Saturday 19 August 2017

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பச்சியப்பன் நினைவேந்தல் கூட்டம்

 
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பச்சியப்பன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம்
 
20-08-2017 திங்கள் - மாலை 5:00 மணி
 பாலக்கோடு பேருந்துநிலையம் - தருமபுரி.
 
தலைமை : தோழர் மாயக்கண்ணன், தருமபுரி மாவட்ட அமைப்பாளர்.
வரவேற்புரை : தோழர் சின்னயன், ம.ஜ.இ.க பாலக்கோடு
 படத்திறப்பு : தோழர் பழனி - ம.ஜ.இ.க தருமபுரி.
 
உரையாற்றுவோர்
 
 தோழர் மனோகரன் ம.ஜ.இ.க சென்னை
 தோழர் பெரியண்ணன் ம.ஜ.இ.க தருமபுரி
 தோழர் சோமு சேலம் மாவட்ட அமைப்பாளர்
 தோழர் குணாளன் வேலூர் மாவட்ட அமைப்பாளர்
 தோழர் சண்முகம் கடலூர் மாவட்ட அமைப்பாளர்
 தோழர் இரணதீபன் தஞ்சை மாவட்ட அமைப்பாளர்.
தோழர் வெள்ளைச்சாமி திண்டுக்கல் - ம.ஜ.இ.க
 தோழர் பூபதி ம.ஜ.இ.க கோவை
 தோழர் ஞானம் மாநில அமைப்பாளர் 
 
நன்றியுரை
 
 தோழர் தேன்பழனி ம.ஜ.இ.க பாலக்கோடு.
 (மக்கள் கலைமன்ற கலைநிகழ்ச்சி நடைபெறும்)
அனைவரும் வருக! அஞ்சலி நல்குக!
 
 
 
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பச்சியப்பன் அவர்களுக்கு வீரவணக்கம்!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

க்சல்பாரி புரட்சி இயக்கத்தின் முன்னணித் தோழரும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் செயல்வீரருமான தோழர் பச்சியப்பன் அவர்கள் 2017 ஜீன் 9ஆம் நாள் மாரடைப்பால் காலமானார். நாட்டின் விடுதலைக்காகவும் மக்களின் ஜனநாயகத்திற்காகவும் கர்ஜனை புரிந்துவந்த கம்பீரக் குரல் ஓய்ந்துவிட்டது. ஓய்வறியாத சூரியன் மறைந்துவிட்டது. இந்தியப் புரட்சி இயக்கம் ஒரு முன்னணிப் போராளியை இழந்துவிட்டது.

“எல்லோரும் இறக்கவேண்டியவர்கள்தான். ஆனால் இறப்பு என்பது அதன் முக்கியத்துவத்தில் வேறுபட்டது. மக்களின் நலன்களுக்காக மரணமடைவது இமயமலையைவிட கனமானது. ஆனால் பாசிஸ்ட்டுகளுக்காக உழைத்து, சுரண்டுவோருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்காகவும் இறப்பது இறகைவிட லேசானதாகும்.” என்கிற மாவோவின் கூற்றுக்கு இணங்க, மக்களுக்காக வாழ்ந்து மடிந்தவர் தோழர் பச்சியப்பன். ஆம், தோழர் பச்சியப்பன் அவர்களின் மரணம் இமயமலையைவிட கனமானது!.

நக்சல்பாரி புரட்சி இயக்கத்தின் வழிகாட்டுதலில், தருமபுரி மண்ணில் களமாடிய தோழர் பாலன் அவர்களின் புரட்சிகர அரசியல் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் தோழர் பச்சியப்பன். புரட்சிகர இயக்கத்தை ஒழித்துக்கட்ட எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழக அரசு நரவேட்டை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், பாலக்கோடு-சீரியம்பட்டியில் தோழர் பாலன் உரையாற்றவிருந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் தோழர் பச்சியப்பன். தோழர் பாலன் காவல்துறைக் கயவாளிகளால் அடித்துக் கொல்லப்பட்டு தியாகியாகிறார். அடக்குமுறை தாண்டவமாகிறது. தோழர் பச்சியப்பன் அவர்களும் கடும் அடக்குமுறைக்கு உள்ளாகிறார். அரசின் அடக்குமுறை என்ற உலைக்களத்தில் பச்சியப்பன் என்கிற உருக்குவாள் உறுதியேற்றப்படுகிறது. தோழர் பாலனின் ரத்தத்தில் நனைந்த கொடியை கையிலேந்தி, அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சிங்கமாக அன்று தொடங்கிய தோழர் பச்சியப்பன் அவர்களின் புரட்சிப் பணி அவர் தன் இறுதிமூச்சை நிறுத்திக்கொண்ட நேரம்வரை தொடர்ந்தது.

பள்ளி சென்று முறையாக கல்வி கற்க வாய்பில்லாத, சிறுவிவசாயக் குடும்பத்து இளைஞனாக இருந்தபோது இயக்கத்தில் ஈடுபட்ட தோழர் பச்சியப்பன், தன் கேள்வி ஞானத்தை விசாலப்படுத்திக் கொண்டு, தோழர்கள் முன்வைக்கும் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலை கூர்ந்து கவனித்து உள்வாங்கி, அப்படி உள்வாங்கிய அரசியலின் அடிப்படைகளில் ஊன்றிநின்று, அந்தப் புரட்சிகர அரசியலை தனது மக்கள் மொழியில் எங்கேயும் எப்போதும் இடையறாது பிரச்சாரம் செய்தவர் தோழர் பச்சியப்பன்.

தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் உறுதி, தலைமை மீது அசைக்கமுடியாத விசுவாசம், முன்முயற்சியுடன் கூடிய செயல்பாடு என அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடன், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் முன்நின்று போராடியவர் தோழர் பச்சியப்பன். பாசிச எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான போராட்டங்கள், தமிழை ஆட்சிமொழி ஆக்குவதற்கான போராட்டங்கள், தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள், சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள, விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் என எண்ணிலடங்கா போராட்டங்களில் முதன்மைப் பங்காற்றியவர். அடக்குமுறைகளுக்கு அஞ்சாது உறுதியாக நின்று போராடியவர். கருணாநிதியின் கபடநாடகமான ‘செம்மொழி மாநாட்டை’ அம்பலப்படுத்தி போராட்டம் நடத்தி, கைதாகி காவல் நிலையத்தில்.கடும் சித்தரவதைகளுக்கு ஆளானபோதும் கொண்ட கொள்கையில்உறுதியாக நின்று மக்களுக்காக தொடர்ந்து தெண்டாற்றியவர் தோழர் பச்சியப்பன்.

“கம்யூனிஸ்ட் என்பவர் விசால உள்ளம் படைத்தவராக இருக்கவேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்கவேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர்போல் கருதவேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன்களுக்குக் கீழ்படுத்தவேண்டும். எங்கும் எப்போதும் அவர் சரியான கோட்பாட்டின் வழி ஒழுகி, தவறான கருத்துக்கள், செயல்கள் எல்லாவற்றிற்கும் எதிராக சளையாத போராட்டம் நடத்தவேண்டும்.” என்கிற மாவோவின் கூற்றுக்கு இணங்க தவறான கருத்துக்களுக்கு எதிராக - கலைப்புவாத நிலைகளுக்கு எதிராக சமரசமின்றி, சலியாது போராடியவர் தோழர் பச்சியப்பன்.

ம.ஜ.இ.க.வின் புரட்சிகர அரசியல் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி, இயக்கம் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்க ஆயத்தம் ஆன நிலையில் 2004ஆம் ஆண்டுகளில் கோடாரி காம்புகளாக சில புல்லுருவிகள், மார்க்சியத்தோடு பெரியாரிய, அம்பேத்காரிய கருத்துகளை கலப்பது என்கிற கலைப்புவாத நோக்கத்தில் “அகிலம் புத்தகக்கடை” வடிவில் சித்தாந்தக் கலைப்புவாதம் மா-லெ புரட்சி இயக்கத்தில் நுழைய முயன்றபோது, கலைப்புவாதத்திற்கு எதிரான அணிகளின் கலகத்தில்-அமைப்பை காப்பாற்றும் அரிய போராட்டத்தில் முன்நின்றவர் தோழர் பச்சியப்பன்.

“பாதகம் செய்பவரைக் கண்டால்
 பயங்கொள்ளலாகாது பாப்பா
 மோதிமிதித்துவிடு பாப்பா -அவர்
 முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.”

என்கிற பாரதியின் சீற்ற வரிகளுக்குச் செயல்வடிவம் தந்தவர் சீரியம்பட்டித் தோழர் பச்சியப்பன். கலைப்புவாதம், பிழைப்புவாதம், பாலியல் பண்பாட்டுச் சீரழிவு போன்ற புற்று நோய்களுக்கு எதிராக அயராது போராடி அமைப்பைக் காப்பாற்றியவர் தோழர் பச்சியப்பன்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதை அறிந்தும், அதுகுறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல், எப்படியும் சாகப்போகிறோம், இருக்கும் குறுகிய காலத்திற்குள் அதிகபட்சமான அரசியல் பணிகளை ஆற்றவேண்டுமென்ற திடசித்தத்தோடு, முன்னிலும் வேகமாய் புரட்சிப் பணியாற்றியவர் தோழர் பச்சியப்பன்.அவரது அந்த செம்மாந்த உழைப்பின் வெற்றி-2017 மே நாளில் பாலக்கோட்டில் நடைபெற்ற மே நாள் பேரணி, பொதுக்கூட்டம்!. ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திற்கு எதிராக, இந்துத்துவப் பாசிசத்திற்கு எதிராக ம.ஜ.இ.க. முன்வைத்த அரசியலை பாலக்கோடு நகரத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் பிரச்சாரம் செய்து, உழைக்கும் மக்களையும் சிறுபான்மை இஸ்லாமியப் பெருமக்களையும் பெருவாரியாகத் திரட்டியதில் தோழர் பச்சியப்பன் அவர்களின் பங்கு மகத்தானது.

மார்க்சியம் - லெனினிய அரசியலை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதில் மட்டுமல்ல, தனது சொந்த வாழ்விலும் கம்யூனிச ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தவர். தன் குடும்பம் முழுவதையும் புரட்சிகர அரசியலில் ஈடுபடவைத்தவர். சாதி தீண்டாமையையும், மத சடங்குகளையும் புறந்தள்ளியவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற கோட்பாட்டில் உறுதியாக நின்று போராடியவர்.

நார்மன் பெத்யுன் குறித்த தோழர் மாவோவின் மதிப்பீடு, தோழர் பச்சியப்பனுக்கும் பொருந்தும்.

 “தோழர் பெத்யுன் அவர்களின் உணர்வு, தன்னைப்பற்றிய சிந்தனை ஒன்றும் இன்றி, பிறருக்கான அவருடைய பரிபூரணத் தியாகம், தமது வேலையில் அவர் கொண்டிருந்த எல்லையற்ற பொறுப்புணர்சியிலும், தோழர்களின் மீதும் மக்களின் மீதும் அவர் வைத்திருந்த எல்லையற்ற இதய ஆர்வத்திலும் காணப்பட்டது. ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எள் அளவும் சுயநலமற்ற உணர்வை நாம் எல்லோரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உணர்வைக்கொண்டு ஒவ்வொருவரும் மக்களுக்குப் பயனுள்ளவர்களாக வாழமுடியும். ஒருவருடைய திறமை பெரிதாக அல்லது சிறிதாக இருக்கலாம். ஆனால் அந்த உணர்வு ஒருவருக்கு இருந்தால், அவர் உன்னத சிந்தையும் தூய்மையும் உடையவராக, ஆத்மபலமுடைய, கொச்சை நப்பாசைகளைக் கடந்த ஒரு மனிதனாக-மக்களுக்குப் பயனுள்ள ஒரு மனிதனாக இருப்பர்.”

தோழர் பச்சியப்பன் அவர்களிடமிருந்து பாடம் கற்போம்!.
மக்களுக்காக வாழ்ந்து மடிந்த அவரது தியாகத்தைப் போற்றுவோம். இறுதிமூச்சு இருந்தவரை அவர் ஊன்றிநின்ற மார்க்சிய - லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தை வளர்த்தெடுப்போம்!
புதியகாலனி ஆதிக்கத்தையும் இந்துத்துவப் பாசிசத்தையும் வீழ்த்திட, மக்கள் ஜனநாயக அரசமைத்திட தோழர் பச்சியப்பன் பெயரால் சூளுரைப்போம்.
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு.
 
ஆகஸ்ட்                                                                                                                      2017

No comments:

Post a Comment