராமராஜ்ஜியம் அமைக்கப்பட்டவுடன் பேச்சுரிமை, பத்திரிக்கைச் சுதந்திரம், தனி நபர் சுதந்திரம், மனித உரிமைகள், ஒடுக்கப்பட்ட சாதியினரின் சுயமரியாதை, மதச்
சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை பாரதீய ஜனதாக் கட்சியும், பிற காவிச்சட்டை அமைப்புகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துவிட்டன. பாரதீய ஜனதா கட்சியை டெல்லி ஆட்சி பீடத்தில் அமர்த்த விரும்புவோர்: பாகிஸ்தான் அகதி - இராம பக்தர் அத்வானிக்கு மகுடம்  சூட்ட விரும்புவோர்; இந்து இராஜ்ஜியத்தை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள். கோல்வால்கரின் ஆன்மா கல்லறையில் ஆனந்தக் கூத்தாடட்டும்.

இந்துமதவெறி பாசிச பா.ஜ.க வளர்ச்சிக்கு நாடாளுமன்ற சந்தர்ப்பவாதம் துணைபோனது

டெல்லி ஆட்சி பீடத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்று நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு பாரதீய ஜனதா கட்சி வளர்ச்சி பெற்றது எவ்வாறு...?

1984-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்றத்தில் இரண்டு இடங்களைத்தான் அது பெற்றது. இத்தோல்விக்குப்பின் தனக்கென ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கிக் கொள்வதற்காக இந்து மத வெறியைத் தூண்டும் தந்திரங்களை பாரதீய ஜனதா வகுத்துக்கொண்டது.

1989, 1991-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் பாரதீய ஜனதா கட்சி பெரும் எண்ணிக்கையிலான இடங்களைப் பெறுவதற்கு இந்து மதவெறியைத் தூண்டும் தந்திரங்கள் கைகொடுத்தன. இவ்விரு தேர்தல்களிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லாத நாடாளுமன்றம் உருவானது, அதாவது தொங்கு நாடாளுமன்றம் உருவானது. இந்த இரண்டு தேர்தலில் உருவான நாடாளுமன்றங்களிலும் பாரதிய ஜனதாக் கட்சி கணிசமான இடங்களைப் பெற்றிருந்தது. பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியும்
ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே அந்த நாடாளுமன்றம் இருப்பதா நிலைமை ஏற்பட்டது. எனவே அந்த நாடாளுமன்றம் இருப்பதா அல்லது அது கலைக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் வாய்ப்பை அது பெற்றுவிட்டது. நாடாளுமன்றவாத கட்சிகள் தேர்தலில் தாம் மீண்டும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையற்று, நாடாளுமன்றம்
கலைக்கப்படுவதை விரும்பவுமில்லை; உடனடியாக மீண்டும் ஒரு தேர்தலில் மக்களைச் சந்திக்கவும் தயாராகவும் இல்லை; ஆகையால், ஆளும் கட்சி உள்ளிட்டு எந்தவொரு கட்சியும் தன்னைப் பகைத்துக்கொள்ளாத் தயாராக இல்லை, என பாரதீய ஜனதாக் கட்சி மதிப்பீடு செய்தது. நாடாளுமன்றவாத கட்சிகளைப் பற்றிய இந்த மதிப்பீடே பாரதீய ஜனதாக்கட்சியின் மதவெறி, அராஜக அணுகுமுறைக்கு அடிப்படையாக அமைந்தது. 1989ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. வி.பி.சிங் சந்தர்ப்பவாத முறையில் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவு பெற்று ஆட்சியை அமைத்தார். தனது ஆதரவில்லாமல் வி.பி.சிங் அரசாங்கம் நிலைக்க முடியாது என்ற இறுமாப்புடன் இந்துமத வெறியைத் தூண்டுவதற்காக அயோத்திக்கு அத்வானி இராம யாத்திரை நடத்தினார். அதேபோல் 1991-இல் பி.வி. நரசிம்மராவும் பாரதீய ஜனதாவின் மறைமுக ஆதரவுடன் முரளி மனோகர் ஜோஷி காசுமீர் யாத்திரை நடத்தினார். இந்த அனுபவங்களிலிருந்து நாடாளுமன்றவாத கட்சிகளைப் பற்றிய தனது மதிப்பீடு சரியானது என பாரதீய ஜனதாக் கட்சி உணர்ந்தது.

திரிபுவாதக் கட்சிகள்கூட பாரதீய ஜனதாக் கட்சியுடன் நேரடியாக ஒரு தேர்தல் கூட்டை அமைத்துக் கொள்ளவில்லை என்றாலும், அதனுடன் மறைமுகமாக நட்புறவை நாடின. வி.பி.சிங் அரசாங்கத்தின் கடைசி நாட்களில், அந்த அரசாங்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டு, அத்வானியுடன் ஒரு உடன்பாட்டிற்கான முயற்சியில் ஜோதிபாசு ஈடுபட்டார். அத்வானியின் இராம
இரத யாத்திரைக்கு எதிராக “மார்க்சிஸ்ட்” கம்யூனிஸ்ட் கட்சியும்’ வலது கம்யூனிஸ்ட் கட்சியும் குரல் எழுப்பின. இருப்பினும் “மார்க்சிஸ்ட்” கட்சியின் தலைமையில் இடது சாரி கூட்டணி ஆட்சி நடைபெற்ற மேற்குவங்கத்தின் பகுதிகளில் அத்வானியின் இராம இரத யாத்திரை பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்றவாதக்
கட்சிகள் சந்தர்ப்பவாதமான முறையில் பாரதீய ஜனதாக் கட்சியுடன் உறவு கொண்டன பாரதீய ஜனதாக் கட்சி இந்துமத வெறியைப் பிரச்சாரம் செய்வதற்கும், அராஜக செயல்களிலும் ஈடுபடுவதற்கும் துணை போயின.

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைபெற்று, தொடர்ந்து ஒரு நிலையான ஆட்சியைத் தரமுடியாதென்பதை ஆளும் வர்க்கத்தினர் உணர்ந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாரதீய ஜனதா கட்சி ஆளும் கட்சியாக உருவாவதற்கு தரகு ஏகபோக முதலாளிகளில் ஒரு பிரிவினர் பா.ஜ.கவுக்கு ஆதரவு தந்தனர்.

இந்திரா காங்கிரஸ் கட்சியும், நரசிம்மராவ் ஆட்சியும் “பொதுத்துறையைத் தனியார் மயமாக்குதல்” மற்றும் “சந்தைப் பொருளாதாரத்தைக் கடைப்பிடித்தல்” என்ற கொள்கைகளை ஏற்று அமல்படுத்தத் துவங்கியதும் இதன் விளைவாக இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையில் பெயரளவில் இருந்த சித்தாந்த வேற்றுமை ஒழிந்தது. போலி
மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்து வந்த காங்கிரஸ் கட்சி இந்து மதத்தைப் பின்பற்றுவோரின் வாக்குகளைப் பெரும் பொருட்டு கள்ளத்தனமாக இந்து மதவெறியை பயன்படுத்தியது. இது இந்துமத வெறி பாசிசம் வலுவடைவதற்குப்  பயன்பட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் காங்கிரசுக்கு மாற்றாக பாரதீய ஜனதாக் கட்சி உருவாவதை ஆதரிக்கிறது.

தற்போதுள்ள சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக இருப்பதாக பா.ஜ.க கருதுகிறது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரியும், ஆட்சி கலைக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் தேர்தல் நடத்தக் கோரியும், இந்து மத வெறி அமைப்புக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்ற கோரியும், ஒரு நாடு தழுவிய இயக்கத்தை அது நடத்துகிறது.

இந்து மதவெறியைத் தூண்டுவது ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில், பாரதிய ஜனதாக் கட்சி “இந்து இராஜ்ஜியம்” என்ற முழுக்கத்தை முன்வைத்துத்  துணிகரமாக இந்துமத வெறி பாசிச நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

“இந்து இராஜ்ஜியம்” - “இந்துத்துவம்” என்ற முழக்கங்கள் இன்று இந்திய மக்கள் சந்திக்கும் ஒரு சவாலாக இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி இந்து மதவெறி பாசிச சக்திகளுடன் கூடிக்குலாவுகிறது!


கதர்ச்சட்டையும், காவிச் சட்டையும் இந்திய பாசிசத்தின் இரண்டு சீருடைகள்


பாபர் மசூதி பிரச்சினை மற்றும் மதக்கலவரங்கள் ஆகிய பிரச்சினைகளில் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகள், இந்துமத வெறி மற்றும் பாசிசத்தைக் குறித்த அதன் அணுகுமுறைதான் தீர்மானிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டுமே பாசிசக் கொள்கைகளைத் தான் பின்பற்றி வருகின்றன. நாட்டை அடகுவைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்துதல், அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசில் குவித்தல், இந்தியாவில் ஒரு பாசிச ஆட்சிமுறை உருவாக்குவதற்கு வெளிப்படையான
பயங்கரவாத ஆட்சிமுறை, தேசிய இனங்கலை ஒடுக்குதல் பெரும் தேசியவெறியைக் கடைப்பிடித்தல், மதவெறியைத் தூண்டுதல் ஆகியவற்றில் இந்த இரு கட்சிகளுக்கிடையில் உடன்பாடு இருக்கிறது. எனினும், காங்கிரஸ் கட்சி ஒரு போலி மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கிறது. இந்துத்துவம் - இந்து இராஜ்ஜியம் என்பது பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் பிற இந்து மதவெரி அமைப்புகளின் சித்தாந்தமாக இருக்கிறது. (தத்துவமாக இருக்கிறது). போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் கட்சி இந்துமதவெறியை சூழ்நிலைமைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவதுடன், சிறுபான்மையினர் - இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தனக்கு ஆதரவாகத் திரட்டுவதற்கு முயல்கிறது. மதம் குறித்த காங்கிரஸ் அணுகுமுறை ஒரு கதம்பவாத தத்துவமாக இருக்கிறது. இந்துத்துவம், இந்து இராஜ்ஜியத்தையும் தமது அடிப்படையாகக் கொண்டுள்ள பாரதீய ஜனதாக் கட்சியும், பிற காவிச் சட்டை அமைப்புகளும் ஊசலாட்டமின்றியும், உறுதியுடனும் இந்து மதவெறியைத் தூண்டுவதை தனது செயல் தந்திரங்களுக்கு அடிப்படையாகக் கொள்கிறது. இதுவே இவ்விரு கட்சிகளுக்கிடையிலுள்ள வேற்றுமை. இவ்விரு கட்சிகளுக்கிடையிலுள்ள ஒற்றுமையே முதன்மையான அம்சமாக இருக்கிறது. இவற்றுக்கிடையில் உள்ள வேற்றுமை இரண்டாம் நிலையானதுதான். ஆகவே காங்கிரஸ் கட்சி ஆட்சியாளர்கள், பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் பிற காவிச்சட்டைகளுடன் நல்லிணக்கம் காண முயல்கிறார்கள்.

பாபர் மசூதி பிரச்சினையும் காங்கிரஸ் ஆட்சியும்

பாபர் மசூதி பிரச்சினையை காங்கிரஸ் ஆட்சி எவ்வாறு கையாண்டது? பாபர் மசூதி இஸ்லாமியருக்குச் சொந்தமானது என்பதற்கு மாறாக, அது ஒரு “சர்ச்சைக் குள்ளான கட்டிடம்” என்ற பிரதம மந்திரி குறிப்பிடத் துவங்கினார். கி.பி 1528-க்கு முன்னர் பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது என்பது நிரூபிக்கப்படுமானால் அந்த இடம் (பாபர் மசூதி) விஸ்வ இந்து
பரிஷத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஒரு தீங்கான கோட்பாட்டிர்கு உடன்பட்டார். இறுதியாக, விட்டுக்கொடுத்து சாந்தப்படுத்தும் கொள்கைகளால் எதையுமே சாதிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதும் ஒரு திடமான நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டு வழக்கு மன்றங்களில் பின்னால் ஒளிந்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தார்.

மசூதி இடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அதிகாரங்களை பிரதமரிடம் பாரதீய ஜனதாக் கட்சியில்லாத மற்ற நாடாலுமன்றக் கட்சிகள் அளித்திருந்தும அவர் மசூதிப் பிரச்சினையை பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த உத்திரப்பிரதேச முதலமைச்சரிடம் விட்டுவிட்டார். மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டுவிட்டது. மசூதி
தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் ஆறுமணி நேரம் மத்திய ஆட்சி செயலற்று இருந்தது. இராமர் சிலை மீண்டும் அங்கே வைப்பதற்கும், அதே இடத்தில் இராமருக்கு ஒரு சின்ன கோவிலைக்கட்டுவதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த இடத்திலிருந்து அனைவரையும் பாதுகாப்புப் படைகள் வெளியேற்றிய பிறகு, அங்கே சிலைகள் தொடர்ந்து இருப்பதற்கும்,

மீண்டும் அந்த சிலைகளுக்கு வழிபாடு தொடர்ந்து நடப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இவை எல்லாம் எவ்வாறு நிகழ்ந்தன என்று கேட்டால் பாரதீய ஜனதா கட்சி நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது என பிரதமர் காரணம் கூறுகிறார். இது ஒரு நயவஞ்சகமான பதிலே தவிர, உண்மையல்ல. காங்கிரச் ஆட்சியாளர்கள் பாசிசக் கொள்கைகளை அமல்படுத்தத் தீர்மானித்த காலத்திலிருந்தே காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இந்து மதவெறி சக்திகளுக்கு பலவழிகளில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் இணக்கம் காண முயற்சித்து வந்துள்ளார்கள். இந்து மதவெறியை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

1983ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜம்மு தேர்தலில் இந்திரா காங்கிரஸ் இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்துமத வெறிச் சக்திகளுடன் கூடிக் குலாவியது அனைவருமே அறிந்த உண்மையாகும். இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட பிறகு 1984இல் நடைபெற்ற தேர்தலில் இந்துமத வெறியைப் பயன்படுத்துவது இந்திரா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தந்திரத்தின் அடிப்படையாக இருந்தது.

1985இல் ஷாபானு என்ற முஸ்லீம் பெண்ணின் ஜீவனாம்ச வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 125 பிரிவு முஸ்லீம்களுக்கும் பொருந்தும் என்றும், அதன்படி ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்றும் ஒரு தீர்ப்பையளித்தது. குற்றவியல் சட்டத்தின் 125 பிரிவு இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது என்று சொல்லி ஒரு புதிய சட்டம் இயற்றுமாறு முஸ்லீம் தலைவர்கள் (இஸ்லாமிய மதவாதிகள்) பிரதமர் இராஜீவ் காந்தியை வற்புறுத்தினர். முஸ்லீம் மதவெறியர்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு இராஜீவ் காந்தி முஸ்லீம் பெண்களின் உரிமைகளை பறிக்கும்படியான ஒரு புதிய சட்டத்தை இயற்றினார். இவ்வாறு செய்த இராஜீவ் காந்தி இந்துமத வெறியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, முப்பது ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதியை இந்துக்களுக்கு திறந்துவிட்டார். இவ்வாறு இந்திரா காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இரண்டு மதவாத சக்திகளையும் தங்களுக்கு ஆதரவாகத்  திரட்ட முயன்றனர்.காங்கிரஸ் கட்சியின் இத்தகைய மதவாத ஆதரவு நடவடிக்கைகளுக்கு பிறகுதான், 1981ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இரண்டேஇடங்களைப் பெற்று தோல்வியடைந்த பாரதீய  ஜனதாக் கட்சி தனக்கென ஒரு இந்து வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக துணிச்சலுடன் இந்து மதவெறியைத் தூண்டும் பாசிசச் செயல்களில் தீவிரமாக ஈடுபடத் துவங்கியது. காங்கிரசின் மதவாத ஆதரவுச் செயல்களை பாரதீய ஜனதாக்கட்சி தனது இந்துமத பாசிசக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டது.

பாரதீய ஜனதாக் கட்சியும் பிற காவிச்சட்டை அமைப்புகளும் 1992 டிசம்பர் 6-இல் பாபர் மசூதி இடித்துத் தள்ளிய நடவடிக்கைக்காக கடந்த ஆறு ஆண்டுகாலமாகத் தயாரித்துவந்தன.இக்காலம் முழுவதிலும், அதன் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திரா காங்கிரஸ் கட்சி இந்துமதவெறிச் சக்திகளுடன் சமரசம் செய்துகொள்ளும் போக்கையே கடைப்பிடித்து
வந்தது.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, வி.பி.சிங் தலைமையின் கீழ் ஜனதாக் கட்சியும், தேசிய முன்னணியும், ஒரு புறம் இடதுசாரி
முன்னணியுடன், வெளிப்படையான தேர்தல் கூட்டு ஏற்படுத்திக் கொண்டன. மறுபுறம், சந்தர்ப்பவாதமாக பாரதீய ஜனதா கட்சியுடன் மறைமுகத் தேர்தல் உடன்பாடு கொண்டது. இத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சி தோல்வி
அடைந்தது. பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவுடன் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சியை அமைத்தது. இப்போது நரசிம்மராவ் கும்பல் அமல்படுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையை பொதுத்துறையை தனியார் மயமாக்குதல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் மூலம் பன்னாட்டுகம்பெனிகளுக்கு  நாட்டின் பொருளாதாரத்தை அகலத் திறந்துவிடுதல் மற்றும் நாட்டை ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடகு வைக்கும் கொள்கையை - அப்போதே வி.பி.சிங் அரசாங்கம் ஏற்று அதை அமூல்ப்படுத்த முயற்சி செய்தது. ஆனால் இந்தத் தேசத்துரோக கொள்கையை பாரதீய ஜனதாக் கட்சியோ காங்கிரஸ் கட்சியோ, திருத்தல்வாதக் கட்சிகளோ எதிர்த்துப் போராடவில்லை.

தனது ஏகாதிபத்திய ஆதரவு பொருளாதாரக் கொள்கையை மூடிமறப்பதற்காகவும் ஜனதா கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூழல் மற்றும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவும் வி.பி.சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமூல்ப்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்தார். இதனால் ஏற்பட்ட உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும், இந்து மதவெறியைத் தூண்டியதின் மூலம் உருவாக்கப்பட்ட தனது இந்து ஓட்டுவங்கியைத் திடப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, இந்த நெருக்கடியான நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு தனது வலிமையைக் கூட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் பா.ஜ.கவின் அத்வானி இராம இரத யாத்திரையை நடத்தினார்.

நாடாளுமன்றத்தில் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதில் பா.ஜ.க ஈடுபட்டது. இவை அனைத்துக்கும் இந்திரா காங்கிரஸ் கட்சி துணை போனது.

மீண்டும் இந்திரா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு, பாசிச நரசிம்மராவ் கும்பல் “கருத்தொற்றுமை” என்ற பெயரால் தனது சிறுபான்மை ஆட்சியை நடத்தும் பொருட்டு பா.ஜ.க-வுடன் கூடிக்குலாவியது. நாடாலுமன்ற அவைத் தலைவர் (சபாநாயகர்) தேர்தலில் பா.ஜ.க வுடன் உடன்பாடு கண்டது. நாட்டை அடகு வைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பா.ஜ.கவின் ஒத்துழைப்பைப் பெற்றது. பா.ஜ.க தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் காசுமீர் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து தந்தது. சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் கரசேவகர்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது. இறுதியாக காவிச்சட்டை அமைப்புகள் கரசேவையின் மூலம் பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியபோது, கைகட்டிக் கொண்டு அதை வேடிக்கை பார்த்தது. இந்து மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடிப் பாபர் மசூதியை இடிக்காமல்
தடுத்து நிறுத்த நரசிம்மராவ் அரசாங்கம் தாயாராக இல்லை.

எனவே இந்திராகாந்தி, இராஜீவ்காந்தி காலத்திலிருந்தே காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இந்துமதவாத சக்திகளுடன் கூடிக்குலாவி வந்ததும், நரசிம்மராவ் அரசாங்கம் இந்து மதவெறி சக்திகளுடன் செய்த கூட்டுச்சதிதான் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதற்கு உண்மையான காரணம். இதை மூடிமறைப்பதற்காகத்தான் பாரதீய ஜனதாக் கட்சி துரோகம்
செய்துவிட்டது என்று கூறி நரசிம்மராவ் திசை திருப்புகிறார்.

காவிச் சட்டைகள் நடத்திய மதக்கலவரங்களுக்கு காங்கிரஸ் ஆட்சி துணை போனது:

பாபர் மசூதியில் காவிச் சட்டைகள் கரசேவை செய்யத் திட்டமிட்டதன் துவக்கத்திலிருந்தே மதக்கலவரங்கள் நிகழும் அபாயம் இருந்து வந்தது. மசூதி அழிக்கப்பட்டுவிட்ட செய்தி தெரிந்தவுடனே கலவரங்கள் துவங்கிவிடும் எனத் தெரிந்தும் மாநில அரசாங்கங்களையும், காவல்துறையையும், இராணுவத்தையும் மத்திய அரசாங்கம் தயார் நிலையில் வைக்காதது
ஏன்?

இந்திராகாந்தி ஆட்சியில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்தபோது ஒரே நாளில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்தது. ஜனநாயகத்தின் குரல்வலையை நசுக்க இந்திரா காங்கிரஸ் ஆட்சியால் அன்று அவ்வாறு செய்ய முடிந்தது. ஆனால் தடை செய்யப்பட்ட இந்து மதவெறி அமைப்புகளின் தலைவர்களை அதைப்போல் இப்போது ஒரே நாளில் கைது செய்ய முடியாமற்போனது ஏன்?

ஒரு பீதி நிறைந்த சூழ்நிலையை உருவாக்கி மக்களின் கவனத்தை அவர்களைக் கிளர்ந்தெழச் செய்யும் இந்த ஆட்சியின் தேசவிரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளிலிருந்து திசை திருப்பிவிட முயற்சிக்கும் ஒரு அரசியல் செயல் தந்திரம் தானே?

இதையெல்லாம் பார்க்கும்போது, பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் தாண்டவமாடிய கொலைகள், கொள்ளைகள், தீ வைப்புச் சம்பவங்களுக்குக் காங்கிரஸ் ஆட்சி துணைபோனது என்றே சொல்லலாம். பம்பாயில் நடந்த மதக்கலவரங்களில் மகாராட்டிர மாநில காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்ட முறை இதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி காவிச் சட்டைகளுக்கு விட்டுக் கொடுக்கிறது:

பாசிச நரசிம்மராவ் கும்பலின் ஆட்சி இந்துமத வெறி பாசிசக் கும்பலின் காவிச்சட்டை அமைப்புகளின் மதக்கலவரங்களுக்குத் துணைபோனதுடன் நின்றுவிடவில்லை. அவர்களுக்கு விட்டும் கொடுக்கிறது. இந்த ஆட்சியின் பின்வரும் நடவடிக்கைகள் அதைத்தான் காட்டுகின்றன.

வாஜ்பாய் உண்ணாவிரதம் இருந்தபோது முன்வைத்த கோரிக்கைகளை இந்த ஆட்சி ஏற்றுக்கொண்டது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட்ட இராமன் சின்ன கோவில் வழிபாட்டுக்கு அனுமதி அளித்தது.

அயோத்தி பாபர் மசூதி இடத்தை மத்திய அரசாங்கம் கையகப்படுத்திய போதிலும் அங்குள்ள இராமன் சின்னகோவிலை நிலை நிறுத்தும் முறையில் அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

அங்கேயே மசூதியை கட்டுவதென அளித்திருந்த வாக்குறுதியைக் கைவிட்டது.

வகுப்புவாத எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைத்து வகுப்புவாதத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்த தனது திட்டத்தையும் கைவிட்டது.

’இந்துத்துவத்தை’ தானும் ஏற்பதாக முடிவெடுத்துள்ளது.

சிவசேனையை தடைசெய்ய மறுக்கிறது.

இவையனைத்தும் நரசிம்மராவ் கும்பலின் ஆட்சி காவிச் சட்டை அமைப்புகளின் தாக்குதல்களுக்கு விட்டுக் கொடுப்பதைத்தான் காட்டுகிறது.

விட்டுக்கொடுத்து அவர்களுடன் உடன்பாடு காண முயல்வது ஏன்?

காங்கிரஸ் ஆட்சி நாட்டை அடகுவைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. இதன் பொருள் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகலின் தலைமையில் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும், பன்னாட்டு கம்பெனிகளும் நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தவும், தொழில், வர்த்தகம் என்ற பெயரில் நம் நாட்டை சுரண்டிச் செல்லவும் நரசிம்மராவ்
கும்பலின் ஆட்சி சேவை செய்கிறது என்பதே ஆகும்.

உலகவங்கியும், சர்வதேச நிதியமும் இடும் கட்டளைக்குப் பணிந்து உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை நமது மக்களின் மீது திணிக்கிறது. இதன் விளைவுதான் மானியத்தை வெட்டுவது, ஏற்றுமதி - இறக்குமதிச் சலுகைகளை வழங்குவது, நாணய மதிப்பைக் குறைப்பது, அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றுவது, வரிகளை உயர்த்துவது,

விவசாயிகளுக்கு மின் கட்டணத்தை விதிப்பது, உயர்த்துவது, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, ஆலைகளை மூடுவது, தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது, ரேசன் கடைகளில் விற்கப்படும் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஏற்றுவது, பொதுக்கல்வி, மருத்துவம், சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்படும்

நிதியைக் குறைப்பது, கிராமப்புற வேலை வேய்ப்புக்கான நிதியைக் குறைப்பது, இன்ன பிறவும். இதனால் மக்களுக்கு சொல்லொணா துயரம் ஏற்படுகிறது. மக்களின் அதிருப்தி வளர்கிறது.

நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து உழுபவனுக்கு நிலம் அளிக்க இந்த அரசாங்கம் மறுக்கிறது. ஆகையால் குத்தகை விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்.

வேளாண்மைத்துறையில் அரசாங்கம் முதலீடு செய்வதும், தனியார் முதலீடு செய்வதும் குறைந்துவிட்டது இதனால் அதிகரித்துக் கொண்டிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது.

நீர்ப்பாசனத்தை விரிவுப்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி குறைக்கப்பட்டதால், ஆண்டொன்றிற்கு 2.5 மில்லியன் ஹெக்டேர்கள் நிலத்திற்கு புதிய பாசன வசதிகள் விரிவுப்படுத்துவது ஆண்டொன்றிற்கு ஒரு மில்லியன் ஹெக்டேருக்கும் குறைவாகவே நீர்ப்பாசன வசதியை விரிவுப்படுத்துவதாக குறைந்துவிட்டது. அத்துடன் புதிய பொருளாதாரக்
கொள்கையின் விளைவாக கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் குறைக்கப்பட்டுவிட்டது.

மேற்கூறப்பட்ட காரணங்களால் கிராமப்புற மக்களும் பெரும் துன்பத்திற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் அதிர்ப்தியும் அதிகரித்து வருகிறது.
பாரதீய ஜனதாக் கட்சியும் காவிச்சட்டை அமைப்புகளும் ஒருபுறம், நரசிம்மராவ் அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவு தருகிறது. மறுபுறம், புதிய பொருளாதாரக் கொள்கை அமூல்ப்படுத்துவதால் ஏற்படும் மக்களின் அதிருப்தியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

அதிருப்தி அடைந்துள்ள மக்களின் ஆதரவைப் பெறாமல், நரசிம்மராவின் ஆட்சியால் பாரதீய ஜனதாக் கட்சியையும் காவிச்சட்டை அமைப்புகளையும் எதிர்த்துப் போராடி வெல்ல முடியாது. ஆனால் மக்களின் அதிருப்திக்குக் காரணமாக உள்ள புதிய பொருளாதாரக் கொள்கையை அது கைவிடத் தயாராக இல்லை. அதனால் கைவிடவும் முடியாது. அதே நேரத்தில்
பா.ஜ.க வும் காவிச்சட்டைகளும் நரசிம்மராவ் அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவுதரத் தயாராக இருக்கின்றன. புதிய பொருளாதாரக் கொள்கையை அமூல்ப்படுத்துவதில் அக்கறை கொண்ட அமெரிக்காவும், பிற ஏகாதிபத்திய நாடுகளும் தரகு ஏகபோக முதலாளிகளும் திரமறைவில் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும்
இடையில் சமரசம் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். நரசிம்மராவ் கும்பலின் ஆட்சி தனது போலி மதச்சார்பின்மையைக் கைவிட்டு, பாரதீய ஜனதாக் கட்சிக்கு விட்டுக்கொடுத்து அதனுடன் சமரசம் செய்துகொள்ள முயற்சி செய்கிறது. அத்துடன் புதிய பொருளாதாரக் கொள்கையால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து அவர்களின் கவனத்தை திசை
திருப்புவதில் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும்  இடையில் நடைபெறும் சண்டையை நெறிப்படுத்துவதில் ஏகாதிபத்தியவாதிகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஏகாதிபத்தியவாதிகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றனர்.

மதக்கலவரங்களினால் அரசியல் ஸ்திரத் தன்மை குலைந்து ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் புதிய பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்துவதில் சிக்கல் ஏற்படாமல் ஒழுங்குபடுத்துவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் நம் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது. அமெரிக்க அரசு வெளிப்படையாகவே நரசிம்மராவ் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறது. இந்தியாவின் “அரசியல் ஸ்திரத்தன்மை” ஆட்டம் கண்டிருக்கும் பேரபாயத்தைப் பற்றிக் “கவலை” தெரிவிப்பதற்காக ஒரு மேல்மட்ட அமெரிக்க இராஜதந்திரி பாரதீய ஜனதாக்கட்சியின் பொருளாதாரக் கொள்கை ஆசிரியர் ஜெய்தூ பாஷியையும், அக்கட்சியின் அயல் உறவு அமைப்பின் பொறுப்பாலர் பிரிஜேஷ் மிஸ்ரா ஆகிய இருவரையும் சந்தித்தார்.
இந்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை பாரதீய ஜனதா ஆதரிக்கவேண்டிய அவசியத்தை அவர் உணர்த்தினார். பாரதிய ஜனதாக்கட்சி நரசிம்மராவ் அரசாங்கத்தின் அரசியலை எதிர்ப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். அமெரிக்காவின் இந்த தலையீடு இந்திய அரசு எந்த அளவிற்கு இறையாண்மை பெற்ற ஒரு அரசு என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அமெரிக்காவும், பிற ஏகாதிபத்திய நிறுவனங்களும் நம் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதை காங்கிரசு,
பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமல்ல, பிற நாடாளுமன்றவாத கட்சிகளும் எதிர்த்துப் போராடத் தயாராக இல்லை. நாட்டின் மத்திய அரசாங்கத்திலோ அல்லது மாநில அரசாங்கத்திலோ அமர விரும்பும் கட்சிகள் எப்படி புதிய பொருளாதாரக் கொள்கையையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும் எதிர்த்துப்போராட முடியும்? இதை நாடாளுமன்றக் கட்சிகள் நன்கு உணர்ந்திருக்கின்றன. ஆகவே இக்கட்சிகள் இதைக் கண்டும் காணாதது போல் நடிக்கின்றன.

நமது நாட்டு உள் விவகாரங்களில் தலையிடுவதோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் நின்றுவிடவில்லை இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதன் மூலம் தென் ஆசிய பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைத்துவிடும் விதத்தில் எதையும் செய்யக்கூடாது என்று பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை செய்திருக்கிறது. தென் ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் துணை மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இவ்வளவு அக்கறை கொண்டிருப்பது ஏன்? இந்திய அரசு தென் ஆசியாவின் பிற்போக்குக் கோட்டை கொத்தளமாக இருப்பதால்தான். தனது இறையாண்மையை ஏகாதிபத்தியவாதிகளின் காலடியில் வைத்துவிட்டு, தென் ஆசியாவின் பிற்போக்கிற்கு கோட்டை கொத்தளமாக இருக்கும் இந்திய அரசு எவ்வாறு ஒரு ஜனநாயக அரசாக இருக்க முடியும்? அது எவ்வாறு ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சமான மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க முடியும்?

ஜெயலலிதாவின் ஆட்சி பாசிஸ்டுகளின் பக்கமே!

ஜெயலலிதா தமிழ் மாநில ஆட்சியை அமைத்ததும் ஈழ விடுதலைப் புலிகளை அடக்குவதற்கெனச் சொல்லி தடா சட்டத்தை தமிழகத்தில் அமுலுக்குக் கொண்டு வந்தார். எனவே ஜெயலலிதாவின் ஆட்சி அதன் துவக்கத்திலேயே ஒரு கருப்புச்சட்ட ஆட்சியாக அமைந்துவிட்டது. அத்துடன் ஜெயலலிதா அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவு தந்ததோடு மட்டுமல்லாமல், தமிழகத்திலும் அதே பிற்போக்கு பொருளாதாரக் கொள்கைகளை அமூல்ப்படுத்தி வருகிறார். இதன் விளைவாக மக்களின் பொருளாதார வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறது. இவையெல்லாம் போதாதென்று, ஜெயலலிதா ஒரு ஊழல் மலிந்த ஆட்சியை நடத்தி வருகிறார். இவை எல்லாம் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உரியதாக இருக்கின்றன. இந்த ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக மக்களின் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது. அதிருப்தியுற்ற மக்களையும் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளையும் ஒடுக்குவதற்காக ஜெயலலிதா அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகிறது. ஒரு போலீஸ் இராஜ்ஜியத்தை
நடத்தி வருகிறது. இதன் விளைவாக காவல்துறையின் அராஜகமும் அட்டூழியங்களும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு இந்தஆட்சிக்கும், மக்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு வலுத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் மாநில ஆட்சி தங்களுக்கு மரியாதை தரவில்லை அதாவது லஞ்ச லாவணியங்களிலும், அதிகார அமைப்புகளிலும் தங்களுக்கு
சரியானபங்கு தரவில்லை என்று காங்கிரஸ் கட்சி ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து வருகின்றது. ஜெயலலிதாவை எதிர்த்து சுப்பிரமணிய சாமியின் நல்லாட்சி இயக்கத்தைத் தூண்டிவிட்டு ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சி அடக்கி வைக்க முயன்றது. தனது ஆட்சி மத்திய அரசாங்கத்தால் கவிழ்க்கப்படுமோ என்ற அச்சத்திற்கு ஜெயலலிதா உள்ளானார் - இதனால் அ.இ.அ.தி.மு.க-விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் உள்ளதேர்தல் கூட்டு நெருக்கடிக்குள்ளாகியது.

இவ்வாறு தனது ஆட்சிக்கு மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பு, மத்திய அரசால் தனது ஆட்சி கலைக்கப்பட்டு விடுமோ என்று அச்சம் ஆகியவற்றால் ஏற்படும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்குபாரதீய ஜனதா கட்சியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவில் பாபர் மசூதியில் பாரதீய ஜனதாக் கட்சியும் பிற இந்துமத வெறி பாசிச அமைப்புகளும் கரசேவை செய்வதற்கு ஆதரவு தெரிவித்தார். அ.இ.அ.தி.மு.க, கரசேவையை ஆதரித்து பிரச்சாரம் செய்ததுடன் கரசேவைக்கு ஆட்களையும் அனுப்பியது. இந்து மதவெறி பாசிச அமைப்புடன் அ.இ.அ.தி.மு.க-வும் ஜெயலலிதா ஆட்சியும் கூடிக்குலாவுகின்றன. நிலைமைக்கு ஏற்றாற்போல் சந்தர்ப்பவாதமாக காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றிற்கு ஆதரவு தருவதின் மூலம் ஜெயலலிதா தமிழக ஆட்சியில் நீடித்திருக்க விரும்புகிறார், எப்படியிருப்பனும் அ.இ.அ.தி.மு.க-வும் ஜெயலலிதா ஆட்சியும் காங்கிரஸ் பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டுச்சதியை ஆதரிக்கிறது. இந்த மதவெறி பாசிசக் கும்பலை நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜெயலலிதா ஆட்சியும் அ.இ.அ.தி.மு.க-வும் ஆதரிக்கிறது.

தேசிய முன்னணி, இடது சாரி முன்னணி சமரசப் பாதையை பின்பற்றுகின்றன.

இந்து மதவெறி பாசிச அமைப்புகளான பாரதீய ஜனதாக் கட்சியும், பிற காவிச் சட்டை அமைப்புகளும், பாபர் மசூதியை இடித்துத் தள்ளுவதற்கு நரசிம்மராவ் ஆட்சி உடந்தையாக இருந்தது என்று மசூதி இடிக்கப்பட்ட ஒருசில நாட்கள் தேசிய முன்னணியும், இடதுசாரி முன்னணியும் பேசி வந்தன. பிறகு வழக்கம்போல், வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் தரகு  முதலாளித்துவ காங்கிரஸ் கட்சிக்கு கடைசி நேரத்தில் “தோள் கொடுக்கும்” தமது வரலாற்றுக் கடமையைச் செய்யத் துவங்கி விட்டன. ஒரு சில ஜனதா தளத் தலைவர்கள் நீங்கலாக, தேசிய முன்னணியும், இடதுசாரி முன்னணியும் காங்கிரஸ் கட்சியின் மதச் சார்ப்பின்மையைப் பலப்படுத்தும் பணியைச் செய்யத் துவங்கிவிட்டன.

இந்திய அரசியல் சட்டமும், இந்திய அரசும் பேசுவது ஒரு போலி மதச்சார்பின்மை என்பதையும், இவை இந்துமத ஆதிக்கத்திற்கு மறைமுகமாக சேவை செய்பவையாகும் என்பதையும், இந்துமத, சாதி ஆதிக்கத்திலிருந்து இந்திய அரசு அமைப்புமுறை பிரிக்கப்படவில்லை என்பதையும், மதம் தனி நபரின் சொந்த விவகாரமாக ஆக்கப்படவில்லை என்பதையும், இந்தியாவின் போலி நாடாளுமன்ற ஆட்சிமுறை போலி மதச் சார்பின்மை வலுவடைவதற்கு சேவை செய்கிறது என்பதையும் தேசிய முன்னணி மற்றும் இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த கட்சிகள் ஏற்பதில்லை. இந்திய அரசியல் சட்டமும் இந்திய அரசும் ஜனநாயகமானது, மதச்சார்பற்றது என்று இக்கட்சிகள் கருதுகின்றன. எனவே பிறவாழ்வுத் துறைகளில் இக்கட்சிகளின்
கோட்பாடுகள் வர்க்க சமரசத் தன்மை கொண்டதாக இருப்பதைப் போலவே, மதத்துறையிலும் இக்கட்சிகளின் கோட்பாடுகளும், தீர்வுகளும் சமரசத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கின்றன; முழு நிறைவான முதலாளித்துவ ஜனநாயக கோட்பாடுகளாகவும், தீர்வுகளாகவும் இல்லை.

பாபர் மசூதியை சர்ச்சைக்கு உட்பட்ட இடம் என்ற காங்கிரஸ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தேசிய முன்னணி மற்றும் இடது சாரி முன்னணியைச் சேர்ந்த கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. அயோத்தி பிரச்சினை சம்பந்தமான வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விட்டுவிட வேண்டும். அதன் தீர்ப்பே அனைவரையும் கட்டுப்படுத்தும் என்பது இக்கட்சிகளின் நிலைப்பாடு. எனவே இக்கட்சிகள் பாபர் மசூதி இஸ்லாமியருக்குச் சொந்தமானது என்ற நிலைப்பாட்டை உறுதியாக ஆதரிக்கவில்லை. அதற்கு மாறாக இந்து மதவாதிகளின் நோக்கங்களுக்கு மறைமுகமாக துணை போயின.

காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி ஆகிய இரண்டுமே பாசிசக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் கட்சிகளாக இருக்கின்றன என்பதை இக்கட்சிகள் பார்க்கத் தவறுகின்றன. ஆகையால் இக்கட்சிகள், காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சியுடன் கூடிக் குலாவி வருகிறது என்று சொன்னபோதிலும் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்படுவதற்கு முன்னர், நரசிம்மராவ் ஆட்சி மதச்சார்பற்ற கொள்கையின் பாதுகாவலன் எனக்கருதி, மசூதியை காக்கும் பொறுப்பையும் அதிகாரத்தையும் அதற்கு வழங்கிவிட்டன. பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் ‘மதச் சார்பின்மையை’ பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த பிறகு இந்து மதவெறி பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு மதச்சார்பின்மை முன்னணியைக் கட்ட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கூறின.

இந்து மதவெறிக் கும்பல் பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய பிறகு ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் ஜனநாயகவாதிகள்  மேற்கொள்ள வேண்டிய பணியை ‘மார்க்சிஸ்டு’ கட்சி பின்வருமாறு வரையறை செய்கிறது:

மனித நேயமும், தேச ஒற்றுமையும், இந்திய ஜனநாயகமும் வாழ - காப்பாற்றப்பட - இந்துமதவெறிக் கும்பல் தனிமைப்படுத்தப்பட வேண்டும் - ஒதுக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுகூடி இந்தக் கும்பலை எதிர்த்துப் போராட வேண்டும்.

ஒரு மாற்றுக் கொள்கைகளை மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி அமூல்படுத்த வேண்டுமென போராட வேண்டும். அந்த ஆட்சிக்கு நிர்ப்பந்தம் கொடுக்க அனைத்து ஜனநாயகக் கட்சிகளும் இடையறாது போராட வேண்டும்.

இந்த மேற்கோளிலிருந்து பார்த்தால் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்துப்படி ஜனநாயகவாதிகள் மேற்கொள்ள வேண்டிய பணியின் சாராம்சம் பின்வருமாறு அமைகிறது.

அ) இந்துமத கும்பல் தனிமைப்பட வேண்டும் ஒதுக்கப்பட வேண்டும். இதற்காக அதை எதிர்த்துப் போராட வேண்டும்.

ஆ) ஒரு மாற்றுக் கொள்கைகளை காங்கிரஸ் ஆட்சி அமுல்படுத்தும் பொருட்டு அந்த ஆட்சிக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும்.

ஏன் இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வந்தது?

இந்து மதவெறி அமைப்புகள் மட்டுமே ஜனநாயக விரோதமனாது. காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும் மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்கின்ற ஒரு ஜனநாயகக் கட்சியும், ஆட்சியும் ஆகும் என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. ஆகையால், மதவாதக் கும்பல் - பாரதீய ஜனதாக் கட்சியை எதிர்த்துப் போராட வேண்டும். மதச் சார்பற்ற, ஜனநாயக காங்கிரஸ் ஆட்சி ஒரு மாற்றுக்
கொள்கைகளை அமூல்படுத்த நிர்ப்பந்திக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஏகாதிபத்தியத்திற்கும், நிலப்பிரபுத்துவத்துக்கும் எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படும் என்றும் அது கருதுகிறது.

ஆகையால் காங்கிரஸ் ஆட்சியை நிர்ப்பந்தித்தால் ஏகாதிபத்தியத்திற்கு சேவை. செய்யும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதைக் கைவிட்டு “மார்க்சிஸ்ட்” கட்சி முன்வைக்கும் ஒரு தேசிய, ஜனநாயக பொருளாதாரக் கொள்கைகளை அமூல்ப்படுத்திவிடும் என அது கருதுகிறது. ஆகையால் காங்கிரஸ் ஆட்சி பீடத்திலிருந்து தூக்கி எறிவதற்கு மாறாக
அதை நிர்ப்பந்திக்க வேண்டும் என அது கூறுகிறது. இதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இது தரகு முதலாளித்துவத்திற்குச் சேவை செய்யும் நிலைப்பாட்டைத் தவிர வேறு என்ன?

இந்த நிலைப்பாட்டிலிருந்துதான் பாரதீய ஜனதாவை மட்டுமே இலக்காகக் கருதி அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை உள்ளிட்டு ஒரு மதச்சார்பற்ற முன்னணி என்கிற ஒரு அரசியல் செயல் தந்திரத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கபடத்தனமாக ஆதரவு திரட்ட முயல்கிறது.

இரண்டு பாசிச சக்திகளையும் எதிர்த்து மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரட்டுவதே எமது பணி

பாபர் மசூதியை இடித்துத் தள்ளுதல், திட்டமிட்டு மதக் கலவரங்களை நடத்துதல் போன்ற பாரதீய ஜனதா கட்சியின் இந்துமதவெறி பாசிச நடவடிக்கைகள் இரண்டு பிரச்சனைகளைக் கிளப்பி இருக்கின்றன.

1. வளர்ந்துவரும் இந்து மதவெறி பாசிச போக்கு குறித்து ஜனநாயகவாதிகள் என்ன அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்?

2. பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில் ஜனநாயகவாதிகளின் பணி என்ன?

இவ்விரு பிரச்சனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்வோம்.

இந்துமதவெறி பாசிச அமைப்புகளைக் குறித்து பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கத்தின் அணுகுமுறை 

முதலாவதாக, காவிச்சட்டை அமைப்புகளைக் குறித்த நமது அணுகுமுறை.
இந்தியாவை ஆளும் தரகு ஏகபோக முதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் ஒரு பிற்போக்கு பிரிவினரின் நலன்களுக்குச் சேவை செய்வதற்காக, பாரதீய ஜனதாக் கட்சி ‘இந்துத்துவம்’ என்ற இந்துமதவாத சித்தாந்தத்தையும் ‘இந்து இராஜ்ஜியம்’ என்ற மதவாத அரசியலையும் பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கு ஒரு
ஓட்டு வங்கியைத் தயாரிக்கும் பொருட்டு மதவெறியைத் தூண்டும் அராஜகச் செயல்களில் ஈடுபட்டது. எத்தகைய பிற்போக்கு நோக்கங்களுக்காக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்ற முயல்கிறது என்பதை நாம் அறிவோம்.

ஒரு இந்துமதவெறி பாசிச ஆட்சியை அமைத்து ஏகாதிபத்தியங்களுக்கும், பணமுதலைகளுக்கும், நிலத் திமிங்கலங்களுக்கும், உயர்சாதி ஆதிக்க வெறியர்களுக்கும் சேவை செய்வதற்காகத்தான், பாரதீய ஜனதாக் கட்சி இராமன் பேரைச் சொல்கிறது. ‘இந்து இராஜ்ஜியம்’ என முழங்குகிறது. இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மதவெறியைத் தூண்டுகிறது. மசூதியை
இடிக்கிறது என்பதை இராம பக்தர்களும் பிற இந்துமதத்தினரும் உணர்ந்துவிட்டால், அவர்கள் நிச்சயமாக இந்தக் காவிச்சட்டைக் கயவர்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள். இந்துமதத்தைச் சேர்ந்த பரந்துப்பட்ட மக்கள் - விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், அறிவாளிகளும்கூட - இன்னும் மத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே மதச்சார்பற்ற அரசு, அனைவருக்கும் மதச் சுதந்திரம் என்ற முழக்கங்களுக்கு ஆதரவாக இராம பக்தர்களை உள்ளிட்டு ஜனநாயக எண்ணம் படைத்த அனைவரையும் ஓரணியில் திரட்ட வேண்டியது அவசியம்.

 (மதம் குறித்து மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல் தந்திரங்களும் என்பது பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. மதம் குறித்து நமது அணுகுமுறையை விளங்கிக் கொள்வதற்காக அதைப் படிக்குமாறு கோருகிறோம்.)  

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்
http://samaran1917.blogspot.co.uk/2010/01/blog-post.html

அவ்வாறு திரட்டினால் நாம் இந்தக் காவிச்சட்டை அமைப்புகளை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துவிடலாம். பாரதீய ஜனதாக்கட்சி பார்ப்பன பூசாரிகளையும், பண்டாரங்களையும், பரதேசிகளையும், மடாதிபதிகளையும்
அரசியல் அரங்கில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இந்த ஆஷாட பூதிகளின் திருவிளையாடல்கள் அம்பலப்பட்டுப்போய், செல்லாக்காசாகி, இத்தனை நாட்கள் எங்கோ மூலையில் முக்காடிட்டு முடங்கிக் கிடந்தனர். கதர்ச்சட்டை கும்பலின் ஆட்சியால் மக்களுக்கு ஏற்பட்ட மனவேதனை களையும், துயரங்களையும், அவலங்களையும் பயன்படுத்திக் கொண்டு
மீண்டும் இந்த மடாதிபதிகளும், பார்ப்பன பூசாரிகளும், பண்டாரங்களும் பரதேசிகளும் இராம பஜனை பாடிக்கொண்டு அரசியல் அரங்கில் தலை தூக்குகின்றன. இதுகளை அரசியல் அரங்கில் ஆட அனுமதிப்பது, அறிவுக்குக் கேடு, மக்களுக்குக் கேடு, நாட்டுக்கும் கேடு. ஜனநாயகத்தின் முன்னேற்றத்துக்கும், மக்களின் நல் வாழ்விற்கான போராட்டங்கள் வெற்றி
பெறுவதற்கும், சாதிவெறியர்களின் கொட்டத்தை ஒடுக்குவதற்கும், எம்மதத்தவராயினும் அனைவரும் ஒன்றுபடுவதற்கும், இன ஒடுக்குமுறையாளர்களைத் தோற்கடிப்பதற்கும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் அரைச் சுதந்திரத்தையும் ஏகாதிபத்தியவாதிகளிடம் அடகு வைப்பதற்காக முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்க
துரோகிகளின் ஈனச் செயல்களை முறியடிப்பதற்கும் இந்த காவிச் சட்டை கயவர்களைத் தனிமைப்படுத்தி, அவர்கள் முக்காடு போட்டு கொண்டு மூலையில் முடங்கிக்கிடக்கச் செய்வது அவசியமானது. பாரதீய ஜனதாக்கட்சி  எதிர்க்கட்சியாக இருந்தாலும் அல்லது ஆளும் கட்சியாக இருந்தாலும், எப்படி இருந்தாலும் அது ஒரு இந்து மதவெறி பாசிசச் சக்தியாகத்தான் இருக்கும். எனவே பாசிசத்தை எதிர்த்த ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் இலக்கு பாரதீய ஜனதாக் கட்சியும் பிற காவிச்சட்டை அமைப்புகளும் ஆகும்.

பாபர் மசூதி இடித்துத்தள்ளிய பிறகு ஏற்பட்டுள்ள சூழலில் புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயகவாதிகளின் பணி

பாபர் மசூதி இடித்துத்தள்ளிய பிறகு, பாரதீய ஜனதாக் கட்சி தொடர்ந்து தாக்குதல் தந்திரங்களைக் கடைப்பிடித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியும், கட்சியும் தொடர்ந்து தற்காப்பு நிலையில்தான் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தனது சிறுபான்மை ஆட்சியை நடத்துவதற்காக பா.ஜ.க-வுடன் கூடிக்குலாவி வந்தது. புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமூல்படுத்தப் படுவதால் எழும் பிரச்சினைகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்புவதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மதவெறி தூண்டும் செயல்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வந்தது இறுதியாக பாபர் மசூதியை இடித்துத்
தள்ளுவதற்கும் மதக்கலவரங்களை நடத்துவதற்கும் துனைபோனது. காங்கிரஸ் ஆட்சி, காவிச்சட்டை அமைப்புகளுக்கு விட்டுக்கொடுத்து
அவற்றுடன் இணக்கம் காண முயன்று வந்தது. இன்னும் அப்போக்கை காங்கிரஸ் ஆட்சி கைவிடவில்லை. எனினும் பாரதீய ஜனதாக் கட்சி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் காங்கிரஸ் ஆட்சி எதிர் நடவடிக்கைகளை எடுக்கும் படி நிர்ப்பந்திக்கப்படுட்டிருக்கிறது. இப்போது இரு கட்சிகளும் ஏதோ ஒரு கொள்கைப் போராட்டம் நடத்துவதுபோல், ஒரு
தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றன. இவை இரண்டிற்கும் இடையில் நடைபெறும் போராட்டம் எதிர் எதிரான நலன்களைக் கொண்ட வர்க்கங்களுக்கிடையில் நடைபெறும் ஒரு போராட்டமல்ல. ஆட்சி பிடிக்கும் சண்டையே. இவை இரண்டும் ஈருடலும், ஓர் உயிராய் இருப்பவை. சில நேரங்களில் ஊடும். சில நேரங்களில் கூடும். இவை இரண்டுமே ஊடுவதும்
கூடுவதும் இவற்றின் அரசியல் வாழ்வின் வளர்ச்சியின் விதி. இவற்றிற்குள் நடக்கும் சண்டையைக் கண்டு நாம் ஏமாந்து போகக் கூடாது. காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி ஆகிய இரண்டின் லட்சியமும், கொள்கைகளும் ஒன்றுதான். கொடிதான் வெவ்வேறானது; காந்தியார் சொன்ன “இராம இராஜ்ஜியமும்” கோல்வால்கர் சொன்ன “இந்து இராஜ்ஜியமும்”
அடிப்படையில் வெவ்வேறு நோக்கங்களை கொண்டவை அல்ல. இரண்டுமே ஏகாதிபத்திய இராமனின் செருப்பை வைத்துக் கொண்டு நாட்டை ஆளக்கூடியவைதான். இவை இரண்டுமே சிறிது வித்தியாசமான முறைகளைக் கையாண்டு ஒரு பாசிச ஆட்சியை அமைக்க முயல்கின்றன. பா.ஜ.க இந்து மதவெறியைத் தூண்டுவதின் மூலம் பாசிச ஆட்சியை அமைக்க
முயல்கிறது. காங்கிரஸ் தேசிய ஒருமைப்பாடு பேசி பாசிச ஆட்சியை உருவாக்க முயலுகிறது. இரண்டுமே ஒரே வர்க்கம் பெற்றெடுத்த அமைப்புகள் ஆகையால் காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி ஆகிய இரண்டு பாசிச கட்சிகளும் மக்களின் எதிரிகளே.

அ.இ.அ.தி.மு.க-வும், தமிழக ஜெயா ஆட்சியும் நிலைமையைப் பொறுத்து மேற்கூறப்பட்ட இரண்டு பாசிசக் கட்சிகளில் - இரண்டு எதிரிகளில் ஏதாவது ஒன்றுடன் சேர்ந்து செயல்படத் தயாராக இருக்கிறது. ஆகவே ஏதாவது ஒரு முறையில் எதிரிகளின் அணியில்தான் இருக்கும்.

வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவு பெற்ற ஆட்சியை அமைத்தது. உலக வங்கி, மற்றும் சர்வதேச நிதியத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு நாட்டை அடகுவைக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அமூல்ப்படுத்த முயன்றது. அது ஆட்சி செய்தபோது காங்கிரஸ் கட்சி பின்பற்றிய அதே பாசிச இன ஒடுக்குமுறைக்
கொள்கைகளைக் காசுமீரில் அமூல்ப்படுத்தியது; பஞ்சாபில் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. ஜனநாயகம் பேசினாலும் ஆட்சிக்கு வந்ததும் பாசிசக் கொள்கைகளைத் தொடர்ந்து அமமூல்படுத்தியது. ஒரு ஜனநாயகத் திட்டமின்றி, தனித்தனிப் பிரச்சினைகளின் அடிப்படையில் (issue based politics) அரசியல் நடத்துவது வி.பி.சிங் தலைமையிலான தேசிய
முன்னணியின் வாடிக்கை ஆகிவிட்டது. தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க-வோ ஒரு “அசாதாரண சூழ்நிலைமையை” எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. தேசிய முன்னணி, ஜனநாயகம், சமூக நீதி பேசினாலும், ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற பாசிசக் கொள்கைகளைத் தொடர்ந்து அமூல்படுத்தக் கூடியதே என்பதைக் கடந்த கால அனுபவம் காட்டுகின்றது.

இடதுசாரி முன்னணி - குறிப்பாக ‘மார்க்சிஸ்ட்’ கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பொதுவான ஜனநாயகத் திட்டத்தின் இன்றியமையாத கூறாக மதச்சார்பின்மையைக் கொள்ளாமல், ஒரு பொதுப் பிரச்சினை என்ற பெயரில் மதச்சார்பின்மையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, வர்க்க அடிப்படையற்ற ஐக்கிய முன்னணியை அமைக்கும். செயல்தந்திரத்தை வகுக்கும் முறையைப் பின்பற்றுகின்றது. மதச்சார்பின்மைக்கும்கூட நல்லிணக்கம், மனிதநேயம் என்ற விளக்கமளிப்பதன் மூலம் இந்திய அரசின் மதச்சார்பு, எதேச்சதிகாரத் தன்மையை மூடி மறைத்து விடுகிறது. மதவெறி பாசிசமும், அதற்கு இந்திய அரசாங்கம் துணைபோவதும் எந்த வர்க்கங்களின் நலன்களுக்காக செய்யப்படுகிறது என்பதையும், மதச்சார்பின்மைக்கு
இவ்வாறு விளக்கம் அளிப்பதன் மூலம் மூடி மறைத்து விடுகிறது. அரசியல் அதிகார அமைப்பில் ஒரு ஜனநாயக மாற்றத்திற்கான அரசியல் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமே போராடுவது இடதுசாரி முன்னணியின் கொள்கையாக இருக்கிறது. நரசிம்மராவ் ஆட்சி கவிழாமல் இருக்க அதற்கு மறைமுகமாக முட்டுக் கொடுத்து வருகிறது.

தேசிய முன்னணி - இடதுசாரி முன்னணி ஆகிய இரண்டும் இந்துமதவெறி பாசிச அமைப்புகளுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லி மக்களைத் தம் பக்கம் வென்றெடுக்க முயல்கின்றன. பொதுவாகப் பாசிச சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டோ, அல்லது இத்தருணத்தில் வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் கட்சியுடன் சமரசம் செய்து கொண்டோ ஜனநாயகத்திற்கான போராட்டத்தை சீர்குலைக்க முயல்கின்றன. ஆகையால் ஜனநாயகவாதிகள் இவ்விரு சமரச சக்திகளைத் தனிமைப்படுத்தி மக்களைத் தம் பக்கம்
வென்றெடுக்காமல் காங்கிரஸ், பாரதீய ஜனதா என்ற இரு தலைகளைக் கொண்ட இந்தியப் பாசிசப் பாம்பை நசுக்க முடியாது. எனவே பரந்துபட்ட மக்கள், இவர்களை புறம் தள்ளிவிட்டு புரட்சிகர அமைப்புகளையும் ஜனநாயகவாதிகளையும் ஆதரிப்பது அவசியமாகும்.

பாபர் மசூதியை இடித்துத் தள்ளுதல், மதக்கலவரங்கள் நடத்துதல் போன்ற இந்து மதவெறி பாசிசத்தை எதிர்த்த போராட்டம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்திற்குமான ஒரு போராட்டமாகும். இந்நாட்டில் ஒரு மக்கள் குடியரசை நிறுவாமல் ஒரு மதச்சார்பற்ற அரசை அமைத்துவிட முடியாது. ஆகையால் மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக கோரிக்கைகள் அடங்கிய ஒரு ஜனநாயகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முன்னணியை அமைப்பதின் மூலமாகத்தான் ஒரு ஜனநாயக குடியரசை நிறுவ முடியும். இதனால் ஒரு மதச்சார்பற்ற அரசு தோன்றும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னணியால்தான் இந்து பாசிச அரசியலை எதிர்த்து மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை
ஆதரிப்போர் அனைவரையும் ஓர் அணியில் திரட்டுவது சாத்தியம். இத்தகைய ஒரு முன்னணியும் அதன் அரசியல் செயல் தந்திரமும்தான், அரசியல் சுதந்திரத்தின் அத்தியாவசியமான உட்கூறுகளில் ஒன்றான மதச்சார்பின்மை
என்ற கோரிக்கையை, ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதன் மூலம் வென்றெடுப்பதற்கு உகந்ததாகும். இதுவே இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மா.லெ) வைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகளின் வழியாகும்.

காங்கிரஸ், பாரதீய ஜனதா என்னும் இரட்டைத் தலை பாசிச பாம்பை நசுக்குவதற்கு பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்களின் வழியின் சாராம்சத்தைப் பின்வருமாறு கூறலாம்.

மதச்சார்பற்ற அரசை உருவாக்கவும், மதம் தனி நபரது சொந்த விவகாரமாக ஆக்கிடவும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவிட மக்களை அணிதிரட்ட வேண்டும்.

பாசிசப் போக்கை முறியடிப்பதற்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா எனும் இரட்டைத் தலைகளைக் கொண்ட இந்தியப் பாசிச பாம்பை நசுக்க வேண்டும்.

ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றிவாகை சூட தேசிய முன்னணி மற்றும் இடதுசாரி முன்னணி ஆகிய இரண்டு சமரச சக்திகளைத் தனிமைப்படுத்திட வேண்டும்.

மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைத்திட பாட்டாளி வர்க்க புரட்சிகர அமைப்புகளும் ஜனநாயகவாதிகளும் ஓரணியில் திரள வேண்டும்.

பாசிசப் போக்கை எதிர்த்த ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் புரட்சிகர சக்திகள் மற்றும் ஜனநாயகவாதிகளின் முன்னால் உள்ள பணிகள்:

1. இந்து மதவெறி பாசிசத்தை தோற்கடிக்க மத நிறுவனங்கள் - குறிப்பாக இந்துமத நிறுவனங்களுக்கும் அரசாங்க அதிகார அமைப்புகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகள் அறுக்கப்பட வேண்டும். மதம் தனிநபரது சொந்த விவகாரமாக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட வேண்டும். மதச் சிறுபான்மையினரை - இஸ்லாமிய மக்களை இந்து மதவெறி பாசிசத் தாக்குதலிருந்து பாதுகாப்பளிக்க மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். பாபர் மசூதி இருந்த இடம் இஸ்லாமிய மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பாபர் மசூதியை இடித்துத்தள்ள இந்திய அரசாங்கம் துணை போனதால், அந்த இடத்தில் மசூதியக் கட்டுவதற்கு நட்ட ஈடும், பாதுகாப்பும் அரசாங்கம் தரவேண்டும் எனக் கோருவோம்.

2. “இந்து இராஜ்ஜியம்”, “தேசிய ஒருமைப்பாடு” என்ற மூடுதிரைகளுக்குப் பின்னால் நாட்டின் அரைச் சுதந்திரத்தையும், ஏகாதிபத்தியவாதிகளின் காலடியில் வீழ்த்தும் ஆளும்வர்க்கத் துரோகிகளின் ஈனச் செயல்களை அம்பலப்படுத்த வேண்டும் நாட்டை அடகு வைக்கும் பொருளாதாரக் கொள்கைகள் அமூல்ப்படுத்தப்படுவதால் மக்களுக்கு ஏற்படும்
தீமைகளிலிருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக செய்யப்படும் மதவெறி பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு மக்களைத் திரட்டவேண்டும். பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.

3. உயர்சாதி ஆதிக்கத்திற்கு சேவைசெய்யும் ஆன்மீக அரசியல் ஒடுக்குமுறைக் கருவிகளான “இந்துத்துவத்துக்கும்” ‘இந்து இராஜ்ஜியத்துக்கும்” எதிராகப் பரந்துபட்ட மக்களைத் திரட்ட வேண்டும். இந்துமதம் மற்றும் சாதி முறைக்கு பொருளியல் அடிப்படையாக இருக்கும் நிலப்பிரபுத்துவ அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டுக்கு எதிராக மக்களை - குறிப்பாக விவசாயிகளை திரட்ட வேண்டும்.

மத நிறுவனங்களின் நிலத்தை உழுபவனுக்கு சொந்தமாக்கக் கோருவோம்.

சாதி மற்றும் தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு பரம்பரைத் தொழில் பிரிவினை. அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு முழு நிறைவான ஜனநாயக சீர்திருத்தத்திற்காக மக்களைத் திரட்ட வேண்டும்.

4. ‘இந்து இராஜ்ஜியம்’, “தேசிய ஒருமைப்பாடு” என்ற பெயரால் இனங்களின் சுய நிர்ணய உரிமையின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிப்போம்.

5. கல்வி நிறுவனங்களின் மீது மத அமைப்புகளின் ஆதிக்கத்தை ஒழிக்கக் கோரும் கோரிக்கையை ஆதரிப்போம்.

மத மூடக் கருத்துக்களைக் கல்வி நிறுவனங்களில் போதிப்பதை எதிர்த்துப் போராடுவோம்.

இவை ஜனநாயகவாதிகள் எதிர்கொண்டிருக்கின்ற பணிகள். பலவாகவும், சிறு சிறு அமைப்புகளாகவும் உள்ள பாட்டாளி வர்க்க புரட்சிகர அமைப்புகள் மீதும் பிற ஜனநாயக அமைப்புகள் மீதும் வரலாறு பெரும் பொறுப்பைச் சுமத்தியிருக்கிறது. மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஒரு பாட்டாளி வர்க்க புரட்சிகர அமைப்பு என்ற வகையிலே, இப்பணிகளை நிறைவேற்ற அது தன்னாலான பங்கை ஆற்றுவதற்கு உறுதி கொண்டிருக்கிறது. மற்ற புரட்சிகர ஜனநாயக அமைப்புகளுடன் ஒன்றிணைந்து இப்பொறுப்பை நிறைவேற்ற
அதுமனப்பூர்வமாக விரும்புகிறது. இந்த பாசிசப் போக்குகளை முறியடிப்பதற்கு ஆதரவு தருமாறு அனைத்து மக்களையும் கோருகிறது.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
1993-2013

No comments:

Post a Comment