Monday 21 November 2016

மோடியின் `கறுப்புப் பண ஒழிப்பு`- முகத்திரை கிழிக்கும் கழகம்.

 
மோடி அரசே! மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் - 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்துச் செய்!!
 
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
 
மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. மோடி அரசு அமல்படுத்தி வரும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தொழிற்துறை உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி மந்தம், விவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு, வேலையின்மை பெருக்கம், விலைவாசி உயர்வு போன்ற எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாமல் திண்டாடுகிறது. கறுப்புப் பணத்தை மீட்பதாக கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மோடி ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
மோடி ஆட்சிமீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்திகளை திசைதிருப்பவும், உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலில் வெற்றிப் பெற்று தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் திடீரென்று கறுப்புப் பண ஒழிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதையும் எதேச்சாதிகாரமான முறையில் வெளியிட்டுள்ளது.
 
மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நாடகம்
 
500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் ஊழல், வறுமை, கறுப்பு பணத்தை ஒழிப்பதுடன் பயங்கரவாதத்தையும் ஒழிக்கப் போவதாக சவடால் விடுகிறார் மோடி. ஆனால், மோடியின் இந்த அறிவிப்பால் கறுப்பு பணத்தை ஒழிக்கமுடியாது. மொத்த கறுப்புப் பணத்தில் 5லிருந்து 6 சதவீதம் வரைதான் பணமாக உள்ளது. இந்த அறிவிப்பால் கறுப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது. மேலும் இந்த அறிவிப்பே ஒரு மாபெரும் ஊழல் என்றும், இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு 10 நாளைக்கு முன்பே அம்பானி, அதானி போன்ற மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கும், பி.ஜே.பி.-யினருக்கும் தகவல்களை தெரிவித்து கறுப்புப் பண திமிங்கிலங்களை காப்பாற்றிவிட்டார் மோடி என்றும் குற்றம் சுமத்தியுள்ளார் டெல்லி முதல்வர் கேஜரிவால். மேலும், பணம் 500, 1000 ரூபாயாக இருப்பதைவிட வெளிநாடுகளில் சொத்துக்களாக குவிந்துள்ளதே அதிகமாகும். பனாமா பேப்பர்ஸ் மூலம் கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டியல் மத்திய அரசிடம் உள்ளது. அதேபோல சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் 120 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் இருப்பதாக கணக்கிட்டுள்ளன. இவற்றை மீட்டு கொண்டுவராமல் ரூ.500,1000 நோட்டுக்களை செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது. இந்த அறிவிப்பு கறுப்பு பண திமிங்கிலங்களின் அடியையோ முடியையோ கூட அசைக்கவில்லை. மாறாக ஏழை நடுத்தர மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
 
பொருளாதார எமர்ஜென்சி

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் நாட்டின் பணப்புழக்கம் அடியோடு ஸ்தம்பித்துவிட்டது. வங்கி, ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கால்கடுக்க நீண்ட வரிசையில் நின்று மக்கள் வதைப்படுகின்றனர். நெரிசலில் 47 பேர்கள் மரணமடைந்துள்ளனர். மோடியின் ஆட்சியில் ஏ.டி.எம். மரணங்கள் தொடருகின்றன. மேலும் சில்லரை வர்த்தகம், மொத்த வர்த்தகம், சிறு தொழில், சரக்கு போக்குவரத்து, மீன்பிடித் தொழில் என உள்நாட்டுத் தொழில்கள் முடங்கிவிட்டன. உ.பி., ம.பி. போன்ற மாநிலங்களில் மக்களிடம் பணம் இன்றி கடைகளை சூறையாடுகின்றனர். ராஜஸ்தானில் இலட்சக்கணக்கான விவசாயிகள் ராவி பருவ விதைப்பை செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். கோவை திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் முடங்கிவிட்டன. கிராம கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் ஒரு வாரகாலமாக முடங்கியுள்ளன. நான்கு நாளைக்குள் ரூ.1.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சாதாரண நிலைமைக்கு வர பல வாரங்கள் ஆகும் என நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறுகிறார். மக்களின் துயரம் தொடர்கிறது. மோடியின் அறிவிப்பு நாட்டு மக்கள் மீது ஒரு பொருளாதார எமர்ஜென்சியை திணித்துள்ளது.
 
500, 1000 என்ற அதிக மதிப்புள்ள நோட்டுகளை ஒழித்துவிட்டால் கறுப்புப் பணத்தை ஒழித்துவிடலாம் என்று மோடி கூறுகிறார். ஆனால் புதிதாக 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டு கறுப்பு பண பதுக்கலுக்கு வழிவகுத்து கொடுக்கிறார். மீண்டும் 1000 ருபாய் நோட்டை கொண்டுவருவோம் என்றும் அறிவித்துள்ளார். மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது மூலம் ரூ.400 கோடிதான் அரசுக்குக் கிடைக்கும். ஆனால் புதிய நோட்டுக்களை அச்சடித்து சுற்றுக்குவிட அரசுக்கு மொத்தம் ரூ.14,000 கோடி செலவழியும். பின்னர் எதற்காக ஏழைகளை வாட்டிவதைக்கும் இந்த 500, 1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு. மலையை கெல்லி எலியைக் கூட பிடிக்காமல் நாட்டில் கிலியை ஏற்படுத்தியுள்ளார் மோடி. எனவேதான் கறுப்புப் பணத்தை காப்பாற்றும், ஏழை நடுத்தர மக்களை வதைக்கும் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்.
 
கறுப்புப் பணத்தை கைப்பற்ற வழி என்ன?
 
கறுப்புப் பணம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய வணிகவரி, சேவை வரி, வருமான வரி, கலால் வரி, சுங்கக் கட்டணம் போன்ற வரிகளை முறைப்படி அரசுக்கு செலுத்தாமல் வரி ஏய்ப்பு மூலம் ஒருவர் ஈட்டிய பணத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கிவைக்கும் பணமாகும்.
 
உள்நாட்டில் கறுப்புப் பணம்
 
அமைச்சர்கள், அதிகாரிகள், சாராய கம்பெனி முதலாளிகள், தொழிலதிபர்கள், மணல்-கிரானைட் மாஃபியாக்கள் ஆகியோரே கறுப்புப் பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள். மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் பல ஆயிரம் கோடிகளை நேரடியாக அமைச்சர்கள்தான் கையாள்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து ஒரு பகுதியை சுருட்டிக்கொள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அரசு உயர் அதிகாரிகள் துணைபோகிறார்கள்.. அவர்கள் தங்கள் பங்குக்கு சில கோடிகளை லஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள்.

 
இப்படி பொதுத்திட்டங்கள் மூலமாக இவர்கள் அடிக்கும் ஊழல் பணம் ஒரு பக்கம் இருக்க, கல்வி நிலையங்கள் மாணவர் சேர்க்கைக்கு வாங்கும் பல லட்சங்களும் கறுப்புப் பணமாகவே சேர்கிறது. மேலும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு மூலம் கணக்கில் காட்டாமல் பல ஆயிரம் கோடிகளை பதுக்குகிறார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பதுக்குவதுதான் பல லட்சம் கோடிகளாக வளர்ந்நு நிற்கிறது.
 
வெளிநாட்டில் குவிந்துள்ள கறுப்பு பணம்
 
கறுப்புப் பண பதுக்கலுக்கு சொர்க்கபுரியாக திகழும் சுவிஸ் வங்கி, உலக நாடுகளின் வற்புறுத்தலுக்குப் பின் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள் மட்டுமே 1500 மில்லியன் டாலர் கறுப்பு பணத்தை அங்கே டெபாசிட் செய்துள்ளதாக கூறுகிறது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் கோடி. சுவிஸ் வங்கியில் பதுக்கிவைத்திருக்கும் நபர்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் டாப் இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. அவர் கொடுத்த ஆதாரங்களின் படி 1970களிலிருந்தே இந்தியர்கள் பங்கு சந்தை மூலமாகவும், போதைப் பொருட்கள் மூலமாகவும், அறக்கட்டளை மூலமாகவும், போலி திட்டங்கள் மூலமாகவும் கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் டெபாசிட் வைக்கத் தொடங்கியுள்ளனர். சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தில் மற்ற நாடுகளின் மொத்த கறுப்பு பணத்தைவிட இந்தியாவின் கறுப்புப் பணம் அதிகம். மொத்தம் 2000 இந்தியர்களின் பெயர்களில் கறுப்புப் பணம் அங்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் டாப் லிஸ்ட் பெயர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
 
புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு கார்ப்பரேட் நிறுனவங்கள் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி புதிய ரூட்டில் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கின்றன. பொய்யான வரவு செலவு கணக்குகளைக் காட்டி ஹவாலா வர்த்தகத்தின் மூலம் அவற்றை வெளிநாட்டில் பதுக்குவது; மூலப் பொருட்களின் விலைகளை அதிகரித்துக் காட்டுவது; அதிகபட்ச செலவு செய்ததாக கணக்கு காட்டுவது; உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான சம்பளம் வழங்குவது; காண்டிராக்ட் முறையில் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி கொடுப்பது, போனஸ் தர மறுப்பது போன்ற உழைப்புச் சுரண்டல் மூலமும்; 2ஜி அலைக்கற்றை 1.76 லட்சம் கோடி, காமன்வெல்த் விளையாட்டு 70 ஆயிரம் கோடி, ஸ்டாம்ப் ஊழல் 20 ஆயிரம் கோடி, சத்தியம் ஊழல் 14 ஆயிரம் கோடி, கால்நடை தீவன ஊழல் 900 கோடி போன்ற மாபெரும் ஊழல் பணமும் வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ளன. அப்படிப் பார்க்கும் போது உலக அரங்கில் இந்தியா வாங்கியிருக்கும் கடனை விட இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் பல மடங்கு அதிகம். அதை கைப்பற்றினாலே அந்நியக் கடன் ஒழியும். இந்தியா பூலோக சொர்க்கமாக மாறும். (தகவல் ஜூனியர் விகடன்).
 

கறுப்புப் பண காவலன் மோடி
 
பாராளுமன்ற தேர்தலின்போது வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை கைப்பற்றி வீட்டுக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்று மோடி வாக்குறுதியளிதார். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு காங்கிரஸ் கட்சியை போலவே கறுப்பு பணத்தை கைப்பற்ற மறுக்கிறார். சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப்பண தகவல்கள், பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் அரசுக்குக் கிடைத்தும் அவற்றைக் கொண்டு கறுப்புப் பணத்தை மீட்க எந்த நடவடிக்கையும் மோடி அரசு எடுக்கவில்லை. எந்த ஒரு நிபந்தனையும் இன்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை ஜெர்மனி கொடுக்கத் தயாராக இருந்தும் அந்தப் பட்டியலை பெற மோடி அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பா.ஜ.க-வை சேர்ந்த ராம்ஜேத் மலானி எம்.பி.யே குற்றம் சுமத்துகிறார். இவ்வாறு கறுப்பு பண திமிங்கிலங்களுக்கு காவல் இருக்கும் மோடி தன் உயிர் போனாலும் கறுப்பு பணத்தை ஒழிப்பேன் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். மோடி தியாகி வேடம் போடுவது நாட்டுமக்களை ஏமாற்றத்தான். அத்துடன் மக்களின் எதிர்ப்புகள், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புகளுக்குப் பின்பு கூட தனது அறிவிப்பை திரும்பப் பெற மோடி தயாரில்லை. மாறாக எதேச்சதிகார பாதையில் எமர்ஜென்சியை நோக்கி நாட்டை தள்ளுகிறார்.
 
கறுப்புப் பணத்தை ஒழிக்க வழி
 
கறுப்புப் பணத்தை கைப்பற்ற வேண்டுமானால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளும், தரகுமுதலாளித்துவ அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் குவித்து வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டு அவற்றைக் கைப்பற்ற வேண்டும்.
 
மாபெரும் ஊழலுக்கும், பதுக்கலுக்கும் காரணமான புதிய தாராளக் கொள்கைகளை ஒழிக்க வேண்டும். அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை கைப்பற்றுவது சுலபமல்ல. மாறாக அவர்களின் சொத்துக்களை கைப்பற்றி அரசுடைமை ஆக்குவது ஒன்றுதான் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான ஒரே வழியாகும்.
 
அதனை இன்றைய இந்திய அரசும், அரசமைப்பு முறையும் ஒருகாலும் செயல்படுத்தாது. புரட்சியின் மூலம் அமையும் புதிய ஜனநாயக அரசுதான் அதனை சாதிக்கும்.
 
எனவே புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், கறுப்புப்பண திமிங்கிலங்களின் சொத்துக்களை கைப்பற்றி அரசுடைமையாக்கவும், கறுப்புப்பண காவலன் மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்றவும் கோருகின்ற அனைவரும் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.
 

*மோடி அரசே! மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் - 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!
 
* சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கிவைத்துள்ள முதலாளிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடு! அவர்களின் உடைமைகளை அரசுடைமையாக்கு!
 
* உள்நாட்டில், பங்குச்சந்தைச் சூதாடிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், தரகு முதலாளித்துவ அரசியல் வாதிகள், அதிகாரிகளின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்று!
 
* கறுப்புப் பணக் காவலன் மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்றுவோம்!
 
* எமர்ஜென்சி ஆட்சியைக் கொண்டுவர முயலும் மோடி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!
 

 

No comments:

Post a Comment