Friday 7 March 2014

இந்திய அரசே! ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனே அமூல்படுத்து!!



இந்திய அரசே,
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனே அமூல்படுத்து!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

 உச்சநீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், குற்ற விசாரணை சட்டத்தின்படி அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி மாநில அரசே முடிவெடுக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் தமிழக முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி இம்மூவரையும் விடுதலை செய்வதுடன், இவ்வழக்கில் ஏற்கனவே ஆயுள்தண்டனை பெற்றுள்ள நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் இரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்து 7 பேரையும் விடுதலை செய்வது என்று முடிவு எடுத்தது. அது பற்றி மத்திய அரசின் முடிவை 3 நாட்களுக்குள் அறிவிக்கவேண்டும், இல்லையேல் தமிழக அரசு இவர்கள் ஏழுபேரையும் விடுதலை செய்யும் என்று அறிவித்தது.

ஏழு பேர் விடுதலையை எதிர்க்கும் பாசிச காங்கிரஸ், பா.ஜ.க. கும்பல்கள்.

 ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, சோனியா மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சி உச்ச நீதிமன்றத்தின் மூலம் தடைபெற்றுள்ளது. மேலும் முருகன், சாந்தன், பேரறிவாளன் கருணை மனு மீதான காலதாமதத்தை காரணம் காட்டி உச்சநீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்ததை எதிர்த்தும், ஐந்துபேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை கேட்டும் மேல்முறையீடு செய்து ஏழுபேர் விடுதலையை தடுத்து நிறுத்தியுள்ளது.

  மூன்று பேரின் கருணை மனுமீது பதிலளிக்காமல் நியாயமற்ற, விவரிக்க முடியாத, தேவையற்ற காலதாமதத்தின் காரணமாக 23 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்கள். ஒரே குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்தது  போதாது என்று அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்ற சோனியா, மன்மோகன் கும்பல் கொலை வெறியோடு அலைகிறது.     ஏழு பேரையும் சிறைச்சாலையிலேயே உயிரோடு சமாதியாக்க வேண்டும் எனத்துடிக்கிறது.

 காங்கிரஸ் கட்சியின் 7 பேருக்கு எதிரான இந்தக் கொலைவெறி ஈழத்தமிழ் மக்களின் மீதான அதன் கொலைவெறியின் தொடர்ச்சியேயாகும். ராஜபட்சே கும்பல் ஈழத்தமிழினத்தின் மீது நடத்திய இறுதிப் போரில், இனப் படுகொலைக்கு கூட்டாளியாக செயல்பட்டு 1 லட்சம் தமிழர்களை கொன்றொழித்த பிறகும் காங்கிரசின் கொலைவெறி அடங்கவில்லை.

 தனது தந்தை போன்ற முன்னாள் பிரதமருக்கே இந்த நாட்டில் நியாயம் கிடைக்காதபோது, சாதாரண மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என வேதனைபடுகிறார் ராகுல்காந்தி. மன்மோகன் சிங்கோ ராஜீவ் கொலை இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், தீவிரவாதத்தை எதிர்ப்பதில் கட்சி வேறுபாடுகள் கூடாது என்று வாய் திறந்துள்ளார். ஏழு பேர் விடுதலைக் கூடாது என்று பேசுகிறார்.

 ராஜீவ் காந்தியும், காங்கிரஸ்காரர்களும் அகிம்சா மூர்த்திகளல்ல! 

காங்கிரஸ்காரர்கள் மாபெரும் கொலைகாரர்களே. இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய அட்டூழியங்களுக்கு கிடைத்த பரிசுதான் ராஜீவ் கொலை. ராஜீவ் கொலை இந்தியாவின் ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்தியாவின் இலங்கை மீதான விரிவாதிக்கத்திற்கு கிடைத்த பரிசே ஆகும். எனவே ராஜீவ் கொலை ஒரு அரசியல் கொலையாகும். இதற்கு குற்றவியல் சட்ட நடவடிக்கையின் மூலம் தீர்வு காண முடியாது. அரசியல் நடவடிக்கையின் மூலம்தான் தீர்வு காண வேண்டும். அதற்குத் தீர்வு ஈழமக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதே ஆகும். காங்கிரஸ் கட்சி ராஜீவ் கொலையிலிருந்து பாடம் கற்பதற்கு மாறாக சிங்கள இனவெறி அரசோடு கூட்டு சேர்ந்து ஈழத் தமிழின அழிப்புக்குத் துணைபோகிறது.

 ராஜீவ்காந்தி இலங்கை மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தை திணிப்பதற்கும், சிங்கள இனவெறி அரசை பாதுகாக்கவும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரை நசுக்கவுமே இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பினார். சமாதானம் செய்யவதற்கு என்று சொல்லிச் சென்ற இந்திய அமைதிப் படை ஈழத்தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்றொழித்தது. ஈழத்தமிழ்ப் பெண்களை கற்பழித்து படுகொலைசெய்தது.
`தன்னை பலமுறை கற்பழித்த இந்திய அமைதிப்படைக்கு பொறுப்பாளன் என்ற வகையில்தான் தற்கொலைப் படையாய் தனு மாறி ராஜீவ் காந்தியை கொன்றார்` என்று சி.பி.ஐ.(CBI)யே கூறியுள்ளது.
சிங்கள இனவெறி அரசை பாதுகாக்கவே இந்திய அமைதிப்படை போனது. ஆனால் புலிகள் பிரேமதாசாவுடன் ஒப்பந்தம் செய்ததன் விளைவாக இந்தியப் படை வெளியேற வேண்டும் என்று பிரேமதாசா கூறினார். அமைதிப்படை தோற்றோடி வந்தது. இந்திய அரசு தன் மேலாதிக்கத்தின் மீது விழுந்த அடியாக கருதி விடுதலைப் புலிகளை தடைசெய்து பழிவாங்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழர்களை மட்டுமல்ல இந்தியாவில் காஷ்மீர் மக்கள் மீது இராணுவ பயங்கரவாதத்தை ஏவிவிட்டு கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேரை கொன்று புதைத்துள்ளது. பஞ்சாபில் பொற்கோயில் புளூஸ்டார் நடவடிக்கையால் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது டெல்லியில் 5000 சீக்கியர்களை படுகொலை செய்தனர். இவ்வாறு மாபெரும் கொலை காரர்களான காங்கிரஸ்காரர்கள் விடுதலைப் புலிகளை கொலைகாரர்கள் என்று கூறி 7 பேரை விடுதலை செய்யக்கூடாது, அவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவதன் மூலம் அமைதிப்படையின் போர்க் குற்றங்களை மூடிமறைக்கின்றனர்.

 காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சி என்று தன்னை கூறிக்கொள்ளும் பா.ஜ.க.வும் 7 பேர் விடுதலையை எதிர்க்கிறது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண்ஜேட்லி, “ராஜீவ் கொலைவழக்கு கைதிகள் மீது பல்வேறு அமைப்புகளும் கருணையுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பா.ஜ.க. ஏற்கவில்லை. அந்த முடிவுகள் ஏமாற்றம் தருகின்றன. தமிழக அரசின் முடிவுகள் எனக்கு வேதனையை தருகின்றன. அந்த முடிவை மாற்றவேண்டும்” என்று கூறுகிறார்.

 இவ்வாறு காங்கிரசும், பா.ஜ.க.வும் 7 பேர் விடுதலையிலும் இராஜபட்சேவை போர்க்குற்ற விசாரணையிலிருந்து பாதுகாப்பதிலும், ஈழவிடுதலைக்கான பொதுவாக்கெடுப்பை மறுப்பதிலும் ஒரே கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றன. இவ்விரு பாசிசக் கட்சிகளும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன.

பாசிச காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் பாதம் தாங்கிகளாக தமிழகக் கட்சிகள்

 ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி மட்டும்தான் துரோகமிழைத்தது என்று கூறி காங்கிரசை ஒழிக்க பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்வதுதான் தீர்வு என தமிழர் நலன் பேசுகின்ற காகிதப் புலி வைகோ, அரசியல் தரகன் ‘தமிழருவி’ மணியன், பழ.நெடுமாறன் போன்றோர் இந்துத்துவப் பாசிச சக்திகளுக்கு பல்லக்குத் தூக்குகின்றனர். மறுபுறம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகாலம் பங்கு பெற்று ஊழலில் திளைத்து இன அழிப்புப் போருக்கு துணைநின்ற கருணாநிதியோ மீண்டும் காங்கிரசுடன் கரம் கோர்க்க திரைமறைவு வேலைகளை செய்கிறார். இவ்வாறு தமிழர் நலன் பேசும் இக்கட்சிகள் இரு பாசிசக் கட்சிகளுக்கும் பல்லக்குத் தூக்கி ஈழமக்களுக்கும், இந்திய மக்களுக்கும் துரோகமிழைக்கின்றன.

இன அழிப்புப் போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம்
   
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் மீண்டும் மூன்றாவது முறையாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் தீர்மானம் கொண்டுவந்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இலங்கை மீதான மேலாதிக்கத்தை திணிக்கவும், சிங்கள இனவெறி அரசை பாதுகாக்கவும், இராஜபட்சேவை அடிபணியச் செய்யவே இத்தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

 இலங்கை அரசாங்கமே கைவிட்டுவிட்ட 13வது சட்டத்திருத்தம், மாகாண அரசுக்கு அதிகாரம், பத்திரிக்கையாளர்கள் மனித உரிமையாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய விசாரணையும், போர்க்குற்றம் பற்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செயலாளர் தலைமையில் விசாரணை என்றே அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது. இறுதிப் போரில் இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மேற்கண்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை என்றுதான் அந்தத் தீர்மானம் குறிப்பிடுகிறது. இலங்கையில் நடந்தது இன அழிப்புப் போர் குற்றம் என்றோ, அதற்கான சர்வதேச விசாரணை என்றோ அமெரிக்கத் தீர்மானம் குறிப்பிடவில்லை.

 இலங்கையில் இறுதிப் போரில் நடந்தது மனித உரிமைக்கு எதிரான போர்க்குற்றம் மட்டுமல்ல; போருக்கு சம்பந்தமில்லாத மக்கள் மீது நடத்திய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல; அது ஈழத் தமிழினத்தை அழிப்பதற்காக நடத்தப்பட்ட இன அழிப்புப் போர்க்குற்றமாகும். பொதுமக்கள் மீது திட்டமிட்ட முறையில், விரிவான அளவில் தெரிந்தே நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும். ஒரே நாளில் 40,000 ஈழத் தமிழர்களை கொன்றொழித்த இனப் படுகொலையாகும்.

 இறுதிகட்டப் போர் குறித்த ஐ.நா.வின் உள்ளக ஆய்வறிக்கை “இலங்கைப் படையினர் இத்தாக்குதல் வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனவதை நடவடிக்கை” என்றே கூறியது. அண்மையில் ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடந்தது இனப் படுகொலையே என்று தீர்ப்பளித்துள்ளது. இனப் படுகொலை நடந்த நாடுகளில் ஒடுக்குதலுக்கு உள்ளான ஒரு இனம் தனிநாடு அமைத்து கொள்வது என்ற சர்வதேச விதிகள்தான் ஈழத்தமிழற்கும் பொருந்தும். அதுமட்டுமல்ல இனப் படுகொலைக்குத் துணைநின்ற அமெரிக்கா, பிரிட்டன், இந்திய அரசுகளை போர்க் குற்றத்தின் கீழ் நிறுத்தவும் முடியும்.

 எனவேதான் அமெரிக்கா பிரிட்டன் இந்தியா போன்ற நாடுகள் தங்களின் போர்க் குற்றங்களை மூடிமறைப்பதற்காகத்தான் இன அழிப்புப் போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை கோருவதை மறுக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தங்களது போர்க் குற்றங்களை மூடிமறைக்கின்றன. இந்திய அரசு 7 பேரை விடுதலை செய்ய மறுப்பதன் மூலம் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்வதோடு அந்த அமைப்பை தடைசெய்வதை நியாயப்படுத்து கிறது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல!

விடுதலைப் புலிகள் அமைப்பையும் சிங்கள அரசையும் ஒரே தட்டில் வைத்து மனித உரிமை மீறல் பற்றிப் பேசுவதன் மூலம், அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை 30 நாடுகளில் தடைசெய்ததன் மூலம் சிங்கள இனவெறி அரசை பாதுகாக்கிறது. இந்திய அரசும் ராஜீவ் படுகொலையை காட்டியே அந்த அமைப்பின் மீதான தடையை நியாயப்படுத்துகிறது. ஆனால் அண்மையில் இத்தாலியின் உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல அது விடுதலை போராளி அமைப்பு என்று தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே நெதர்லாந்து விடுதலைப் புலிகள் அமைப்பை போராளி அமைப்பு என்றே ஆதரிக்கின்றனர். இத்தாலி நாட்டுக்காரி சோனியாவின் பாசிச காங்கிரசும், இந்துத்துவப் பாசிச பா.ஜ.க.வும் 7 பேர் விடுதலையை ஆதரிக்காமல், விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்படுவார்களேயானால் அவர்களுக்கு தமிழ் மக்கள் தக்கப் பாடத்தை புகட்டுவார்கள். `காங்கிரஸ்காரர்களே! திருந்துங்கள் இல்லையேல் காணாமல் போவீர்கள்` என தமிழ் மக்கள் எச்சரிக்கின்றனர்.

7 பேர் விடுதலைக்கான தமிழக அரசின் முடிவை அமூல்படுத்தப் போராடுவோம்!
 
தமிழகத்தை ஆளும் “ஜெயா” அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து 7 பேரை விடுதலை செய்வது என்ற எடுத்த முடிவு வரவேற்கத்தக்கதாகும். அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில்  தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்ற அக்கட்சியின் நிலைப்பாடும் வரவேற்கத்தக்கதேயாகும். ஆனால் இந்நிலைபாடுகளையெல்லாம் அம்மையார் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளக் கூடியவர்தான் என்பதை கணக்கில் கொண்டுதான் செயல்படவேண்டும். அண்மையில் நளினியின் பரோலை சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று கூறி மறுத்ததை மறந்துவிடமுடியாது. வரும் நடாளுமன்றத் தேர்தலில்` நாற்பதும் நமதே` என்று கூறி தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை பயன்படுத்திக்கொள்ளவே ஜெயலலிதா இவ்வாறு முடிவெடுத்துள்ளார். எனவே மக்களின் எழுச்சிதான் அரசாங்கத்தின் நிலையை மாற்றும் என்பதை புரிந்துகொண்டு தொடர்ந்து மக்கள் எழுச்சியை தொடரவேண்டும். எனவே ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற ஏழுபேரையும் விடுவிக்கவும், ஈழத் தமிழரின் விடுதலைப் போருக்கு ஆதரவாக கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம் என அனைத்து புரட்சிகர ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்.

*  7 பேரின் விடுதலைக்கு எதிராகச் சதி செய்யும் பாசிச காங்கிரஸ், பா.ஜ.க. கும்பல்களை முறியடிப்போம்!

 * ஈழத்தமிழருக்கு எதிரான பாசிச கும்பல்களுக்குத் துணைபோகும் தமிழ்த்தேசியம் பேசுவோரின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்!

 * ஈழ விடுதலைக்கு ஆதரவாக புரட்சிகர, ஜனநாயகச் சக்திகள் ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு         மார்ச் 2014

No comments:

Post a Comment